ஞாயிறு, 30 மார்ச், 2014

மனதை மீட்டும் மலரும் நினைவுகள்...!!!!!

கோடைகாலம் வந்தாலே ஒரே கும்மாளம் தான் . ஊருக்கு போவதற்கு சகல ஆயத்தங்களோடு மூட்டை முடிச்சுகளோடு எங்கள் பாட்டி ஊருக்கு கிளம்பிவிடுவோம். அப்பாடா ஒரு வழியாக பஸ்ஸில் ஏறியாச்சு.முதலில் திருமங்கலம், அடுத்து கல்லுபட்டி, அடுத்து எங்கள் ஊர்தான்...ஹையா, கிருஷ்ணன்கோவில் வந்தாச்சு என்று குதியாட்டத்தோடு இறங்குவோம்......இறங்கியதும் கோடை வெயில் முகத்தில் அறையும்..அதையும் மீறி மனது குதூகலிக்கும். அங்கு இருக்கும் ஒற்றைமர நிழலில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்துகொள்ள ஆளுக்கு ஒரு தம்ளர் நன்னாரி சர்பத் குடிப்போம். ஆச்சு...இனி மெல்ல நடைய கட்டுவோம்...இரு மருங்கிலும் வயல்வெளிகளில் துவரைக் கொடியையும், தென்னைமர அணிவரிசையையும் , பார்த்துக் கொண்டே துள்ளி நடை போடுவோம்...வயக்காட்டுல இருந்து எங்களைப் பார்ப்பவர்கள் தலை உயர்த்தி நலம் விசாரிப்பார்கள்...'இளநீர் குடிக்கிறீங்களா ....கம்மங்கருது அறுத்து தரவா 'என அன்பாய் விசாரிப்பர்.

அந்த வெள்ளந்தியான அன்பில் மனம் நனையும்.....அதோடு காவால வயக்காட்டுக்கு பாய்ச்சும் நீரில் காலும் நனையும்...ஆஹா அப்படியே வெயில் மண்டையில் உரைப்பது கூட தெரியாமல்

வீடு போய்ச் சேருவோம்.

காலையில் எழுந்தவுடன் கருப்பட்டி காபி குடித்துவிட்டு ஆளுக்கு கையில் ஒரு விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு 18 அறைகள் கொண்ட அந்த வீட்டை ஆளுக்கு மூன்று அறைகள் என பிரித்துக் கொண்டு பெருக்குவோம். முடித்ததும் எங்கள் கையில் மூங்கில் கூடையைக் கொடுத்து பிஞ்சைல மிதுக்கம்பழம் பறிக்கச் சொல்லுவாங்க பாட்டி. தட்டாம் பயிறு ஊடாக வளர்ந்து இருக்கும் மிதுக்கம் பழக் கொடியைத் தூக்கி அந்த பழத்தைக் கண்டுபிடித்து பறிப்பது அலாதி சுகம்.

ஆயிற்று, வேலை முடித்து வந்த உடன் பாட்டி எல்லாருக்கும் கேப்ப ரொட்டி சுட்டுத் தருவாங்க. சாப்பிட்டதும் தண்ணி பாச்சறதுக்கு எப்போ மோட்டார் போடுவாங்க ன்னு பார்த்துட்டே இருப்போம். போட்டதும் உடனே வாளி , துணி ,சோப்பு சகிதம் கிணற்றடிக்கு கிளம்பி விடுவோம்.பம்புசெட்டுல கொட்டற தண்ணீல ஒரே குதியாட்டம் தான்.ஆளாளுக்கு தலையை பம்புசெட்டுல நீட்டி சிலிர்த்து கொள்ளுவோம். ஆசை தீர குளித்து முடித்ததும், வெளியில் வர மனசு வராது. கிணற்றுக்குள் இருக்கும் மண் படிக்கட்டுகள் வழியாக உள்ளே இறங்கி படிக்கட்டைப் பிடித்துக் கொண்டு காலை மட்டும் தண்ணீரில் நீட்டி பொய் நீச்சல் அடிப்போம்.

