வியாழன், 23 டிசம்பர், 2010

மோதி மிதித்து விடு பாப்பா....

போரில் வென்ற அரசன், தோற்ற மன்னனின் நகருக்குள் நுழைந்ததும் முதலில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதுதான் சங்க காலம் தொட்டு நமது சரித்திரம். எந்த இனத்தின் மீது பகை வந்தாலும் முதலில் 'டார்கெட்' அந்த இனத்தின் அபலைப் பெண்கள் தான் என்பது கால காலமாக இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கும் அவமானம். தேசப் பிரிவினையின் போது கொல்லப்பட்டவர்களை விட, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விவரம்.
ஹோட்டல்களில், தியேட்டரில், பஸ்,ரயில், பயணங்களில், அலுவலக லிப்டில், கூட்டமான கடைகளில்...சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேலே ஊறும் ஆண் விரல்கள், காதில் மோதும் ஆபாச கமெண்டுகள், அஜய் சக்ரவர்த்தி மாதிரி, ஓநாய் மாதிரி வெளிப்படையான அழைப்புகள்...இவற்றை சந்திக்காத பெண் இருக்க முடியுமா?  
பெரும்பாலும், பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்த்து நிற்பதற்கு பெண் தயாராக இருப்பதில்லை என்பதே உண்மை. சம்பவம் நடந்த உடனே மனசுக்குள் மிகவும் குன்றித்தான் போகிறாள். ' யாராவது கவனிச்சாங்களா' என்று பார்க்கிறாள். கால்கள் நகர மறுக்கின்றன. 'அடுத்து என்ன செய்யப் போகிறான்?' என்ற பயம் போர்வை போல் கவிழ்கிறது. சிலமணி நேரங்களில் இருந்து, சில நாட்கள் வரை அச்சம்பவத்தின் தாக்கம் அவளுள் இருக்கிறது.
அவன் அருகில் வந்த போதே உஷாராகி சத்தம் போட, கூட்டம் சூழ்ந்து அவனை உதைக்கிறது...இல்லை...கையிலிருந்த மிளகாய்த் தூளை அவன் முகத்தில் அடிக்க, எரிச்சலில் கதறித் துடிக்கிறான்  அந்தக் கயவன்....இல்லையில்லை...கராத்தே கற்றிருந்த அவளின் கையால் ஒரு வெட்டு வெட்ட அலறிச் சாய்கிறான் அந்த அயோக்கியன்....இவை எல்லாம் கானல் நீர் கற்பனைகள்.
ஆனால் நிஜத்தில் நடப்பது  வேறு. மெளனமாக சகித்துக் கொள்வதே கசப்பான உண்மை.
அதே போல் விஷயம் வேறு விதமாகவும் விமர்சனம் செய்யப் படுவது நமக்குத் தெரியாதது இல்லை. 'பிரச்சினையே பெண்களின் உடைகளால்தான்' என்று ஒரு கோஷ்டி கத்திக் கத்தி தொண்டை கமறிப் போய் இருக்கிறது. என்ன ஆபாச உடைகள்?!'துப்பட்டா இல்லாத குர்த்தி' 'லோ வெயிஸ்ட்  ஜீன்ஸ், 'இப்படி அரைகுறையா டிரஸ் போட்டு சுத்தினா பாவம் அவனும் தான் என்ன பண்ணுவான்..' என்கிற மாதிரி உருக்கம் ஏகப்பட்ட நபர்களிடம் இருக்கிறது.
உண்மையில் இந்த மாதிரி அல்ட்ரா மாடர்ன்  பெண்களிடம் எந்த ஆணும் வம்பு செய்வதே இல்லை. பாதிக்கப் படுவதெல்லாம் பாந்தமாக உடை உடுத்தி இருக்கும் நடுத்தர வர்க்கத்து பெண்கள் தான். இவர்கள் பெரும்பாலும் குரலற்றவர்கள்; நாளைய பிரச்சினைகளை கருதி இன்றைக்கு எதையும் சகித்துக் கொள்பவர்கள்.
கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளுடன் நடந்து போகும் போதே  போக்கிரிகள் சிலர் கிண்டல் செய்தார்களாம். நல்ல வேளையாக  கண்ணகியின் உடைதான் அந்தக் கயமைக்கும் காரணம் என்று யாரும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவில்லை. காலம் காலமாக ஆணுக்கு பெண் ஒரு கேளிக்கைச் சாதனம்.அவளை சிநேகிதியாக, சக உயிராக பார்க்கப் பழகாத பார்வைக் கோளாறுதான் காரணமே ஒழிய உடைகள் மட்டுமே அல்ல.
மாநகரப் பேருந்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கம்பியை பிடித்தபடி நிற்கிறாள். பின்பக்கமாக ஒரு தடிமாடு அவள்மேல் சாய்ந்து சரிகிறது.குழந்தையின் முகம் கலங்கிப் போய் இருக்கிறது. 'ஹான்ட்பக்' பெண்கள் எல்லாம் இதைக் கவனித்தும், கவனிக்காததுமாய்  இருக்கிறார்கள். கடைசி சீட்டில் மீன்கூடையோடு ஒருத்தி நிற்கிறாள். கூறு கட்டி மீன் விற்றுக் குடும்பம் நடத்தும் அன்றாடங்காய்ச்சி  அவள். அந்தக் குழந்தைக்கு நடக்கும் கொடுமையைக் கண்டதும் கூச்சல் போடுகிறாள்.அவளது சத்தத்தில் தடிமாடு தானே  விலகி பஸ்ஸில் இருந்து தாவிக் கீழே  குதிக்கிறது.
உட்கார்ந்து இருந்த பெண்களின் படிப்பும், பதவியும் அவர்தம் தைரியத்தை உலர வைத்து விட்டது. கூடைகாரிக்கோ இழக்க எதுவுமில்லா இழுபறி வாழ்க்கை...சிறுமை கண்ட இடத்தில் சீறுகிறாள்.இதுதான் கொடுமையை எதிர்ப்பது.
'மோதி மிதித்து விடு பாப்பா...பாதகம் செய்பவரின் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா', என்று பாரதியாரின் வரிகளை செயல் படுத்தி, நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வையோடு தொடர்ந்து செல்லும் ஞானச் செருக்கு நமக்கு அவசியத் தேவை!

செவ்வாய், 21 டிசம்பர், 2010

காசேதான் கடவுளடா...

பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால், பணமே வாழ்க்கையாகி விடுவதுமில்லை'
- இது, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் அன்றைய தலைமுறைக்கு சர்வ சாதாரணமாக வழங்கப்பட்ட அறிவுரை.
இன்றைக்கு இதைச் சொன்னால்...அவர்களை ஏற, இறங்க பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். காரணம் பணம் மட்டுமே தான் வாழ்க்கை என இன்றைய தலைமுறையினருக்கு போதிக்கப்படுகிறது. அவர்களுக்கும் அதுதான் மிகவும் பிடித்து இருக்கிறது.
வித,விதமான உடைகள்,லேட்டஸ்ட் மாடல் செல்போன்கள், கார், பங்களா...என்று நம் வாழ்க்கையை ஆடம்பரங்கள் ஆக்கிரமித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அதன் எதிர்விளைவாக சத்தமில்லாமல் மிகப்பெரிய சதியே நடந்து கொண்டு இருக்கிறது....அது, உறவுச் சீர்குலைவு!
இங்கே எப்போதோ படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
'மிடில் கிளாஸ் மாதவன்' என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், தனக்கு promotion  கிடைத்ததும் ஆசை ஆசையாக புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கி வாசலில் நிறுத்தினார். அதில் உள்ள வசதிகளையும், விலை குறைத்து வாங்கிய சாமர்த்தியத்தையும் மனைவியிடம் பிரஸ்தாபித்துக் கொண்டு இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களின் ஏழு வயது மகன், ஓடிப் போய் காரில் எதையோ கிறுக்க...வந்ததே மாதவனுக்கு கோபம். கையில் கிடைத்ததைக் கொண்டு பையனை விளாசிவிட்டார். பையனின் விரல்கள் வீங்கி விட, டாக்டரிடம் ஓடினார்கள். கடைசியில் சுண்டு விரலை அகற்ற வேண்டியதாயிற்று.
மறுநாள் காலையில், 'காரில் அப்படி என்னதான் கிறுக்கினான்' என்று மாதவன் போய்ப் பார்த்த பொது அங்கே கிறுக்கலாக எழுதப்பட்டு இருந்தது-
'டாடி, ஐ  லவ் யு  வெரி மச்!'
வெட்கித் தலை குனிந்தார் அவர்.
இன்றைக்கும் நாம் எல்லார் வாழ்விலுமே வெற்றியின் அளவுகோலே...பணமாகத்தான் இருக்கிறது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை,கணவன்,அண்டை வீட்டார், நண்பர்கள், பிள்ளைகள் என்று எல்லாரிடமுமே  ஒருவித எதிர்பார்ப்புடனேயே பழகுகின்ற  பாங்கும் அதிகரித்து, மனித மதிப்பீடுகள் குறைந்து கொண்டே வருகின்றன என்பதை அறியாதவர்களல்ல நாம்.
பணம் தேவை தான். அதற்காக ஓடித்தான் ஆகவேண்டும். ஆனால், ஓட்டத்திற்கு நடுவே ஓய்வு எடுப்பது போல, மனித உறவுகளுக்கு சற்றே மதிப்பளிக்கும்  போது...நம் ஓட்டம் தடைப் படத்தானே செய்யும். ஆனால் அதுவே நம் தொடர் ஓட்டத்துக்கு recharge  ஆகவும் அமையும்.
இளைப்பாறி ஓடக் கற்றுக்கொள்வோம்...கற்றுக் கொடுப்போம் - எதிர்கால தலைமுறைக்கும்!

வியாழன், 16 டிசம்பர், 2010

Blaming Elders....

பெரியவர்கள் இந்தக் காலத்தின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம். அனால் அதற்கு பதில் அவர்கள் உலகத்தையும், அதன் தன்மைகளையும் நாம் அறிந்து கொள்ள முயல்வதில்லை. வாழ்க்கை என்பது ஒரு வேகமான ஓட்டம், அதில் தடைகளை தாண்டுபவருக்குத்தான் முதல் பரிசு என்று  ஊறிப்  போய் இருக்கும் உலகில் பெரியவர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜி இல்லாத ஒரு இயந்திரம் போல் பார்க்கப்படுகிறார்கள்.
பழைய கம்ப்யூட்டர், பிரிண்டர்,முதலில் வந்த  செல்போன், கருப்பு-வெள்ளை  டிவி, இது போன்ற பொருட்கள் தேவையற்றதாக பார்க்கபடுவதைப் போலவே, வயதில் பெரியவர்களும் பார்க்கபடுகிறார்கள் என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. புரிந்து கொள்ளப் படாத அந்த உணர்வுகள், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட பழைய சிலபஸ் ஆக பாவிக்கபடுகிறது. அந்த உலகத்தின் குரல்கள், அதிர்ந்து ஒலிக்கும் இன்றைய தலைமுறையின் சத்தத்தின் முன்னால் சந்தடி இல்லாமல் ஒடுங்கிப் போகின்றன.
ஒரே விஷயத்தை நீளமாக பேசுகிற, சொன்னதையே திரும்பச் சொல்லுகிற, நவீன உலகின் அடையாளங்கள் தெரியாத மனிதரை நாம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வது இல்லை.காரணம் அந்த உலகத்தோடு நட்பு பாராட்ட நமக்கு விருப்பம் இல்லை. உண்மையில் பழைய மனிதர்களின் நட்பு, உலகை உண்மையாகவும், ஆழமாகவும் பார்க்க உதவுகிறது.அவர்கள், கருவிகளின் துணை இல்லாமல் சவால்களை எதிர்கொண்டவர்கள், ஆயுதங்களின் துணை இல்லாமல் காரியம் சாதித்தவர்கள். நாம் கால்குலேடரிலும், கம்யுட்டரிலும், தேடும் விஷயங்களை அனுபவமாக கையில் வைத்து இருப்பவர்கள்.
நாம் எந்த விஷயத்துக்கெல்லாம் சிறப்புக்  கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோமோ, அந்த விஷயத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல், சகஜமாக அதை வாழ்வியலில் பயன்படுத்தியவர்கள். குறிப்பிட்ட வயது வரை பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும், பிறகு, நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என்ற' மடை மாற்று' வேலைதான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது. பெரியவர்கள் உலகத்தோடு நமக்கு நட்பு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கிற அளவு நமக்கு பொறுமை இல்லை...நேரமும் இல்லை.
கணினிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு உலகத்தை தேடுகிற நாம், பெரியவர்கள் நட்பிலும் அதைத் தேடலாம். அப்படி நட்பு பாராட்டி ஆகப் போவது என்ன? நிறைய ஆகும். நீங்கள் யோசித்திராத பரிமாணங்கள் அது சொல்லித் தரும். சமூகத்தைப் பற்றிய உண்மைகளைச் சொல்லும், நெருக்கடியான நிலைமைகளை நிர்வாகம் செய்கிற அறிவைத் தரும்.
எனவே நண்பர்களே, காலையில்  வாகிங்  போகிற போது எதிரில் வேட்டியை மடித்துக் கொண்டு, வெள்ளை பனியனோடு நடந்து போகிற அந்தச் சாதாரண பெரிய மனிதரிடம் நட்பாகச் சிரியுங்கள்....அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள்.பெரியவர்களைக் குறை சொல்லுகிற நேரத்தை, அவர்களைப் புரிந்து கொள்வதற்கு செலவிடலாம்.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

தலையாட்டி பொம்மைகள்?????

எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் சரி என்று சொல்லுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.இப்படி எல்லோருக்கும் நல்லவனாக நினைத்தால் கடைசியில் எல்லாருக்கும் கெட்டவனாகி விடுவோம் என்பதுதான் உண்மை.
'சரி என்று சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும்'சரி' என்று சொல்லி வேலையை இழுத்துப் போட்டு செய்யும் பொது அனைவரது பாராட்டையும், அபிமானத்தையும் பெறலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்ற மனோபாவத்தை நீங்களே எல்லோர் மனத்திலும் விதைத்து விடுகிறீர்கள்.
விளைவு, என்றைக்காவது  ஒரு நாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிற பொது, 'இவன் முன்னைப் போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும்.அந்த வேலைகளை செய்யமுடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக் கொண்டு இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்து போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீகள். இப்போது 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்ற குற்றச் சாட்டு அதிகமாகி இருக்கும்.
எல்லோருக்கும் நல்லவனாக எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிராக நிற்கிறது. போதாகுறைக்கு இவர்களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.
நீங்கள் பகுத்தறிவும், ஞானம் இல்லாதவர் என்பதைத்தான் எல்லாவற்றுக்கும்'சரி' சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப் போல 'முடியாது' என்று சொல்வது எளிதான காரியம் இல்லைதான். ஆனால் குறைந்த பட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்', யோசித்துச் சொல்லுகிறேன்' என்று சொல்லலாமே. 
முடியாத விஷயங்களுக்கு நாகரிகமாகவும்,நாசூக்காகவும் எதிரில்  இருப்பவர்களுக்கு புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சி நமக்கு வேண்டும். நியாயமான விஷயங்களுக்கு மட்டும் 'சரி' என்று சொல்லிவிட்டு, அதனை முடித்துக் கொடுப்பது உத்தமம்.எனவே 'தலையாட்டி பொம்மையாக எப்போதும் இருக்காதீர்கள்!'.

திங்கள், 13 டிசம்பர், 2010

புத்தக வாசிப்பு!!!!!

 ஒரு சிறிய நகரத்தில் படித்து விட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்த எனது வாழ்க்கை  வட்டத்தைப் பெரிது படுத்தியது புத்தகங்கள் தான். பொதுவாக நானாகப்  போய் யாரிடமும் பேசும் இயல்பு எனக்கு இருந்தது இல்லை. வயது ஏற, ஏற  தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமானதே தவிர குறைய வில்லை. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்....எப்படித்தான் நமக்கு தைரியம் வந்தது என்று?.......
எனது  தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதில் நான் முக்கியப் பங்காக புத்தக வாசிப்பைத் தான் சொல்லுவேன். எங்கள் ஊர் லைப்ரரி, மற்றும் வீடு வீடாக வார இதழ், நாளிதழ் என்று நான் புத்தகம் தேட கூச்சப்பட்டதே இல்லை. அதன்பின் வாழ்க்கையின் நிறங்கள் மாற ஆரம்பித்தன! இதெல்லாம் என்னால் செய்ய முடியாதுப்பா' என்று ஓடி ஒளிந்த நான் ' கொடுங்க செஞ்சு பார்க்கிறேன்,,,,' என்று செய்ய ஆரம்பித்தேன் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பின்னர், குழந்தைகளுக்கு பாடத்தோடு சேர்த்து நிறைய விஷயங்களை கற்றுத் தர முடிந்தது.

 சென்னை மாநகருக்கு வந்த பிறகு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத நான் கார் ஓட்டக்  கற்றுக் கொண்டது, எவ்வளவு பெரிய  கூட்டங்களிலும் தைரியமாக எதைப் பற்றியும் பேசுவது, தனியே பயணிப்பது, தவறு என்றுத் தெரிந்தால் தைரியமாக அதைத் தட்டிக் கேட்பது  என என்னுடைய தன்னம்பிக்கை வட்டம் அதிகம் ஆனது.


  உலக அனுபவங்கள் பெறப் பெறத்தான் நம் தன்னம்பிக்கையின் அளவு உயர்கிறது. இதை வேறு வார்த்தைகளிலும் சொல்லலாம்.அதாவது விஷயங்கள் அதிகம் கற்றுக் கொள்ள, கற்றுக்  கொள்ள தன்னம்பிக்கை லெவல் கூடுகிறது!. 
புத்தகங்கள் சத்தமில்லாமல் நம் வாழ்வில் நிறையப் பேரை, நிறைய கரெக்டர்களை, நிறைய புது உலகங்களை,நிறைய புது அனுபவங்களை நமக்கு அறிமுகப்படுத்தும். இதனால் நாம் அனைத்தும் பெற்றது போல் ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் பெறுவோம்.

 வைரமுத்து கூட தனது கவிதையில்,
" தலையை குனியும் போது புத்தகம் படி...தலை நிமிரும் போது உலகம் படி" என்று அழகாக எழுதி இருப்பார்.

வியாழன், 28 அக்டோபர், 2010

பயணம் செய்ய விரும்பு !

இயற்கையின் பிரமாண்டத்தை வியக்கவும், மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், வீட்டின் நாலு சுவர்களுக்குள் பெறமுடியாத சில வாழ்க்கை தரிசனங்களைப் பெறவும் பயணங்கள் தேவை.
இன்றைக்கும் கூட ஆண்களைப்  போல் பெண்களால் தனியாகப் பயணம் செய்ய முடிவதில்லை. எத்தனையோ ஆண்கள், "போர் அடிக்குது", "ஸ்ட்ரெஸ் ஜாஸ்தியாயிடுச்சு" என்று ஒற்றைப் பையை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பி விடுகிறார்கள். டூர் வேண்டாம்...அட்லீஸ்ட் உறவினர் வீட்டுத் திருமணத்துக்காவது  பெண்களால் உற்சாகத்துடன் கிளம்ப முடியுமா?
இன்றைக்கும் கூட தனியே பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெறும் பத்து சதவீதம் தான் என்கிறது புள்ளி விவரம். பயணம் என்பது எல்லாக் காலங்களிலும் பெண்ணுக்கு பெரும் சுமையே. அவ்வையாரும், காரைக்கால் அம்மையாரும் தனிவழிப் பயணத்தின் ஆபத்துக்களுக்கு அஞ்சியே கிழதனத்தையும், பேய் உருவத்தையும் வரமாக வேண்டிப் பெற்றனர்.நமக்குத் தெரிந்து எந்த ஆண் பயணியும் கிழவனாகவோ...பேயாகவோ...வரம் கேட்டதில்லை.ஆணுக்கு பயணம் என்பது சிறகு.பெண்ணுக்கு அதுவே விலங்கு.
சிறிது காலத்திற்கு முன்னர் கூட ஒரு இருவது வயது பெண் தனியாக தெருமுனை கடைக்கோ...தோழிகள் வீட்டுக்கோ சென்றால், அவளின் பத்து வயது தம்பி துணைக்கு வருவான். மானசீக காரை சதா ஓடிக் கொண்டும், எதிரே இல்லாத கவாஸ்கருக்கு பந்து போட்டுக் கொண்டும் வரும் அந்தப் பயல், அவளுக்கு எப்படி பாதுகாப்பாக வருவான்?
ஆனால் இன்றைய இளம்பெண்கள் அதற்கெல்லாம் அஞ்சுவதே இல்லை.அவர்களின் தைரியம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பயணத்திற்கு ஏற்றார் போல வசதியாக உடை அணிவது,பழைய பஞ்சாங்கம் போல பெரிய ஹான்ட்பாக், கழுத்து நிறைய நகைகள் என்றெல்லாம் இல்லாமல் ஆண்களைப் போல சிறிய purse ,குட்டைதலைமுடி,ஜீன்ஸ், முரட்டுச் சட்டை  போன்ற அவர்களின் தோற்றம் 'எனக்கு தனிவழிப் பயணம் ரொம்பவே பழக்கம் ' என்பதை சொல்லாமல் சொல்கிறது.
அவர்களது வேலை நிமித்தமாக அடிக்கடி தனியே பெண்கள் பயணிக்க வேண்டி யுர்கிறது.தகவல் தொடர்புக்கு செல்போன், பயனதுகேற்ற உடைகள், திருட்டு பயம் தவிர்க்க டெபிட் கார்டு என்று அவர்களின் பயணமும், பாதையும் சுலபமாகியுள்ளது. இந்தப் பாதையில் இவர்கள் யாவருக்கும் முன்னோடியாக கல்லிலும், முள்ளிலும் ரத்தம் சொட்டச் சொட்ட முதலில் நடந்த பெண் பயணி அவ்வையாராகதான் இருக்க வேண்டும்...
 'என் மூட்டையை   எடுத்துக் கொண்டேன்
பொருட்களைக் கட்டிக் கொண்டேன்
மரம் வெட்டும் தச்சனிடம் தொழில்
கற்ற அவனது பிள்ளை
கோடரியுடன் காட்டுக்குச் செல்வது போல
நான் செல்கிறேன்
நான் எந்தத் திசை சென்றாலும்
அந்தத் திசையில்
எனக்கு சோறு கிடைக்கும்!'
                                     - அவ்வையார். புறநானூறு.

திங்கள், 25 அக்டோபர், 2010

கலாச்சாரத்தை உரசிப் பார்க்கும் 'LIVING TOGETHER ' !!!!!!!!!

'திருமணம்...குடும்பம்...என்பதெல்லாம் சிதைந்து கொண்டே இருக்கிறது' என்றொரு பேச்சு தொடர்ந்து ஒலித்தபடியேதான் இருக்கிறது. இதைப் பற்றி யோசிக்கும் போது, எங்கேயோ...எப்போதோ...கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
நீளமான கூந்தல் அழகில் எப்போதுமே லயித்திருப்பவள் அவள். அதுதான் அவளுக்கு பெரிய சொத்து. ஆனால், அதைப் பராமரிக்க ஒழுங்கான சீப்பு கூட அவளிடம் இல்லை. கணவனிடம் இருக்கும் மிகப் பெரிய சொத்தே அவனது கைக்கடிகாரம் தான். ஆனால் அதற்கு சரியான ஸ்ட்ராப் இல்லாததால்...அதைக் கையில் வைத்துதான் அழகு பார்க்க முடிகிறது.
ஒரு நாள்...அழகான ஸ்ட்ராப்போடு மனைவி வந்து நிற்க...விலை உயர்ந்த சீப்பில் எதிரில் வந்து நின்றான் கணவன். ஆனால், சீவுவதற்குதான்   அவளிடம் நீளமான முடியில்லை. அதை வெட்டி விற்றுத்தான் ஸ்ட்ராப் வாங்கி வந்திருந்தாள் மனைவி. அதே நேரம்... அதைக் கட்டுவதற்கு இவனிடம் கடிகாரமும் இல்லை. அதை விற்றுத்தான் சீப்பையே வாங்கி வந்திருந்தான்.
நெஞ்சை நெகிழ வைக்கும் 'டச்சிங்கான' கதையாக இருக்கிறதல்லவா...?
இத்தகைய அன்னியோன்யம் தானே... வாழ்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தப் புரிதல் இல்லாதபோது...பிரச்சினைகள் எட்டிப் பார்க்கத்தான் செய்யும்!  அதற்காக, 'சிஸ்டமே தவறு'  என்று ஒரேயடியாக போட்டு உடைத்து விட முடிமா...?
நன்கு யோசித்துப் பார்ப்போம்...
'ஒருவனுக்கு ஒருத்தி  என்று  கூடி வாழ வேண்டும்'  என்று மனித இனம் தோன்றிய போதே யாரவது சட்டம் போட்டு வைத்தார்களா...இல்லையே...!
நாகரிகம் வளர வளர நாமாக பார்த்து முடிவு செய்ததுதானே திருமணம்,  குடும்பம், குழந்தை என்பதெல்லாம்.  ஆனால், இது வாழ்க்கைக்கு மிகவும் வசதியானதாக இருக்கிறது என்பதால்...ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாமும் கடைப் பிடித்து வருகிறோம்.

கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி...கொள்ளும்போது கொள்ளு...தாண்டிச் செல்லும்போது செல்லடி...' -
இப்படி ஒரு பாடலில் கண்ணதாசன் எழுதி இருப்பார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் நாமே போட்டுக் கொண்ட கோடுகள் தான். ஆனால் ஒரே நாளில் போட்டுக் கொண்டதில்லை...காலம் காலமாக அனுபவித்துப் பார்த்து...'இதுதான் சரி' என்று போட்டு வைத்த கோடுகள்!
'அடுத்தவன் சொன்னா கசக்கும்...கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்'
 எனவே எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

 இதைக்குறித்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்கிறோம். அப்படி வாழ்வியலை கற்றுக்கொள்ளும் பள்ளியாகவும், கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருப்பது குடும்பம் என்னும் வலுவான அமைப்புதான்,அந்த அமைப்பு இருவர் ஒப்புக் கொண்டு உறவுகளின் துணையோடு திருமணம் செய்து கொள்கிற போதுதான் உருவாகும், அதுதான் தழைக்கும்.ஆனால், 'எங்கள் இருவருக்கும் சில காரணங்களால் சேர்ந்து வாழும் கலாசாரம் பிடித்து இருக்கிறது: அதனால் சேர்ந்து வாழ்கிறோம்' என்கிற வாழ்க்கை முறையில் என்ன நிம்மதி கிடைத்து விடும்? 'என்றைகாவது ஒரு நாள் பிரிந்து விடப் போகிறவர்கள் தானே நாம்..?என்கிற உறவில் ஆழமான காதல், அன்பு வராது" என்கிறார். 
இரண்டாவது இந்த உறவில் வளரும் குழந்தைகள் அனாதையாக்கப்படும்: அல்லது தனித்து வாழும் சிங்கிள் பேரென்ட் குழந்தைகளாக வளரும்.அப்படி வளரும் குழந்தைகளின்  மனநிலையும், சமூக வளர்ச்சியும் கவலைக்குரியதாக மாறும், என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

நன்மை என்று பார்க்கும் போது, இந்த வாழ்க்கை முறைப் பற்றி சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ் சொல்லுகிறார், "இந்தியாவில் குடும்பம் என்கிற அமைப்பு இப்போது மிகவும் இறுக்கமானதாக இருக்கிறதே ஒழிய, இணக்கமானதாக இல்லை'என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தினம், தினம் பதிவாகும் விவாகரத்து, குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை அதற்கு சான்று.இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷமில்லாமல், சடங்குக்காக சேர்ந்து வாழும் திருமண வாழ்க்கைக்கு மாற்றாக, மாறி வரும் சமூகச் சூழலில் வயது வந்த ஆணும், பெண்ணும், 'நாம் சேர்ந்து வாழலாம்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாழ்வது குற்றம் கிடையாது.இது ஆரோக்கியமானதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்" என்கிறார் யதார்த்தமாக!

living  together  வாழ்க்கையை சட்டம் எப்படி பார்க்கிறது என்றால்,"இதற்கு சட்ட ரீதியாக எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால், இப்படி சேர்ந்து வாழும் போது, பெண்கள் பாதிக்கப்படும் சமயத்தில், அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு நிச்சயமாக உண்டு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்   நியாயம் கேட்கலாம்.
மற்றபடி, ஒருவர் பிரிந்து செல்லும்  பட்சத்தில் குழந்தையை முன்னிறுத்தி ஆண் மீது உரிமை கோர இயலுமா, குழந்தைகளின் சொத்துரிமை எப்படி, போன்ற விஷயங்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தீர்வுகள் ஏதும் இதுவரை இல்லை. ஒரு வேளை   இந்த 'living together ' விஷயம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் போது...அதற்கான சட்டங்களும் வரலாம் "என்று உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்களில் ஒருவரான அஜிதா கூறுகிறார்.

சேர்ந்து இருப்பதற்கும், சேர்ந்து வாழ்வதற்கும் அர்த்தங்கள் வேறு! காலம்தான் அதைப் புரிய வைக்க வேண்டும்!

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வெட்கம்!!!!!

'ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனமிங்கு அலைபாயுதே'
-பாட்டைக் கேட்கும் போதே நமக்கு அறிமுகமான எதாவது பெண்ணின் வெட்க முகம் நினைவில் வந்து விலகும். ஆம்...வெட்கத்தைப் பெண்களுடன் ஓட்டிப் பிறந்த குணமாகத்தான்  சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய சினிமா வரை சித்தரித்துள்ளனர்.
'யானோக்குங் காலை   நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்'
- இது...'நான் உன்னைப் பார்க்க, நீ மண்ணைப்  பார்க்கிறாய். நான் விண்ணைப் பார்க்க, நீ என்னைப் பார்க்கிறாய்' என நாணம் சுமக்கும் பெண்ணைப் பற்றி வள்ளுவரின் பார்வை.
அன்னப் பட்சி தூது போன காலத்தில் இதெல்லாம் சரிதான். ஆனால் இந்தக் காலத்து lap -top பெண்களுக்கு இந்த வெட்கம் எந்த அளவுக்கு சூட் ஆகும்?
தன துணையான ஒரு ஆணிடம் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வெட்கம்  இயல்பானதுதான். ஆனால், பொது இடத்தில் பேச வெட்கம், புது ஆட்களுடன் பழக வெட்கம், என அந்த வெட்கம் மொத்த சமூகத்திடமும் ஏற்பட்டால், அது ஆரோக்கியமானது அல்ல. உண்மையைச் சொல்வதென்றால் அந்த வெட்கம், உங்களுக்குள் தேவை இல்லாத தாழ்வு மனப்பான்மையைத் தான் ஏற்படுத்தும்.
கதைக்கும் கவிதைக்கும் வெட்கம் அழகான கருப்பொருளாக இருக்கலாம். ஆனால், நிஜத்தில் உங்கள் வெட்கத்தைக் கொண்டாட இன்றைய சமூகத்துக்கு நேரமில்லை.நான்கு பேர் எதிரே,  'வணக்கம், ஐ   யாம் ஆர்த்தி'  என்று கம்பீரமாக எழுந்து வரும் பெண்ணுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், கடைசி பெஞ்சில் பதுங்கி உட்காரும் மாணவிக்கு கிடைப்பதில்லை. அளவுக்கு மீறி வெட்கம் காட்டும் பெண்களை இன்றைய இளைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆக...' ஹூம்...நான் பேசமாட்டேன்' என்று கால் கட்டை விரலில் கோலம் போடும் பெண்கள் revised  சிலபஸில்  இல்லை!
   'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை '  தான் பாரதி சொன்னதும்!"

வியாழன், 21 அக்டோபர், 2010

புதையாது காதல்!

இதயம் நுழைந்து
என்னைத் திருடும் வரை
துணிவோடுதானே இருந்தாய்..?
போகப் போக
பொருளாதார வீழ்ச்சி எனும்
புதைகுழியில் நீ வீழ்ந்த போது
நம் காதலையும் சேர்த்து
ஏன் புதைத்தாய்?
ஒவ்வொரு முறையும்
நான் மாறாத காதலெனும்
கயிறு கொண்டு
உன்னைத்
தூக்கும் போதெல்லாம்...
அவநம்பிக்கைச்  சகதியில்
நீயாகவே விழுகிறாய்!
விரக்தியும் சலிப்புமாய்
குழிக்குள் நீயும்...
மீட்டுவிடும் உறுதியோடு
வெளிப்புறத்தில் நானுமென
தொடர்கிறது
ஒரு போராட்டம்!    -----சிவாநிகா.

டைரக்டர்கள் கவனத்துக்கு!!

(வித்தியாசமான மூன்று கதைகள்..இதில் எதை வேணாலும் நீங்க உல்டா செய்து கொள்ளலாம். காப்பி,டீ,   ரைட்ஸ்   எல்லாம் தேவை இல்லை)
முதல் கதை..
பூமிக்கும்,சூரியனுக்கும் லவ்வு .. ..ஆனா அது ரெண்டும் ஒண்ணா சேர்ந்தா பூமியில இருக்கறவங்க எல்லாம் கருகிடுவாங்க.அதனால பூமியில இருக்கறவங்க இந்த காதலை எதிர்க்கறாங்க.  தடைகளைத் தாண்டி பூமியும் சூரியனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.
க்ராபிக்ஸுக்கும், ஸ்பெஷல் effects  க்கும் ஏகப்பட்ட ஸ்கோப் இருக்கு.  satellite லேயே காமெராவ பிக்ஸ் பண்ணிப்  பாதிப் படத்தை முடிச்சுரலாம்.காதல் வேகத்துல பூமி சூரியனை சுத்தி சுத்தி நடனம் ஆடுற மாறி பாட்டு போட்டு கலக்கிடலாம்.
 
இன்னொரு கதை...
"எத்தனை நாளைக்கு தான் ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேர்றதோட  படத்தை முடிப்பாங்க? இந்தக் கதையில வழக்கம் போல வில்லனை அடிச்சு வீழ்த்தி அவகிட்ட இருந்து ஹீரோயினைக் காப்பாத்தி அவளை கல்யாணம் பண்ணிகிறார் ஹீரோ.அதுக்கப்புறம் தான் கதையே சூடு பிடிக்குது.தினம், தினம் அவனோட பஞ்ச் டையலாக்கைக்  கேட்டுகிட்டு, அவனோட ஒழுங்குபிள்ளைத் தனத்தை மெச்சிகிட்டு, அவனோட இருந்து அவளுக்கு போரடிக்குது. ஒரு ஹீரோவோட வாழ்க்கை நடத்தறது எவ்வளவு கஷ்டம் னு அவ அப்போதான் புரிஞ்சுக்கறா.  "இவன்  torture
க்கு
அவனே மேல்" னு அவ ஹீரோவை divorce பண்ணிட்டு வில்லனைக் கல்யாணம் பண்ணிக்கறா.  மூணு மனசுக்குள்ள நடக்குற உணர்ச்சி போராட்டத்தை பிழிஞ்சு தரனும். (எப்படி divorce  வாங்கறதுன்னு தெரியாம குடும்பம் நடத்திட்டு இருக்கற தாய்குலங்களை எல்லாம் கவர்ந்து இழுத்திடும் இந்த சப்ஜெக்ட்.)!!!!!!
 
இன்னொரு கதை....
லவ் ஸ்டோரி ல ஏதாவது சமுதாயப் புரட்சி பண்ணலைனா எப்படி? பெருமாள் கோவில் வாசல்ல வரிசையா உட்கார்ந்து பிச்சை எடுப்பாங்களே...அதுல ரெண்டு பேர்தான் நம்ம  ஹீரோ,ஹீரோயின்... முக்காடு போட்டுக்கிட்டு பத்தாவது ரவுண்டு புளி சாதம் வாங்கும் போது ரெண்டு பேர் கையும் உரசிக்க, காதல் பத்திக்குது.ஆனா கூட பிச்சை எடுக்கறவங்க இதை கடுமையா எதிர்க்கறாங்க. 'நாங்க இந்த நிலைமைக்கு வந்ததே காதலிச்சனாலதான், அந்த தப்பை நீங்க பண்ணிடாதீங்க' னு அட்வைஸ் பண்றாங்க.அவங்க எதிர்ப்பை எல்லாம் மீறி அவங்க தெய்வீக காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான்    கதை.
'இது புளிசாத காதல் ஆனா, புளிக்காத காதல்' னு ஒரு டூயட் சாங்கை  மூணு தடவை ரிபீட்  பண்ணி, அதை  யூத்களின்  ரிங்டோனா ஆக்கணும்.

புதன், 20 அக்டோபர், 2010

அவசர வாழ்க்கை..அனுபவிக்க இயலாத வாழ்க்கை!!!!!

இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, அவசரம்!
வீடு, பணியிடம், பேருந்து, பள்ளி, கோயில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர்   , என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது.  சிறியவர்கள், பெரியவர்கள் என பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக்கொடுத்து இருக்கிறோம்.
 
எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை கேட்டுக் கொண்டதே இல்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிடமே கைகால்கள்  தாமே உதறத் துவங்குகின்றன. முகம் சிவந்து விடுகிறது.உடல் நடுங்கத் துவங்குகிறது.கோபம், ஆத்திரம், கவலை, என்று உணர்ச்சிகளின் தடுமாற்றத்திற்கு மூல காரணமாக இருப்பது அவசரம் தான்.
 
