வெள்ளி, 29 ஏப்ரல், 2011

எவன் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன ???

 எவன் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்றிருப்பவர்களைப் பார்த்தே பழகிப்போன நமக்கு,பேரழிவுகளில் பாதிக்கப்பட்டு,வீடு,வாசல்,உறவு எல்லாம் இழந்த பின்னும் ஜப்பான் மக்களின் மனிதாபிமானத்தன்மையை பார்க்கும் போது நெகிழ்ச்சியாகவும்,ஆச்சரியமாகவும் உள்ளது.
கடையில் தண்ணீர் வாங்கச் செல்கிறார் ஒருவர்..அடுத்து தண்ணீர் எப்போது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரியாது! கடையில் மொத்தம் 4 தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே!...அப்...பாடி! கிடைத்ததே என அவர் நான்கு தண்ணீர் பாட்டில்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போகாமல் 'இன்று இன்னும் ஒருவர்க்கு இந்த பாட்டில்கள் தாகம் தீர்க்க உதவட்டும்...ஒருவேளை எனக்கு நாளைக்கு தண்ணீர் கிடைக்கலாம் அல்லவா?' என்கிறார் தனக்கு பின்னால் வரப் போகும் யாரோ ஒருவருக்காக...என்ன ஒரு சமூக அக்கறை..!
குறிப்பாக அடித்துப் பிடித்துக் கொண்டு மேலே விழாமல் எங்கேயும் பொறுமையோடும்,நம்பிக்கையோடும் வரிசையில் நிற்கும் அந்த அமைதி,அந்த மன உறுதி...!
சின்ன பதட்டம் வந்தாலே...போராட்டம்,பஸ்கள் கடைகளை நொறுக்குவது என்றே செய்திகளைப் பார்த்து பழகிப்போன நம் கண்களுக்கு வித்தியாசமான செய்தியாக இருக்கிறது அவர்களது அமைதியும் உறுதியும்!
இத்தனை பாதிப்புகளிலும், பதட்டத்திலும் அங்கே ஒரு கடைகள் கூட கொள்ளையடிக்கபடவில்லை என்கின்றன செய்திகள்.
பசியோடும், தேவைகளோடும் மக்கள் கடைகளில் நின்று கொண்டு இருக்கிறார்கள். திடீரென    மின்சாரம் போகிறது. மக்கள் அப்படியே தாங்கள்  எடுத்த பொருட்களை கடையிலேயே வைத்து விட்டு அங்கிருந்து வெளியே வருகிறார்கள்!...மக்களுக்கு எத்தனை மனப் பக்குவமும், எதனை சமூகப் பொறுப்புணர்வும் இருந்தால் அது சாத்தியப்படும்?...
அதே போல சோகம் தாங்காமல் அழுது கதறும் எந்த ஜப்பானியரையும்  செய்திகளில் காண முடியவில்லை...'நடந்தது இயற்கையின் பேரழிவு...நடந்தது நடந்து முடிந்துவிட்டது ....இந்தப் பாதிப்பை நான் தாங்கியே ஆக வேண்டும்!...இதிலிருந்து நான் சீக்கிரமே மீள வேண்டும்!' என்ற மன உறுதியும் மனப் பக்குவமும் அதனை பேரிடமும் இருந்ததைக் காண முடிகிறது.
நம் மண்ணிலும் இது சாத்தியமா?...வருங்கால சந்ததிகளை உருவாக்கும் நாம் இதை உணர்ந்தால் நிச்சயம் அடுத்த தலை முறையிலாவது இது சாத்தியமாகும்!