கிணற்றில் ஊறிய தவளைகளாக நன்றாக குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தால், பசி வயிறைக் கிள்ளும்...பாட்டி சோறாக்கி வச்சு இருப்பாங்க. ஒரு விடக் கோழிய பிடிச்சு தண்ணியா ஒரு கோழி கொழம்பும் கூடவே...ஆஹா.சப்புக் கொட்டி சாப்பிட்டு விட்டு அந்தப் பெரிய ஹாலில் ஒரேயொரு மின்விசிறியின் அடியில் எல்லாரும் படுத்துக்கொள்வோம் . அதை ஆன் பண்ணியதும் 'திடும்' என ஒரு சத்தம் வரும்..கூடவே சுகமான காற்றும்...

தூங்கி எழுந்ததும் நிலக்கடலையும், வெல்லமும் கொறிக்க கிடைக்கும்...கொறித்துக் முற்றத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, தலையில் புல்லுக்கட்டோடு வயக்காட்டுக்கு போய்ட்டு திரும்பும் தோழிகளை விளையாட அழைப்போம்.அவர்களும் சாப்ட்டு வீட்ல வேலைய முடிச்சுட்டு' டாண் ' ன்னு பொழுது கருக்க வந்துருவாங்க...

அப்புறம் என்ன ஆளுக்கு ஒரு மூங்கில் கட்டில வெளிய எடுத்து போட்டுக்கிட்டு ஊர் கத,உலக கத எல்லாம் பேசி விடிய விடிய சிரிப்போ ம்...நேரம் ஆனதும் தூக்கம் கண்ண சுத்த படுக்க போய்விடுவோம்....கட்டில்ல படுத்துட்டு மேல ஆகாயத்த பார்த்தா, எல்லா நட்சத்திரங்களும் நம்மகிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.

மறுநாள் பொழுதோட எந்திரிச்சுருவொம் ...வழக்கம் போல வீட்டப் பெருக்கிட்டு இலவம் பஞ்சு பிரிச்சு எடுத்துட்டு ,பிஞ்சைல தக்காளி.பச்சைமிளகாய் பறிச்சு பாட்டி கிட்ட கொடுத்துட்டு குளிக்கப் போயிருவோம்.

மதியானம் முன் ரூம்ல கட்டிலைப் போட்டுக்கிட்டு ஊர்ல இருந்து

 

கொண்டு வரும் சாண்டில்யன் கதைகள், அம்புலிமாமா கதைகள் எல்லாம் விழுந்து, விழுந்து படிப்போம்...சாண்டில்யக் கதைகளில் வரும் வர்ணனைகள் முதன் முதலாக இளம் ஆசைகளை மெதுவாக மனதுக்குள் விதைத்துச் செல்லும்...

கூடவே அந்தி சாயும் நேரத்தில் ஊருக்கு வெளியே இருக்கும் ரேடியோ ரூமில் அந்த ஊர் இளவட்டங்கள் போடும் இளையராஜாவின் பாடல்கள் மனதை வருடிவிட்டு செல்லும்.

மீண்டும் வருமா அந்த இளமையும், நினைவுகளும்?????

ஞாயிறு, 14 ஜூலை, 2013

இயல்பாக பேசிபழகி வரும் அன்பை விட (நேசிப்பவரிடம்) சண்டையிட்டு சண்டையிட்டு வளர்க்கப்படும் அன்பு சாகா வரம் பெறுகிறது ...!!

பனி பூத்த சிறு மேகம் நின் திரு மேனி உரசும். அது கண்டு நுனி பூத்த சிறு பூக்கள் சில் குளிர் காற்றில் ஆடும்.

பாதையில் துணையானோம்
பாதியிலே தூரமாகிறோம்...
உறவுகளை சுகமாக்கவே
நம் உணர்வுகளை சோகமாக்குகிறோம்....
சோகமான இந்த முடிவும் சுகமாகும் வரை ....

பிரியாத மனசோடு காத்திருப்போம்...

காலம் வரும் வரையிலே...

 

தீர்ந்துவிட்டது உன் மீதான கோபம்
தேடிக் கொண்டிருக்கிறேன்
விரட்டிவிட்ட தூதுப்புறாவை




பொழிந்த வெண் பனியில் பூத்த புது நிறப் பூவிற்கு என்ன பெயர் வைப்பது ? மனசு கிளறிப் போ மாமழையே !

இரவுக் காட்டில் சாரல் மின்மினிகள் மின்னுகின்றன.

மழையில் குளித்தெழுந்த பூக்களின் சிரிப்பில் இன்றைய பொழுது விடிந்தது... உலகம் அழகாய் இருக்கிறது...