சாலையோர சப்-வேயின் படிக்கட்டில் உட்கார்ந்து கையேந்தும் பிச்சைக்காரன் கூட இதை விட அமைதியாகவும் அவசரமின்றியும் தன் நாட்களை கழிக்கிறான். படுக்க இடமில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் கூட மாலை நேரங்களை ரேடியோ கேட்டுக் கொண்டும், பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு, யாவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
 
வேலை, பணம், ஆசைகள் என்று மாய மானைத் துரத்தித்திரியும் மத்திய தர வர்க்கம் எதையும் அடைய முடியாமலும் திரிசங்கு சொர்க்கம் போல மிதக்கிறது.அவசரம் அவர்களின் வயதின் மேன்மையை அழித்து விடுகிறது.தோற்றத்தில் மட்டுமின்றி, சிந்தனையிலும், செயல்பாட்டிலும் சலிப்பு தொற்றிக் கொண்டு விடுகிறது.
யோசிக்கையில் தோன்றுகிறது...நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். என்னதான் பணிசார்ந்த அவசரம் தவிர்க்க முடியாமல் போனாலும், எல்லா நேரங்களிலும் ஏன் இப்படி படபடப்பாகவும், நிம்மதியின்றியும் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை!
 
வண்ணத்துப் பூச்சி ஒரு பூவிலிருந்து தேன் எடுப்பதற்காக எங்கெங்கோ சுற்றி அலைகிறது.ஆனால் தேன் உள்ள பூவைக் கண்டு விட்டாலோ அதைச் சுற்றி வந்து உணர்கொம்புகளால் தேனை உறிஞ்சி அப்படியே கிறங்கிக் கிடக்கிறது.ஒரு துளி தேன் என்றாலும், அதன் சுவையை சுவையை ருசிக்கும் வண்ணத்துப் பூச்சியின் லயிப்பு நமக்கு ஏன் வருவதில்லை?

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

எது அழகு?


"நான் அழகாக இருக்கிறேனா?" என்பது வெறும் கேள்வியாக இல்லாமல் ஓர் ஆதங்கமாகவே  நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது.வேறு எந்தச் செயலையும் விட ,ஆணும் பெண்ணும் தான் அழகாக இருப்பதாக காட்டிகொள்வதில் தான் அதிகம் ஈடுபாடு கொள்கிறார்கள்.
உண்மையில் நாம் அழகாக இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும் போது  ,நமக்கு இருக்கும் ஒரே துணை கண்ணாடி தான்.கண்ணாடியில் தெரியும் நம் உருவத்துடன் பேசத்துவங்குகிறோம்.கண் ஏன் இப்படி இருக்கிறது?உதடு ஏன் உலர்ந்திருக்கிறது?கேசம் ஏன் கலைந்து கிடக்கிறது என உடலை உற்று நோக்கத் துவங்குகிறோம்.
அழகு கண்ணாடியில் இல்லை; காண்பவரின் கண்களில் தான் இருக்கிறது என்று புரியத் துவங்கும் பொது, அழகின் மீதான அக்கறையைக் கடந்து வயதுக்குள் வந்து விடுகிறோம்.அப்போது மனிதர்களை விடவும் இயற்கை மிக அற்புதமானது என்று நமக்கு புரிகிறது.
உண்மையில் நாம் ஒவ்வொருவரும்   தனித்துவமான அழகுடன் தான் இருக்கிறோம்.இருக்கிறோம்.அதை நாம் உணர்வதில்லை.அழகைப் பற்றிய நம் மதிப்பீடுகளில் பெரும்பான்மை அர்த்தமற்றவை.அன்பும், நட்பும், அடுத்தவர் மீதான அக்கறையும், எதையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பக்குவமும், உள்ள யாவரும் அழகானவர்களே! சில தருணங்களில் இயல்பாக வெளிப்படும் அழகுக்கு நிகர் எதுவுமே இல்லை. அதற்கு கீழ்க்கண்ட பாடலே உதாரணம்.
ஆடும்பொழுது மயில் அழகு
ஓடும்பொழுது மான் அழகு
தாவும் பொழுது முயல் அழகு
கூவும் பொழுது குயில் அழகு
பாயும் பொழுது புலி அழகு
மேயும் பொழுது பசு அழகு
நடக்கும் பொழுது கால் அழகு
கடக்கும் பொழுது நதி அழகு
அணியும் பொழுது நகை அழகு
தணியும் பொழுது சினம் அழகு
அரைக்கும் பொழுது சந்தனம் அழகு
உரைக்கும் பொழுது தங்கம் அழகு
காணும் பொழுது தாய்மை அழகு
பேணும் பொழுது ஒழுக்கம் அழகு
சிரிக்கும் பொழுது குழந்தை அழகு
தரிக்கும் பொழுது முடி அழகு
புலவர் இராச  ரத்தினம்.
மழை நாள் ஒன்றில் ஒரு குடைக்குள்ளாக மூன்று பேர் ஒண்டிக்கொண்டு நனையாமல் போய்க்கொண்டு இருந்தார்கள். மழையின் ஈரம் படிந்த முகங்கள், மெல்லிய புன்னகை, நனைந்து கலைந்த கேசம், காற்றையும் சாரலையும் பார்த்த  அவர்களது மகிழ்ச்சி, என அழகு  அழியாத சித்திரமாக அவர்களுக்குள் இருந்தது.
இது போல எத்தனையோ நிமிடங்களில் மனிதர்கள் சொல்லமுடியாத பேரழகுடன் இருப்பதைக் காணலாம்.ஒரியப் பழங்குடி மக்களிடம் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் நிறங்கள் தங்களுக்குள் எது சிறந்தது என சண்டையிட்டுக் கொண்டனவாம்.அப்போது வானில் திடீரென பலத்த சத்தத்துடன் மழை பெய்யத் துவங்கியதாம்.நிறங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு நெருங்கிக் கொண்டன.உடனே ஏழு நிறத்தில் ஒரு வானவில் உண்டானதும், நிறங்கள் அதைக் கண்டு ஆச்சரியம் கொண்டனவாம்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல் சொன்னது....."ஒவ்வொரு நிறமும் அதனதன் வழியில் தனித்துவமானதுதான்.ஆனால் அத்தனையும் விட அழகானது இப்படி ஒன்றாக இருக்கும் வானவில் நிறம் தான் "..என்றது.அப்போது தான் நிறங்களுக்கு நிஜம் புரிந்தது. மனங்களுக்கும்  புரியும் என்பதில் சந்தேகமில்லைதானே?

"உங்களை எல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்க சொன்னது?"

கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமிருக்கிறதா? இருக்கிறது என்றே தோன்றுகிறது.ஆண்களுக்கு சில கேள்விகள் தோன்றுவதே  இல்லை.அதில் ஒன்று இந்த கேள்வி.பெரும்பாலும் பின்னிரவில்  வீடு திரும்பும் போது, பெண்களிடம் இந்தக் கேள்வி எழுகிறது.எந்தக் கணவனும் இதற்கான பதிலைச் சொல்லியதில்லை. யாவருக்கும் பொதுவான ஒரே பதில், மௌனம் மட்டுமே!
வீட்டைக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எல்லா ஆண்களுக்கும் பொதுவானது.அதில் பெரும்பகுதி உண்மை இருக்கவும் செய்கிறது.எங்கோ நடக்கும் கிரிக்கெட் போட்டி,இராக் யுத்தம் வரை அக்கறையாக கவனிக்கும் ஆண்களுக்கு தன் வீட்டில் நடப்பதை கவனிப்பதற்கு மட்டும் விருப்பமில்லாமல் போகிறது?
காரணம் வீடு என்பது அவனைப் பொறுத்த மட்டில் தன் சுதந்திரத்துக்கு தடை விதிக்க கூடியது.அது, பிரச்சினைகளின் விளை நிலம்.
 
கி.மு - கி.பி. என்பது போல பெண்களுக்கு தி.மு - தி.பி என வாழ்வு இரண்டாக பிரிக்கப் பட்டு இருக்கிறது.திருமணத்துக்கு முந்தைய பெண்ணின் வாழ்வும்,திருமணத்துக்கு பிந்தைய பெண்ணின் வாழ்வும் மிகுந்த வேறுபாடு கொண்டது. வீட்டிலிருந்து பெண் வெளியேறிப் போனாலும் பெண்ணிடமிருந்து வீடு எளிதில் வெளியேறுவதில்லை.
திருமண மண்டபங்களில் உதிர்ந்து கிடக்கும் பூவிதழ்களுடன் பெண்ணின்  கனவுகளும் உதிர்ந்து விடுகின்றன.
திருமண குறித்த கனவுகள் ஆணுக்கு ஒன்றாகவும்,பெண்ணுக்கு வேறு ஒன்றாகவும் இருக்கிறது.அது கலையத் துவங்கும் பொது ஆண் ஆத்திரம் கொள்பவனாகவும்,பெண் அடிவாங்குபவளாகவுமே இருக்கிறார்கள்.பெண்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்வை சகித்துக் கொள்வதும்,இருப்பதில் திருப்தி அடைவதும்,வேதனையை மனதிற்குள் புதைத்து விடுவதுமே,பல குடும்பங்கள் உடைந்து போகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது.
மாலை நேரங்களில் மின்சார ரயிலில் பயணம் செய்து வீடு திரும்புபவர்களைக் கவனித்து இருக்கிறேன்.ஒரே ரயிலில் தான் ஆணும்,பெண்ணும் பயணம் செய்கிறார்கள்.தன் வீட்டின் அருகில் உள்ள  ரயில் நிலையம் வந்ததும் ஒன்றாகத்தான் இறங்குகிறார்கள்.ஆனால்  ரயில் நிலையத்தை விட்டு வெளியே  வந்த ஆண்கள் ஆங்காங்கே நின்று tea  குடித்தபடியோ, சினிமா விளம்பரங்களை வேடிக்கை பார்த்தபடியோ,நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியோ நிற்கிறார்கள்.
பெண்களோ ரயில் நிலையத்தில் வெளியேறும் வாசலில் உள்ள காய்கறிக்கடைகளில் நின்று பேரம் பேசிக் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருப்பார்கள்.பல்லி தன் நாக்கை நீட்டி பூச்சியை கவ்வி இழுத்துக் கொள்வது போல, வீட்டை நெருங்குவதற்கு முன்பாக தன் நாக்கால் பெண்ணை கவ்வி இழுத்துக் கொள்கிறது வீடு.
 
இன்று அதிருப்திகளும்,அக்கறை இன்மையும் நம் வீடுகளை நீக்கமறப் பற்றி இருக்கின்றன. அநேகப் பெண்களின் மனக்குறைகளும்,ஆதங்கங்களும் அகற்றப் படுவதில்லை.எனவே தான் மனப்பாரத்தை இறக்க வேண்டி,ஒன்று கோவில் குளத்தை நாடிப்  போய் ஏமாறுகிறார்கள்.இல்லையேல் தவறான உறவுகளில் தடம் புரண்டு போகிறார்கள்.
வேலைச் சுமை, நகர நெருக்கடி,பொருளாதார நெருக்கடி என ஆயிரம் காரணங்கள் சொன்னபோதும்,ஒரே வீட்டில் ஆண்களும்,பெண்களும் வேறு வேறு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.சாப்பாட்டைப் போலவே பாலுறவும் தவிர்க்க முடியாத நிகழ்வாக முடிந்து போகிறதே அன்றி, அதில் ஆணோ,பெண்ணோ அக இன்பம் கொள்வதே இல்லை.
 
காக்கைக் கூட்டைப் பார்த்து இருக்கிறீர்களா? அது தன் கூட்டில் பகல் வேளைகளில் இருப்பதில்லை.அது பறந்து, திரிந்து  கிடைத்ததை சாப்பிட்டு,எப்போது வீடு திரும்புகிறது? எப்போது உறங்குகிறது என்று தெரியாது.அது தன் கூட்டை முட்களால்தான் கட்டுகிறது.ஆண்களுக்கு வீடு காக்கைக் கூடுதானா?

வியாழன், 14 அக்டோபர், 2010

"எனக்குனு யார் இருக்கா?"

வேறு எப்போதும் விட நோயுறும் போதுதான் இந்த மாதிரி கேள்விகள் மனதில் அதிகம் பிறக்கின்றன.வீடு கற்றுத்தர மறந்ததை மருத்துவமனை  கற்றுத்துருகிறது.புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்ததைப் போல நமக்கு நோயுறும் போதுதான் யார் நமக்கு நெருக்கமானவர்கள்,யார் நம்மை  பயன்படுத்தி கொண்டவர்கள் யார் என்பது தெரிகிறது.ஒரு சைக்கிள் க்கு      தரும் முக்கியத்துவத்தைக் கூட உடலுக்கு தருவதில்லை.இயல்பாக இருக்கும் போது உடலின் அற்புதம் நமக்கு புரிவதே இல்லை.10 வயதில் காய்ச்சல் காண்பதற்கும்,30 ௦ வயதில் காய்ச்சலில் படுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.10 ௦ வயதில் காய்ச்சல் வந்தால் எல்லாருக்கும் போல எனக்கும் வந்து இருக்கிறது என்று தோன்றும்.அதே 30  வயதிக்கு மேல் வந்தால் எனக்கு மட்டும் எப்படி காய்ச்சல் வந்தது?ஒரு வேளை  சரியாகாமல் போனால் என்ன செய்வது?" போன்ற கேள்விகள் எழும்.உடனே நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி, "எனக்குனு யார் இருக்கா?" என்பதுதான்.
நோயாளியின் அழுகை பல சந்தர்ப்பங்களில் வலியால் மட்டும் ஏற்படுவது அல்ல. மற்ற நேரங்களை விட சக மனிதனின் அன்பும் நெருக்கமும் மிகத் தேவையாக உள்ள தருணம் அதுதான்!
 
அதேபோல நோயுறும் போது ஆணுக்குக் கிடைக்கும் அன்பும் அக்கறையும் பெண்ணுக்கு கிடைப்பதில்லை.பெண் நோயுறும் குடும்பங்களில் அது தேவையற்ற பிரச்சினை என்றே தோன்றுகிறது.மனைவியோ,தாயோ   நோயுற்ற நேரங்களில் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் மிக சொற்பமே...
 
ஆணோ, பெண்ணோ, நாம் தேடித்,தேடி வைக்க வேண்டியது பணத்தையல்ல ....மனித உறவுகளையே!

புதன், 13 அக்டோபர், 2010

ரசித்தல்...

ரசித்தல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி.ஆனால் நாமோ ரசித்தல் என்பதை கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கிறோம்.நம்முடைய ரசனைகள் எல்லாம் இயற்கைக்காட்சிகள்,மீன்தொட்டிக்குள் நீந்தும் வண்ணமீன்கள்,வேலைப்பாடுகளுடன் மாமனார் வீட்டில் வாங்கிக்கொடுத்த தேக்கு மரக்கட்டில்,உங்கள் காரின் பின் கண்ணாடியில் எழுதப்பட்ட 'catch me if u can' வாசகம்,உலக சினிமா DVD collections ,கிரிக்கெட்,என ஏற்பாட்டு  ரசனைகளாகவே இருக்கும்.
ரசிப்பதற்கு தகுதியான விஷயங்கள்,அதற்கான நேரம் என்று தனியே ஒரு பட்டியலோடு வாழ்ந்தால் நடை முறை வாழ்க்கையே ஒரு பெரிய வேலையைக் செய்வது போலத்தான் இருக்கும்.

அதிகாலையில் சிலர் வாக்கிங் கிளம்புமுன் காதில் வாக்மன் பொருத்தி இருப்பார்கள்.நடக்கிற களைப்பு தெரியாமல் இருக்கவும்,சுகமான பாடல்களை கேட்பதுமாக நேரத்தை செலவிடுவது நல்ல திட்டம்தான்.
ஆனால் காலையில் எழுந்து நடப்பது என்பதே சுகமானதுதானே? அப்புறம் என்ன காதில் வாக்மான்? களைப்பு தெரியாமல் இருக்கவா?
செய்கிற வேலையோடு இன்னபிற விஷயங்கள் ரசிப்புக்குரியன  அல்ல என்ற தீர்மானம்தான் காதில் வாக்மானாக தொங்குகிறது...
பகலில் நாம் கேட்டறியா பறவைகளின் பாடல்கள்,'goodmornig சார்!' நண்பர்களின் பாசப் புன்னகை,தந்தையைப் போலவே அதே  டி   ஷர்ட் ஐ போட்டுகொண்டு தந்தையின் ஸ்டைலில் வாக்கிங் போக முயற்சிக்கிற குட்டிப்பையனின் முயற்சி,மரங்களில் சரம் சரமாக பூத்து இருக்கும் அதிகாலைப்   பூக்கள்,புதிய சுவரொட்டிகள்,..இப்படி ரசித்து அனுபவிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் கிடைக்கும் போது,தேமே என்று மூச்சிரைக்க வாகிங் போவதால் மட்டும் என்ன பயன்?
இயற்கையை ரசிப்பதற்காக இரண்டு நாள் விடுமுறையை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கோ,கோடைகானலுக்கோ போவதுதான் நம்மில் பலரது ரசனையாக இருக்கிறது."நடைமுறை வாழ்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும்.பிறகு தனியாக ரசிக்க வேண்டும்!' - இதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டம்.அதாவது இரண்டுமே வேலையாக இருக்கவேண்டும்.
அப்படி இல்லாமல் ரசிப்பதற்கு தகுதியான விஷயங்கள் என்று எதையும் பார்க்காமல் வாழ்க்கையை போகிற போக்கில் ரசிப்போமாக!

செவ்வாய், 12 அக்டோபர், 2010

சவால்கள் தேவை!!!!

ஜப்பானில் மீன் உணவு மிகப் பிரசித்தம்.அதனால் மீன்சந்தை நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்தது.ஒரு சமயம்,ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் மீன்வளம் குறைய ஆரம்பித்தது.மீனவர்களுக்கோ ஒரே கவலை! சரி, மோட்டார் படகுகளில் வெகுதூரம் போய் மீன்களை பிடித்து வரலாம் என்று போனார்கள்.அப்பாடா!  நிறைய மீன்கள் கிடைத்தன. ஆனால் அவற்றை கொண்டு வந்து விற்பதற்குள் மீன்கள் வாடிவிடவே மீன்கள் தேங்கி விட்டன.
பின்னர் மீன்களை பிரெஷ் ஆக வைக்க ப்ரீசர் பெட்டிகளை பயன்படுத்தினார்கள்.அப்போதும் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.
இறுதியாக ஒரு ஐடியா செய்தார்கள். அது க்ளிக்காகி விட்டது.மீன்வியாபாரம்  ஓஹோ! 
எப்படித்தான் சமாளிச்சாங்க அந்த சவாலை?மீன்தொட்டிகளில் சுறாக் குட்டிகளை போட்டு கொண்டு வருகிறார்கள்.அந்த சுறாக் குட்டிகளிடமிருந்து இதர மீன்கள் தப்பிபதற்காக தொடர்ந்து நீந்திக் கொண்டே இருக்குமாம்.அதனால் புத்துணர்ச்சியுடன் அந்த மீன்கள் இருந்தனவாம்.
நாமும் அப்படித்தான்.எப்போதுமே வேலையும், டி,வி..ரிமோட்டுமாக நமது வாழ்க்கையின் பெரும்பகுதி இருப்பதால்,அலுப்பாகவும்,மந்தமாகவும் கழிகிறது.அவ்வபோது வரும் பண்டிகைகள்  நம்மை  உற்சாகபடுத்துகின்றன   என்றாலும் அதுவும் சில மணித்துளிகள் தான்.மற்றபடி சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுப்பாகவும்,உத்வேகத்துடனும் வைத்து இருக்கின்றன. அதற்காக பிரச்சினைகளைத்  தேடி போகவேண்டாம். நம்மிடம் உள்ள ஆற்றல்,தனித்திறமை,உழைப்பு இவை வெளிப்பட்டால் தான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு ஜெயிக்க முடியும்.அது எப்போது சாத்தியம்?தனித்து நின்று சவால்களை எதிர்கொள்ளும்போது  மட்டுமே!
நமக்கு ஒரு சுறாகுட்டி தேவை.சவால் என்கிற பெயரில்.....அப்போதுதான் தெரியும் நம்மால் எவ்வளவு தூரம் தம் கட்டி நீந்த முடியும் என்று!
இனி வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை வந்தால் கண்ணை கசக்கிக்கொண்டு உட்காராமல்,"welcome my dear  சுறாகுட்டி" என்று தைரியமாக வரவேற்போம்.
அது நம்மை,நம் நிஜங்களை நமக்கும்,ஊராருக்கும் அடையாளம்  காட்டும். 

சுற்றுலா அனுபவம்!!!!

மனிதர்களாகிய எல்லாருக்குமே சுற்றுலா ஒரு சிறந்த அனுபவத்தை தருகிறது.
ராக்கெட் தொழில்நுட்பத்தை  வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பிறகு,நிருபர்களை சந்தித்தார் அப்துல்கலாம்.அப்போது, 'உங்களுக்கு எப்போது விமானங்கள்,ராக்கெட்டுகள்  மீது ஈர்ப்பு வந்தது ?' என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் -
'என்னுடைய பள்ளி வயதில் பறவைகளின் இயக்கம் பற்றிய பாடத்தை நடத்திய ஆசிரியர், வகுப்பறைக்கு உள்ளேயே அதை முடித்து விடாமல், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்துக்கு அழைத்துக் சென்றார்.அங்கே பறவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவைகளின் இயக்கம் பற்றி சொல்ல   பிரமிப்பாகவும்,ஆச்சரியமாகவும் இருந்தது.அன்றிலிருந்து ஒரு விமானியாக வர வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது..ஆனால் அது கைகூடவில்லை.எனவே ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான துறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் முதல் விதை விழுந்தது எங்கள் ஆசிரியர் நேரடியாக பறவைகளைக் காட்டி பாடம் எடுத்ததுதான்."
எல்லாவற்றையுமே,புத்தகங்களிலும்,இணையதளத்திலும் படித்து விட முடியும்.ஆனால் நேரடி அனுபவத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
அத்தகைய அனுபவம் மனிதர்களாகிய நம் எல்லாருக்குமே அவசியம் தான்.புதிதாக நம் ஒரு ஊரில் போய் இறங்கிய உடனே பல நாட்களாக நாம் அந்த ஊரைப்பற்றி கட்டி வைத்திருந்த கோட்டை பொலபொலவென இடிந்து விழுவதை நாம் உணர முடியும் - ஈகோ முதற்கொண்டு!
அதுதான் சுற்றுலா சொல்லித் தரும்  மிகப்பெரிய பாடம்.
அதற்காக சுற்றுலா என்றதுமே பக்கத்து வீட்டுக்காரர்கள் இந்த வருடம் குலுமனாலி போனார்கள்,நமக்கு அந்த அளவு போவதற்கு வசதி இல்லை என்று அலுத்துக்கொள்ள வேண்டியதில்லை.நம் வசதிகேற்றபடி நமக்கு அருகிலேயே எத்தனையோ ஊர்கள் இருக்கின்றன.அங்கேயும் நாம் தெரிந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.
"குனியும் போது புத்தகம் படி..
நிமிரும்போதும் உலகம் படி.."
என்ற வைரமுத்துவின் வார்த்தைகளின் படி உலகத்தைப்  படிப்போமாக!.

சினிமா...

இது விஞ்ஞானம் அனுப்பி வைத்த
வித்தியாசமான
வெளிச்ச கருவி!
நாம்தான் அதை
இன்னும்
இருட்டிலேயே
காட்டிக்
கொண்டிருக்கிறோம்!
 
வயல்களில்
சிந்துவதை விட
திரை அரங்குகளின்
வாயிலில்
சிந்தும்
வியர்வைதான்
அதிகம்!
 
உழைத்து முடித்து
வீடு திரும்பும் நாங்கள்...
ஓய்வு  என்று சொல்லி
சினிமா கொட்டகையில்
போய்
விற்றுவிட்டு 
வருகிறோம்
எங்களின் உழைப்பை! 
 
பொழுதுகளை
காசு கொடுத்து
விற்கிறோம்!
கனவுகளை
காசு கொடுத்து
வாங்குகிறோம்!
 
நிஜத்தில் உழைக்காமல்
நிழலில்
ஜெயிப்பதை
நம்புகிறோம்!
 
அமுத சுரபியை
அடகுவைத்து
அன்னமிட்டகை
பார்க்கிறோம்!
 
வன்முறை யாகம் வளர
சினிமாவிலிருந்து
நெய்
ஊற்றுகிறோம்!
 
ஜாதிக்
கரையானுக்கு
சினிமாவில்
புற்றுகட்டி
கொடுக்கிறோம்!
 
சுவரின் நிர்வாணம்
மறைக்க
அதன்மேல்
நிர்வாண
படங்களையே
ஓட்டுகிறோம்!
 
அம்மா
என்பதற்கு
பதிலாக...
எங்கள் குழந்தைகளுக்கு
'அன்பே...'
என்றுதான்
சொல்லிக்கொடுகிறது
சினிமா!
 
நிழல்
காதலுக்கு
பூமாலை
சூட்டிவிட்டு,
நிஜக்காதலுக்கு
தூக்குகயிறு
தயாரிக்கிறோம்!
 
இந்த
சினிமா என்னும்
அற்புதமான கல்லை
சிற்பமாய்
செதுக்குவதற்கான
 உளியை
ரோகிகளின் கையில்
கொடுத்தது யார்?
 
ஒன்று
சிற்பியை
மாற்றுவோம்...
இல்லையேல்
உளியை
உடனடியாக கைப்பற்றுவோம்! ......   பவானிதாசன்.
 

வியாழன், 7 அக்டோபர், 2010

சினிமா அபத்தங்களின் பட்டியல் சில...

இரட்டைப் பிள்ளைகளில் ஒருவர் கெட்டவராக இருப்பார்.
 
ஹீரோ போலீசா இருந்தா,வேலையில் இருந்து நீக்கப்பட்டதும் தான் குற்றவாளியை கண்டு பிடிப்பார்.
 