மழையோடு
மழையாக வேணும்.
மழையாகி
ஊர்சுத்த வேணும் .
இலையினையும்பூவினையும்
முத்தமிட வேணும்.
காற்றோடு
கதை பேசித்
திரிய வேணும்.
சில்லென்று
சிலிர்த்தாடி
மகிழ வேணும்.
அலையேறிக்
கடல் உலவி
மீனோடு
நீந்த வேணும்.
குழந்தை
பேசும்
குலவு மொழியில்
கிளியோடு
கொஞ்ச வேணும்.
உதிரும்
இலையாகி
ஆற்றோடு
போக வேணும்.

பச்சை வனத்தில் மோகம்
மெய் சூட
கலந்து கிடந்தது
மண்ணும் விதையும்.

மென்தளிர்
இலையாடைகள்
மெல்ல நழுவ
பெரு மரத்திடம்
காதலுடன்
பேசிக் கொண்டிருந்தது
காட்டுக் கொடி.

சலனக் குளத்தில்
நீர்ப் பூக்களின்
அதர மகரந்தங்களை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது
பொன் தும்பி.

விரல்கள்  கோர்த்தபடி
நீல வான மெத்தையில்
கூடல் மொழி பேசி
மௌனித்திருந்த
குளிர் காற்றும் மழை மேகமும்
சட்டெனத்  தழுவிக் கொள்ள
பொழிந்த பேரன்பில்
மஞ்ஞைப் பீலிகள் உதிர்ந்த
காடெங்கும் ததும்புகிறது
காமம்.

இரவின் வானில்
உனை விட்டுப்பறந்த
விருப்பத்தின் சிறகுகள்
அதிகாலைக் கிளையில்
எனை வந்தடைந்து
சொல்லத்துவங்கின
நிறைவேறியும் நிறைவேறாத
விருப்பங்கள் குறித்து.


அது நிகழ்ந்த பொழுது

பூக்களின் வாசனை

எங்கும் நிறைந்திருந்தது

காற்றின் இசைக்கு

இலைகள் பாடிக் கொண்டிருந்தன...

சட்டென்று அது நிகழ்ந்தது.

முகம் மறைத்து

பெண்கள் இடம் நகர்ந்தனர்

இயல்பாய் நடந்தவர்

கலவரத்துடன் விரைந்தனர்

மகிழ்ச்சி வெறுப்பு கோபம் என

ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை

அங்கே விட்டுச் சென்றனர்...

என் உதடுகளை முத்தமிடத் தொடங்கிய மழை

இப்பொழுது முழுவதுமாக

என்னை ஆக்கிரமித்துக்கொண்டது...


வண்ணச் சிறகு மலர்த்தி வசந்தங்கள் பாடிப் போகும் குருவியின் காற்றளையும் சிறு தொண்டை இசையூறுங் கிணறோ?


சிட்டுக்குருவியின் இசை எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. மயங்கிச் சரிந்து அதன் அருகில் விழுந்தால் அது பறந்தே விட்டது... அது விட்டுச் சென்ற இசையோ இப்போது என் இதயத்துள் .


இறுக்கமாய்
இருப்பவன்
இரும்பெனவேப்
பேர்வாங்கி
இறக்கிறான்
துருப்பிடித்து .

என் வார்த்தைக்கு விளக்கம்
கேட்பவர்கள் மத்தயில்.......
என் மௌனத்தை
மொழி பெயர்க்க
தெரிந்தவன் நீயடா..................


உன் மௌனத்தில்
உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தில் உள்ள
அன்பையும் யாரால்
உணர முடிகிறதோ
அவர்கள் தான் உனக்காக படைக்கபட்டவர்கள் ............


ஞாபகங்கள் அழிக்கபடுவதிலை
பிரிந்த பின் தான் ஆழமாக
பதிக்கப்படுகின்றன...!

டாக்டர் : .நம்ம ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல Punch Dialogue சொல்லு ...?
நர்ஸ் : "கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு போங்க "


இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டு பேச
துணை இல்லாத போதுதான்
தெரியும்
உண்மையான அன்பின் அருமை...!

எழுதிப் பார்த்து
வாங்குகிற
பேனாப் போல
எழுதிப் பார்க்கிறது
எதையோ நம் மீது
இந்த வாழ்க்கை


குழந்தை வரம் வேண்டி
பல கோயில்களுக்கு செல்லும்
"நிறைய" பெண்களுக்கு தெரிவதில்லை
அம்மா வரம் வேண்டி நிற்கும்
அனாதை குழந்தைகளை.