ஹீரோயின்  சேலையை வில்லன் பிடுங்கியதும் எங்கிருந்தாவது ஓடி வந்து தன்னுடைய சட்டையை கழட்டிக் கொடுப்பார்.உடனே அடுத்த சீனில் ஹீரோயின்  அரைகுறை ட்ரெஸ்ஸில்  ஆட இவரும் கூட ஆடுவார்.
 
ஹீரோவோ,ஹீரோயினோ கடைசி நேரத்தில்.. அதிலும் ரயில்வே ச்டசிஒனில்   தான் ஒன்னு சேருவார்கள்.
 
ஹீரோ அடிவாங்கும் போது கூட முகத்தை சுழிக்க மாட்டார்.ஆனால் தாயோ கதாநாயகியோ காயத்தை துடைத்தால் வலியால் துடிப்பார்.
 
வெடிக்கப் போகும் வெடிகுண்டின் இரண்டு வயர்களில் எதை கட் பண்ணுகிறாரோ அதுதான் சரியாக இருக்கும்.
 
முந்தானைத் தலைப்பு நழுவியதும் ஹீரோவிடம் வெட்கப்படும் ஹீரோயின்,இந்தப் பக்கம் திரும்பி நம் எல்லாருக்கும் காட்டுவார்.
 
வில்லன்  என்ன செய்தாலும் பொறுமையாக இருக்கும் ஹீரோ,தன் மனைவியின் தாலியோ,அல்லது தங்கச்சியின் கற்போ???பறிபோகபோகிறது என்றால்,அப்படியே ஆவேசமாகிவிடுவார்.
 
பார்ப்பவர்களுக்கு ஓவர் செண்டிமெண்ட் டச் கொடுக்கணுமா?உடனே கர்ப்பிணிப் பெண் கதறுவதைக் காட்டுவார்கள்.
 
ஹீரோக்கள் எல்லாரும் சமுதாயத்தை பற்றின அக்கறையோடு இருக்க,ஹீரோயின்கள் மட்டும் சிறுகுழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு,ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டு  இருப்பார்கள்.
 
(வெறுப்பா இருக்கு...கொஞ்சம் திருந்துங்கப்பா..)

புதன், 6 அக்டோபர், 2010

புத்துணர்ச்சி தேடி....

இன்றைய உலகில் குறைந்த நேரம்,அதிக வேலை,போட்டிகளுக்கிடையே ஜெயிக்கும் சவால் என்று நம் வாழ்க்கை முறை அவசரமும் டென்சனும்  நிறைந்ததாக மாறிப் போய்விட்டது!...
நாம் அமைதியாக வாழ நினைத்தால் கூட நம்மைக் சுற்றி இருக்கும்  சூழல், அப்படியே தனதாக்கிக்  கொண்டு அதன் டென்சன் களை   நமக்கும்  உள்  செலுத்துகின்றது. 
இதிலிருந்து ரிலாக்ஸ் செய்யத்தான்  நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி தேடி நகைச்சுவை சீன்களை விரும்பி பார்க்கிறோம்.ஆனால் தேவை இருக்கும் அளவுக்கு நமக்கு பார்ப்பதற்கோ ,படிப்பதற்கோ  நிறைய நகைச்சுவை விஷயங்கள் இல்லை என்பதுதான் நிஜம்.
வேலைகளை முடித்து விட்டு சற்றே ரிலாக்ஸ் ஆக காமெடி சீன்களை போட்டுப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.திரும்ப,திரும்ப அதே காமெடி சீன்கள்!..
தேவை ஏற்பட்ட அளவுக்கு சரக்கோ,அதைப் படிப்பவர்களோ இல்லாததுதான்!அதிலும் பெண்கள் என்றால் இன்னும் குறைவு!
எனவே அழுகை சீரியல்கள் எடுக்கும் தொலைக்காட்சி தொடர்இயக்குனர்கள், தங்கள் கவனத்தை நகைச்சுவைத் தொடர்களுக்கு திருப்பினால் ௯௦% மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!...
 
"நகைச்சுவையாக நாம்சிந்தித்து,  எல்லா விஷயங்களையும் லைட்டாக  எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்க்கைப் பாதையையே கூட மாற்றக் கூடும்."

சனி, 2 அக்டோபர், 2010

Energy Level ஐ அதிகரிக்கும் எந்திரன்!!!!!

எந்திரன் படமாகட்டும்..இல்லை கிரிக்கெட் ஆகட்டும்,ரெண்டுங்கெட்டான் வயதில் இருப்பவர்கள் ஏன் அவ்வளவு உற்சாகம் ஆகிறார்கள்? அதற்கு காரணம் ரஜினியோ இல்லை கிரிக்கெட்டோ   அல்ல. exitement ஆவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு  சுரக்கும் ஹார்மோன்களே ஆகும்.ஆம்,இளம்வயதினருக்கு testosterone என்றhormone அதிகமாக சுரப்பதால் அவர்களுக்கு ஒரு விதமான த்ரில்லிங்  ஓ    இல்லை புத்துணர்ச்சியோ  தேவைப்படுகிறது..எனவே எல்லோரும் ரசிக்கும் விஷயங்கள் அவர்களுக்குள்ளும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு அவர்கள் இந்த மாதிரி விஷயங்களில் லயிக்கும் பொது அவர்களின் hormone level அதிகம் ஆகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.எனவே  தான் பெரும்பாலும் ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு,சேவல் சண்டை போன்ற விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கிறது.பெண்களுக்கு அதில் அவ்வளவாக நாட்டம் இருக்காது. இவர்களின் இந்த மாற்றங்களால், கிரிக்கெட்டும் எந்திரனும் மற்றும் உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் இன்னபிற விஷயங்களும் குளிர்காய்கின்றன..அவ்வளவே.

புதன், 29 செப்டம்பர், 2010

ரியாலிட்டி ஷோ !!!!!!

நமக்கு நிச்சயம்  பேச்சுரிமை வேண்டும், நம் பிரச்சினைகளைப் பகிரவும்,உரிமையைப் பெறவும் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.ஆனால் அதை யாரிடம்,எப்போது,எதற்காக,என்னென்ன பேசலாம் என்ற வரைமுறை உள்ளது.நம்மில் பலரும் இது தெரியாமல்,பயனில்லாத,சபை அறியாத வீண்  பேச்சை தொலைகாட்சிகளில் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
டி.வி மோகத்தால் தூண்டப்படும் இந்த அசட்டுத்தனத்தை,மீடியா காசாக்கிகொள்கிறது என்பதைத் தவிர இதில் வேறந்த பயனும் இல்லை.அதை விட நாம் வாய் மூடி மௌனமாய் இருப்பதே மேல்.
நம்மை காமெரா முன்னால் பேசத்தூண்டுவது எது?எப்படியாவது டி.வி  இல் தலை காட்டிரணும்  என்கிற அல்ப ஆசைதான். இதில் தப்பில்லைதான்.ஆனால் எடிட்டிங் சமயத்தில் நடப்பது என்ன?ஒரு மேடையும்,கையில் மைக்கும் கிடைத்த உடன் ஒரு உணர்ச்சி வேகத்தில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
"வாவ்!சூப்பர்!ஹேட்ஸ் ஆப்! " என்றெல்லாம் சுடச்சுட பாராட்டப்பட்டு,கைதட்டல்களும் கிடைத்ததும்,போதை மெல்ல ஏற ஆரம்பிக்கிறது.
"அப்புறம்...என்ன நடந்தது? ரியல்லி?  கமான்! ஓப்பனா பேசுங்க!"என்று உசுப்பல்கள் தொடரவும்,கட்டுப்பாட்டை இழந்து எமோசனல்  ஆகி , அடக்க முடியாமல் கொட்டித் தீர்த்து விடுகிறார்கள்.நிகழ்ச்சிக்கு முன்  சொல்ல  நினைத்தது ஒன்று! நிகழ்ச்சியிலே சொல்லி முடித்து ஒன்று!
இந்த நிகழ்ச்சியிலே  பங்கு கொண்டு பேசிய அனைவருக்குமே அக்கம்பக்கத்தினர்,உறவினர்,நண்பர்கள்,அலுவலக ஆட்கள் என நிறையப் பேர் இருக்க கூடும்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்  நம்மைப்  பற்றின அபிப்ராயம் அவர்களிடம் எப்படி இருக்கும்?
கதை அல்ல நிஜம்

திங்கள், 27 செப்டம்பர், 2010

தன்னம்பிக்கை...தலைக்கனம் அல்ல!

இன்று உலகின் புகழ் பெற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை கட்டி ஆள்கிறார்கள் பெண்கள்.நிமிர்ந்த நன்னடையும் ,நேர்கொண்ட பார்வையுமாக வளைய வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு சமுதாயம் குத்தும் முத்திரை "தலைக்கனம்" பிடித்தவள் என்று! ஏனிந்த குற்றச்சாட்டு?ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து தன் திறமையால் மட்டுமே இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ள பெண்களை நோக்கி குற்றச்சாட்டுக்களை வீசுவது நியாயமே இல்லை.ஒரு காலத்தில் பெண்கள் தங்களை உயர்த்திக்கொள்ள வழி தெரியாமல்,கூட்டுக்குள் நத்தையாக சுருங்கி கொண்டார்கள், மிகச்சிலரைத்தவிர..ஆனால் இப்போதுள்ள பெண்கள்
 தங்களை மதிக்காத உறவுகளையும்,சமூகத்தையும் துச்சமாக ஒதுக்குகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.இது புரியாமல்' பெண்ணின் மனம் ஆழம்','அதை அறிவது கடினம்' என்று கதை பேசிக்கொண்டு இருக்காமல் அவர்கள் பீலிங்க்ஸ்   ஐ புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு நாமும் மற்றவர்களைப் போல "அவ முன்ன மாதிரி இல்ல,சம்பாதிக்கிற திமிர்,யாரையும் மதிக்க மாட்டேங்கறா     "போன்ற குற்றச்சாட்டுக்களை வேலைப் பார்க்கும் பெண்ணின் மீது வீசுவதை தவிர்க்க வேண்டும்.
 இப்போதுள்ள தலைமுறையினர் தங்களைத் தாங்களே தட்டி,தட்டி முன்னுக்கு வந்துள்ளார்கள்.
எனவே அவர்களின் தன்னம்பிக்கையைத் தவறாக புரிந்து கொள்ளாமல்,அந்தப் பட்டாம்பூச்சிகளைத் தட்டிக் கொடுத்து ரசிப்போம்!!

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பெண்களின் சிறை அறைகள்!!!!

காலோடு தலை தெரியாமல் போர்வைக்குள் தஞ்சம் புகுந்த காலமெல்லாம் பெண்களுக்கு நீடித்தது இளமை வரைதானே??? 'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...காலம் இதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே...' என்ற பத்மினியின் பழைய சினிமா பாடலின் படி குழந்தையாக இருந்தவரை மட்டுமே நம்மை தூங்க செய்தார்கள்.அதன் பின்..?
வாழ்க்கைப் பயணத்தில் பிரியமான விஷயங்களை இழப்பது இயல்பு.ஆனால், இப்படி இழந்த பட்டியல் ஆணுக்கானதை விட பெண்ணுக்கு எப்போதுமே மிக அதிகம்.தூக்கத்தை தொலைக்கிறோம்.தோழிகளை இழக்கிறோம்; அடையாளங்களை,ஆசைகளை,கனவுகளை,பிரியமானவற்றை,கவிதை எழுதுவதை,பாஸ்கட் பால் ஆடுவதை,சத்தம் போட்டு சிரிப்பதை என்று பல நூறு விஷயங்களை நடுவிலேயே விட்டு விட்ட எத்தனை,எத்தனைப் பெண்கள்????
விட்டு விடப் பெரிய காரணம்....நம் வீடுகளின் அக்கினி மொழியில் இருக்கும் சிறிய சமையல் அறைகள் தன.அரைப்பதும்,கரைப்பதும்,போதிப்பதும்,பொறிப்பதும்,வருப்பதும்,வடியபோடுவதும்,வேகவைத்து உரிப்பதுமாக திரும்ப திரும்ப நிகழும் சமையல் அரை வேலை,கையில் அள்ளிய நதி நீர் போல் நம் கண் முன்னே நம் வாழ்வின் நேரங்களை எல்லாம் நம்மிடமிருந்து  ஒழுகச் செய்து விடுகின்றன.
நல்ல வழியாக இந்த முப்பது ஆண்டுகளில் மிக்சி ,கிரைண்டர் ,குளிர்சாதனப் பெட்டி,காஸ் அடுப்பு என நம் சமையல் அறையில் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.ஆனாலும் மாறாதது பெண்களின் மூலையில் எல்லாப் பகுதிகளிலும் ஓடிக்கொண்டு இருக்கும் சமையல் செய்திகள்.
'சமையல் வேலைப் பகிர்வு என்பது குடும்பத்தின் ஒவ்வொரு  நபருக்குமான பொறுப்பு' என்ற உணர்வை உருவாக்குவது மட்டுமே பெண்ணின் மீது காலம் சுமத்திய இந்த கல்வாரிப் பயணத்தை எளிதாக்கும் வழி!

உதிர்ந்திடும் சருகுகள்!!!

வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு  அடையாளமாக...
கவனித்துக்கொள்ள  மட்டுமே  நாங்கள்
கவனிக்கப்பட அல்ல,
 
வீசப்படும் வார்த்தைகளை
வலிக்காமல்
தழுவி எடுத்துகொள்ளப்
பழகிவிட்டோம்.
 
சுமந்து எம்மை மறுநாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
 தள்ளாடும் நாட்கள்!
 
முதிர்ந்ததும் உதிர்ந்து விடும்
 மந்திரம்  தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து  ஒதுங்கும்
இங்கிதமும் தெரியவில்லை.
 
மனவலியின் அழத்தத்தில்
உடல் வலி மறக்கிறோம்.
உடல் வலியின் உக்கிரத்தில்
 மனமிருப்பதையே மறக்கிறோம்.

புதன், 22 செப்டம்பர், 2010

நீதித்துறையின் அநீதி!!!!

ஒரு நாட்டின் அஸ்திவாரமே நீதித்துறை தான்.ஆனால் அந்த அஸ்திவாரமே ஆடிக்கிடக்கிறது.
1996 ஆம் ஆண்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை சேர்ந்த முகமது என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வை எழுதிவிட்டு விடுமுறைக்காக உறவினர் வீடிற்கு சென்றான்.அங்கு லஜ்பத் நகரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.அபோது அவனுக்கு வயது 15. தனது படிப்பையும்,வாலிபத்தையும் 14 வருடங்களாக தொலைத்த அந்த வாலிபனை,கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் 'நிரபராதி'என்று நீதி(!) மன்றம் தீர்பளித்துள்ளது.இடைப்பட்ட காலத்தில் அவன் கைதான அதிர்ச்சியில் அவனது தந்தை,அக்கா  இருவரும் இறந்து போனது சோகத்தின் உச்சம்.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கபட்டு விடகூடாது' என்றெல்லாம் வக்கனையாக பேசும் அரசியல்வாதிகளே...நீதிமான்களே...ஒரு நிமிடம் யோசியுங்கள்.உங்களின் நீதி..ஆள் பலமும்,பணபலமும் இல்லாத அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கையில் மட்டுமே விளையாடிக்கொண்டு இருக்கிறதே...ஏன்?
அதே போல் தான் போபால் விஷவாயு கசிவு காரணமாக பல்லாயிரக்கணக்கான பலி கொண்ட வழக்கின் தீர்ப்பு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையும்,கொஞ்சம் அபராதபணமும் தான். 

சினிமாவில் கிழட்டு கதாநாயகர்களின் அட்டகாசம்!!!!!

திரைப்படம் என்பது அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு பொழுது போக்கு மீடியா.ஆனால் அதிலும் ஆணாதிக்க சிந்தனை ஓங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
 பேத்தி வயதில் இருக்கும் இளம்பெண்களோடு டூயட் பாடும் கதாநாயகர்கள் தான் நடிகர் திலகம்,உலக மகா நாயகன்,புரட்சி கலைஞர்,என்றெல்லாம் விளிக்கபடுகிறார்கள்,
ஏன் விஜய்,சூர்யா,அஜீத் போன்றோர்கள் குஷ்பூ,அம்பிகா,ராதிகா இவர்களோடு ஜோடியாய் ஆடினால் நங்கள் மட்டும் பார்க்க மாட்டோம் என்றா சொல்கிறோம்?அட போங்கப்பா...

இவர்களைப் போன்றவர்களின் ஆணாதிக்க மனோபாவம் தான், மகள் வயதில் இருக்கும் பெண்ணிடமும்,தனக்கு கீழே கல்வி கற்கும் மாணவிகளிடமும் தவறு செய்யத் தூண்டுகோலாக அமைகிறது.
!”  செமகட்டை! சூப்பர் பிகர்! சரியான துண்டு! என்பன போன்ற சமூக வார்த்தைகளின் புழக்கத்திற்கு மூலகாரணம் தமிழ் சினிமா என்பதை நாம் எப்படி மறுத்துவிட முடியும்?
தமிழ்சினிமா பெண் உலகத்தை இத்தனை இழிவு செய்த பின்பும் அவர்களுக்கு எவ்விதமான கோபமும் ஏற்படவில்லை யென்பது ஏன்?
ஒருவகையில் பெண்கள் கூட இதை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லர் அவர்களின் உளவியல் என்பது ஆணாதிக்க சிந்தனைகளினால் திசை திருப்பப்பட்டிருக்கின்றதா?
சினிமா நமக்கு மெசேஜ் சொல்லும் மீடியா அல்ல என்று சிலர் கூறினாலும்,
உளவியல்படி எந்த ஒரு கருத்தும் திரும்ப திரும்ப அழுத்தமாக கூறப்படுமாயின், அது நம் மனதில் நிச்சயமாக பதியத்தான் செய்யும்.சினிமா வெறும் என்டர்டைன்மென்ட் என்று கூறினாலும் நம்மில் பெரும்பாலோனோரின் பொழுது போக்கு...மீடியாக்களும்,சினிமாவும் தானே?
எனவே இந்த சினிமாகாரர்கள் திருந்தாவிட்டாலும் நாமாவது நம் வருங்கால சந்ததியினருக்கு நல்லதை எடுத்துரைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.ரெண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் நம் பிள்ளைகளிடம்,சினிமாவில் காட்டுவது எதுவும் நிஜம் அல்ல,ஆணோ,பெண்ணோ,  ஒத்த வயதில் புரிதலோடு இணைவதே நல்ல உறவுக்கு அடையாளம் என்று கூறுவோம்.
பணத்துக்கு ஆசைப்பட்டு உடல் தெரிய ஆட்டம் போடும் நடிகைகளை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் எடைபோடக் கூடாது என்று எடுத்துரைக்க வேண்டும்.ஒருசில பெண்களை இவ்வாறு மீடியாவில் காட்டுவதால் தான், நம் வீட்டு ஆண் குழந்தைகள்,   "பெண்கள் கேலிக்குரியவர்கள்,மனதில் வக்கிரமான ஆசை இருப்பதால்  தான் இவ்வாறு உடை அணிகின்றனர்...எனவே நாமும் ஏன் அவர்களை கேலியோ,கிண்டலோ பண்ணக்கூடாது" என்று தவறாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் கஷ்டங்கள்,அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது என்று புரிய வைப்பது நம் கடமையாகும். ஒரு தாய்  என்ற முறையில் நான் என் மகனுக்கு அவ்வாறு கற்றுத தருகிறேன்.
பெண்ணைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு மீடியா தவறாக சொல்லிகொடுக்கும் முன்பே நாம் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பது மேல்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மனம் என்னும் அடிமை...


இன்று ஒரு தொலைக்காட்சியில் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு கேட்க நேர்ந்தது. அவர் கூறிய அருமையான நீதிக்கதை அது.ஒரு நாட்டில் அரசர் ஒருவர் வெகு சிறப்பாக ஆண்டு கொண்டு இருக்கிறார்.அவருக்கு வாய்த்த ஒரு அடிமை அவருக்குத் தேவையான எல்லாப்  பணிகளையும் மிக அருமையாக செய்து அவரிடம் நற்பெயர் பெறுகிறான். அவனுடைய சேவையில் மகிழ்ந்த அரசர் ஒரு நாள் அவனிடம் "உனக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேள், நான் அதை நிறைவேற்றி வைக்கிறேன்" என்றார்.
அவனும் சிறிதும் யோசிக்காமல் மன்னரே நான் உங்களைபோல அரசராக தர்பாரில் ஒரு நாள் மட்டும் வீற்றிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.
அதைக் கேட்ட அரசர் அதிர்ந்து போனார்.இருப்பினும் சற்று சுதாரித்துக்கொண்டு "சரி அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டு,தன் அமைச்சர்களிடம் "அந்த அடிமை அரசரானால் அவன் ஆணையிடும் எல்லா  கட்டளைகளையும் எனக்கு நிறைவேற்றுவது போலவே நிறைவேற்றவேண்டும்" என்று கூறினார்.
அடிமையும் அரசர் ஆனான்.அவன் பதவியேற்ற மறுகணமே அரசரின் தலையைத் துண்டிக்க  வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.அனைவரும் அதிர்ந்தனர்.ஆனாலும் அவன்தானே இப்போது அரசன்?..எனவே வேறு வழியில்லாமல் அவன் கட்டளைப்படி தண்டனையை நிறைவேற்றினர்.அதன் பின் அவனே மீதியான காலங்களில் அரசராக இருந்தான்.இது ஒரு விபரீதக் கதைதான்.
இதை போன்றதுதான் நம்முடைய வாழ்கையும்.இந்த கதையில் வருவது போல நாம் தான் அரசர்கள்.நம்முடைய மனம்தான்  அந்த அடிமை. நம்மில் நிறையப் பேர் அந்த அரசனைப் போல மனம் நமக்கு விரும்பினதைச் செய்தவுடன்,அந்த மனதை அரசராக்கி விடுகிறோம்.ஆனால் அதன் பின் வரும் விளைவுகளைப் பார்த்தால், நாமும் அந்த அரசனைப் போல செத்து விட நேர்கிறது..ஆம்,மனம் என்னும் அடிமை சொன்னவாறு செய்தால்,நம்முடைய தகுதி,ஆளுமைத்திறன்,பாரம்பரியம் எல்லாமே செத்து விடுகிறது.
நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாம் விழித்து இருக்கும் போது எடுக்கப்பட வேண்டும்.மனம் என்னும் அடிமையின் வசம் ஒப்படைத்த பின்னர் நமக்குள் இருக்கும் நியாய தர்மங்கள் செத்து விடும்.
எனவே  தான்  குடிப்பழக்கமோ,புகைப்பிடிக்கும் பழக்கமோ முதலில் ஆரம்பிக்கும் போது நம்  அறிவு அதை ஏற்றுக்கொள்ள மறுத்து உடலின் வழியே வெளித்தள்ளுகிறது. ஒவ்வாமை ஏற்படுகிறது.அதையும் மீறி நாம் மனம் சொன்னபடி செய்தால் அந்த அரசரைப்  போல செத்தவர்களாகி விடுவோம்.
         "கண் போன போக்கிலே கால் போகலாமா...
           கால் போன போக்கிலே மனம்  போகலாமா..."

இது பண்டிகைக் காலம்!!!!

அனைவரும் போனஸ் கிடைத்த கையோடு  ஷாப்பிங் செய்ய,பொருட்கள் வாங்க  என்று படுபிசியாக போகும் நேரம்...கடைகளில் வண்ண,வண்ண ஆடைகள்,நகைகள்,இன்னும் எல்லாவிதமான பொருட்களும் இழுக்கத்தான் செய்யும்.அதற்காக கண்ணை மூடிக்கொண்டு இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி குவித்துவிட்டு "ஆத்திரத்தில் காரியம்,நிதானத்தில் சங்கடம்"என்று பிற்பாடு நெளிய வேண்டுமா ?
பொருட்கள் வாங்குவதில் தேவை,வசதி,ஆடம்பரம்,என்று மூன்று வகையாக நிபுணர்கள் பிரித்து இருக்கிறார்கள்...இதில் தேவை என்பதை எவ்வளவு அழகாக முன்னிறுத்தி இருக்கிறார்கள்?
'இந்தப்பொருள் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்றால்,கண்டிப்பாக அதை வாங்கலாம்.முடியும் என்றால் தள்ளிபோடுங்கள்.அதை விடுத்து எல்லாவற்றையும் வாங்கி குவித்தால் பிறகு ஒவ்வொரு மாதமும் போகி தான் கொண்டாடனும்!!!!!
'மனைவி செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் சம்பாதிப்பவரே  சிறந்த கணவர்,கணவரின் வருமானத்துக்கு உள்ளாக     செலவு செய்பவரே சிறந்த மனைவி' என்பார்கள்!!!!!!!!

எதற்கெடுத்தாலும் டூ வீலர் தான்!!!!

டூ வீலர் ஓட்டும்  இல்லத்தரசிகளே..வேலைக்கு போகும் பெண்களுக்கும்,கூட்டுகுடும்பத்தில் இருப்பவர்களுக்கும்  வேலைச்சுமை அதிகம் இருக்கும்.அவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை செய்து முடிக்க முடியாது என்று டூ வீலர் வைத்துகொள்ளலாம்,தப்பில்லை.ஆனால் தனிக்குடும்பமாக   இருக்கும் பெண்களுக்கு கணிசமான அளவு நேரம் கிடைக்கும்.எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும்,மதியம் லஞ்ச் கொடுப்பதற்கும்  என்று எதற்கு எடுத்தாலும் டூ வீலரை  பயன்படுத்தாதீர்கள்.அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பதாக  நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.  அது தவறு.அது உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்காது,மாறாக சோம்பேறித்தனத்தை    தான்  வளர்க்கும்.ரெண்டாவது பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து இருக்கும்  இந்த நேரத்தில் பணத்தின் அருமையை உணர்ந்தும்,எரிபொருள் சிக்கனத்தை நினைத்தும்,முடிந்தவரை நடக்க பழகுவோம். 

வியாழன், 16 செப்டம்பர், 2010

தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு!!!!

"இல்லத்தரசிகளின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது.வீடு வேலைகள் குழந்தைகளின் படிப்பு,கணவரின் ஆரோக்கியம்,என்று அவர்கள் பணத்துக்காக இந்த அன்பையும்,உழைப்பையும் கொடுக்கவில்லை.கொடையாக(gruduity) வழங்குகிறார்கள்.எனவே அவர்கள் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பாக இல்லத்தரசிகளுக்கும்  இனி சம்பளம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம்   வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது .இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர் பட்டியலில் வைத்திருப்பது அதிர்ச்சிகரமானது.
2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இல்லத்தரசிகளை பிச்சை எடுப்பவர்கள்,விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் சேர்த்துள்ளனர்.இது பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.வேலைக்குச் செல்லும் கணவனின் வருமானத்தில் பாதியை,வீட்டையும்,குழந்தைகளையும் கவனிக்கும் அவருடைய மனைவியின் பணிகளுக்கான சம்பளமாக மதிப்பிட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிலும்  கிராமப்புற பெண்கள் தண்ணீர் எடுப்பது,விறகு சேகரிப்பது,சாண  எரு  தயாரித்து சமையலுக்கு பயன்படுத்துவது,தேவையான காய்கறிகளை தோட்டத்தில் வளர்ப்பது என எக்கச்சக்க வேலைகள் செய்கின்றனர்.இதெல்லாம் பொருளாதார சேமிப்புதானே?
எனவே இல்லத்தரசிகளே "வேலைக்கு எல்லாம் போகல.வீட்டுல சும்மாதான் இருக்கேன்  "என்ற தாழ்வு மனப்பான்மை இனி வேண்டாம்.உங்கள் உழைப்புக்கு,அக்கறைக்கு,அன்புக்கு,தியாகத்துக்கு காலம் பல கடந்து மரியாதை கிடைத்து இருக்கிறது இந்த தீர்ப்பின் மூலம்!!!!!
 

பொதுமக்களுக்கு ஓர் யோசனை!!!!

இப்போதுள்ள சூழலில் எங்குப் பார்த்தாலும் வழிப்பறி  ,கொள்ளை,.இதற்கு நாம் தீர்வு காணமுடியாது.ஏன் என்றால் இல்லாதவன் இருப்பவனிடமிருந்து எடுத்துகொள்கிறான்.ஆனால் அவனுக்குத் தெரியாது நடுத்தரமக்களில் பெரும்பாலோர் கடனை,உடனை வாங்கி வசதியாக இருப்பதைபோன்று சீன்போட்டுகொண்டு இருக்கிறார்கள் என்று..எனவே  Mr.பொதுசனங்களே உங்கள் வீட்டிலுள்ள நகைகளையோ,பணத்தையோ திருடன் யூகிக்குமாறு பீரோவில்  வைக்காதீர்கள்.வேறு எங்காவது வீட்டிற்குள்ளேயே   வைத்தால்  கண்டு பிடித்து எடுப்பது சிரமம்.

வரதட்சணைச் சட்டத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்!!!!

வரதட்சணைச்   சட்டத்தின் சில பிரிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  நாடாளுமன்றம் பரிந்துரைத்திருகிறது..இதில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் நிறைய இருக்கிறது என்பது உண்மைதான்.சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவாகும் வழக்குகளில் 40 சதவீதம் உண்மையில்லை என்று தெரிகிறது.இது பெரும்பாலும் நடுத்தரக்குடும்பங்களில் மட்டுமே நடக்கிறது.ஆனால் எத்தனையோ ஏழைக்குடும்பங்களில்       வரதட்சணைக் கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன.இரண்டாவது பெரும்பாலான பெண்கள் ,கணவரையோ,அவரது குடும்பத்தினரையோ சிறைக்கு அனுப்பும் நோக்கத்துடன் வழக்கு தொடருவது இல்லை.தங்களுக்கும்,தங்கள் குழந்தைகளுக்கும்சட்ட ரீதியாக  கிடைக்க வேண்டிய சீர்போருள்கள்,நகைகள்,ஜீவனாம்சம் போன்றவற்றைத்தான் பெற விரும்புகிறார்கள்.எனவே இந்தச் சட்டம் இல்லையென்றால் பணிக்குப் போகாத பெண்களின் நிலை பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் கேள்விக்குரியதாகிவிடும்.
அதிலும் காவல்துறையினரால் குடும்ப வழக்குகள் புறக்கணிக்கபடுகின்றன   என்பதும் ஒரு கசப்பான உண்மை.என்னவாக இருந்தாலும் குடும்பத்தினரே உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ள காவல்துறையினரால் நிர்ப்பந்திக்கப்  படுகின்றனர். தீர்த்து வைக்கவே முடியாத சில பிரச்சினைகளில் காவல்துறையினர் இப்படி மெத்தனமாக இருப்பதால்  தான் அது குடும்ப வன்முறையிலோ,கொலையிலோ போய் முடிகிறது.இப்போது பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினைகள் காரணமாகத்தான் நிகழ்கிறது.எனவே வரதட்சணைச் சட்டத்தில் திருத்தம் அவசியமற்றது.
எந்தச் சட்டமும்,குறிப்பாக தீண்டாமைகெதிரான சட்டம்,பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றவைக் கூடத்தான் தவறாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது.அதற்காக இவற்றை எல்லாம் நீக்கிவிட முடியுமா    என்ன?

பணத்தைக் கையாளும் முறை....

பொதுவாகவே பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லி  தரும் நம் சமூகம் ,அதைக் கையாளுவதுக் குறித்து தெளிவாகச் சொல்வது இல்லை.அப்பாவின் பணத்தை செலவழிப்பதில் இருக்கிற சுகமும்,தன பணத்தை செலவழிக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.
முக்கியமாக இன்றைய மாணவச் சமுதாயத்தினருக்கு  வெளிநாட்டினரைப் போல படிக்கும் போதே பணி செய்யும் சூழல் அமைய வேண்டும்.பணத்துக்காக மட்டும் இன்றி, வாழ்க்கையைப் பற்றிய புரிதலுக்காகவும்,சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும் சுயத்தை மேம்படுத்தவும் இது உதவும்.வெளிநாட்டினரின் எல்லா கலாசார முறையையும் பின்பற்றும் நமக்கு இதையும் நம் வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

தற்கொலை அந்த மணித்துளியின் முடிவல்ல...

2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின்படி 14 வயதுக்குட்பட்ட 30௦ ஆண்குழந்தைகளும், 80 பெண்குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்..என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
தற்கொலை என்பது , எங்கோ,யாருக்கோ நடக்கும் நிகழ்வு அல்ல.நம்மைச்சுற்றி இருக்கும் உயிர்கள் அப்படி முடிவெடுக்கலாம்.அல்லது முடிவெடுக்கத் தள்ளப்படலாம்.
எனவே பிள்ளைகளை பொக்கிஷமாக வளர்ப்பதை விட ...அவமானங்கள்,தோல்விகள்,பிரச்சினைகள் என்று எதையும் கடக்கும் மனப்பலத்துடன்   வளர்ப்பது நல்லது..இபோதுள்ள கலாச்சாரத்தின் படி பணம்,புகழ்,அழகு இவைதான் வெற்றி என்கிற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.அதை இன்றைய இளையதலைமுறையினரின் எண்ணத்தில்  இருந்து அகற்ற வேண்டியது பெற்றோர்களது பொறுப்பு  தான்.
நம்முடைய அன்பும் அரவணைப்பு மட்டும் கிடைத்தால் போதும்.அவர்கள் கேட்டதை எல்லாம் செய்வதுதான் அன்பு என்று எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கிகொடுத்தால் நாளைக்கு அவர்கள் ஒரு கஷ்டமான சூழலை சந்திக்கும் போது மனம் உடைந்து போவார்கள்.எனவே பிள்ளைகள் மனதில் நம்பிக்கையை வளருங்கள்.

புதன், 15 செப்டம்பர், 2010

வாழ்க்கைப்பற்றிய சரியான புரிதல்.....

நம்முடைய குழந்தைப்பருவம்,இளைய பருவம்,நடுத்தர பருவம் என எத்தனையோ பருவங்களை ரசித்து சந்தோஷமாக வாழும் நாம்,முதுமைப்பருவம் எட்டிப்பார்த்தால் மட்டும் நடுநடுங்கிப்போகிறோம்.ஒதுக்கிவிட்டு ஓடப்பார்க்கிறோம். இளமைப்பருவம் எப்படி இயற்கைத் தந்த வரமோ...அதுபோலத்தானே முதுமைப்பருவமும்?எனவே அதை இனிமையாக்குவது முதுமையைத் தொட்டவர்கள்,தொட இருக்கிறவர்கள் இருவரின் கைகளில் தான் இருக்கிறது!

நிம்மதியும் மகிழ்ச்சியுமான வாழ்க்கை.....

இன்று தினசரி பத்திரிகையை படித்தால் திருமணம் தாண்டிய உறவு காரணமாக கொலை,தற்கொலைகளின் லிஸ்ட் பெரிதாக உள்ளது.
ஒரு கணவனும் ,மனைவியும் முடிந்தவரை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்.ஆனால் அதையும் மீறி உணர்வு ரீதியான பிரச்சினைகளையும்,சவால்களையும் சமாளிக்க தெரியாமல்  போகும்போது ஒன்று அவர்கள், உடல் ரீதியிலும், மனரீதியிலும் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள் .இயல்புக்கு மாறாக சிடுசிடுப்பு, எரிச்சல்,அடுத்தவர் சந்தோஷத்தை பொறுக்காமல் போவது,இளம் வயதிலேயே டயபடிஸ்,பிரஷர்  போன்றவற்றை எல்லாம்  பெறுவது இதன் பாதிப்புகளே..
அந்த நேரத்தில் உறவை விட்டு வெளியே கேரக்டரை சந்திக்கும் போது அவர்கள் சேர்ந்து வாழ்வதில் என்ன  தவறு இருக்க முடியும்?
சொல்லப்போனால் முறையற்ற உறவுகளில் சிக்கி தடம் புரளாமல் இருக்க இந்தவகையான முறையான திருமணம் செய்வதில் தவறு இல்லை.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

நமக்குள்ளே இருக்கு குழந்தை உள்ளம்...

'அமைதியாக யோசித்துப்பாருங்கள்..நம் எல்லோர் மனதுக்குள்ளேயும் ஒரு குழந்தை நிச்சயமாக இருக்கும். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்த குழந்தையை சிரிக்கவைக்கிறோம்?நொடிபொழுதும் ஓய்வில்லாமல் ஓடிகொண்டே இருக்கிறோம்.
பள்ளி,கல்லூரி நாட்களில் நாம் அனுபவித்த  தருணங்களை     மீண்டும்  வாழ்க்கையில் கொண்டு வர அடிக்கடி ஜாலி டூர் செல்லுங்கள்..நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்கிற நேரம் அது.
அதுவும் குடும்பங்களை  பொறுத்தவரை கணவனுக்கோ மனைவிக்கோ இல்லறத்தில் ஒரு சலிப்புத்தன்மை வரும்.ஓடி ஓடி உழைப்பதால் வரும் அலுப்பு.
எங்காவது பயணம் செய்து தங்க நேரிடும் போது,அந்த கணவனின் அன்பு அருகாமை,அதே போல மனைவியின் அன்பு,அக்கறையை கணவனும்  புரிந்து கொள்ள ஒரு நல்ல  வாய்ப்பு. அதுமட்டும் இன்றி அருகாமையில் இருக்கும் மற்ற ஊர்களுக்கு செல்லும் போது அந்த மக்களைப்பற்றியும்,அவர்கள் ஊர் பற்றியும் அறிய முடியும்.வேற்று மொழியினர் என்றால் அவர்களின் மீதுள்ள ஆர்வத்தால் அந்த மொழியையும் கற்றுக்கொள்ள ஆசை வரும்.எப்பொழுது  பார்த்தாலும் சீரியல் பார்த்துக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்காமல், அதே போல் கணவர்களும் பணம் சம்பாதிப்பதையே  குறிக்கோளாக கொள்ளாமல் உலகத்தின் இன்னொரு பக்கத்தினை அறிய முற்படுவோம்.அழகான இந்த உலகம் நமக்காக நிறைய ஆச்சரியங்களை வைத்துக்கொண்டு காத்து இருக்கிறது...