என்னுடன் எவ்வளவு
சண்டையும் போட்டுக்கொள்ளலாம்.
எவ்வளவு கோபமும் பட்டுக்கொள்ளலாம்.
ஆனால் சமாதானம் ஆகும் போது அணைத்துக்கொள் அது போதும்


மயங்கும் காலை பொழுதினில் ..
வீசும் தென்றலாய் ..
என் மனதில் மோதுகிறாய் ..
சில்லென்ற உன் சுவாசத்தில் ..
உறைந்து போகிறேன் ..
காலைப் பனியாய் ..
உன்னைத் தழுவி ..!

உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே ..
அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது ...!!

இன்னும் 5 ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் வறண்டு போய் விடுமாம்... அதிர்ச்சி தகவல்

டெல்லி:
வறண்ட நகரமாகி வரும் சென்னையின் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரினால் தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துவருவதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகிவருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஆராய்ச்சி நிறுவனம். இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சமூகப் பிரச்சினைகள் பற்றி இன்றைய இளைஞர்களின் மனநிலை!!!!!

நேற்று  நீயா? நானா? தொலைக்காட்சி  நிகழ்ச்சியை பார்த்த போது சமூகப் பிரச்சினைகள் பற்றி இன்றைய இளைஞர்களின் மனநிலை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. யாருக்கும் இன்றைய தமிழ்நாட்டின் தலையாய  பிரச்சினை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. எந்த பிரச்சினைகளுக்கு  ஊடகம் முக்கியத்துவம் கொடுத்து உணர்வுபூர்வமாக மக்களை தன பக்கம் இழுத்து வைத்து இருக்கிறதோ அந்தபிரசினைகள் பற்றி மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் பற்றியோ, அரசியல் பற்றியோ துளியும் அக்கறை இல்லை இவர்களுக்கு.  இவர்கள் அனைவருமே வெறும் ரசிகர்களாக,கருத்து கூறுபவர்களாகவே  உள்ளனர்.  அந்தக் காலத்தைப் போன்று இல்லை இப்போது...இவர்களுக்கு தேவையான அனைத்துமே இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது..ஆனாலும் இவர்கள் இப்படி அசட்டையாக இருப்பதற்கு காரணம் நம்மைப் போன்ற பெற்றோர்களும், எதற்குமே உபயோகம் இல்லாத இந்த கல்விமுறையும் தான். இப்படி மொக்கையாக இருப்பவர்களால் இன்றைய முதலாளி வர்க்கங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெருத்த லாபம்.
இதனை மாற்ற நாம் பிள்ளைகளுக்கும் சமூகத்தின் மீதான அக்கறை வரவேண்டும் என நினைத்தால்,  தினமும் சிலமணி நேரமாவது அவர்களிடம் அரசியல் பற்றியோ,நடப்பு பிரச்சினைகள் பற்றியோ பேசவேண்டும்..அதுதான் வரும் சந்ததியினருக்கு நாம் செய்யும் நல்ல விஷயம் ஆகும்.
அல்லது 
முகநூலில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றோர் தங்கள் நட்பு வட்டத்தில் இன்றைய இளைஞர்களையும்  இணைப்பது மிகுந்த பயன் தரும். சமூகத்தைப் பற்றிய அக்கறையை இவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் தான் வருங்கால இந்தியாவை நாம் நினைத்த தடத்தில் வழிநடத்திச் செல்ல முடியும்..இல்லையெனில் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும்  விழலுக்கு இறைத்த நீராகிவிடும்!.

திங்கள், 5 டிசம்பர், 2011

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

எளிதில் கலையும் பிம்பம்










காலந்தோறும் கதாநாயகர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் சமூகத்தின் எந்தக் குழுவினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ‘தன்னையா’, ’தன் சமூகத்தையா’ அவர்கள் யாரை அடையாளப்படுத்துகிறார்கள்? சமூகத்தின் எந்தப் பிரிவினரை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? அப்பிரிவினரிடம் என்னவிதமான எழுச்சியை ஏற்படுத்துகிறார்கள்? இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, ‘தான்’ என்ற சுயபிம்பத்தை அவர்கள் என்னனம் கட்டமைத்துக் கொள்கிறார்கள்? இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடைந்த பின்பு தான் அவர்கள் கதாநாயகர்களா என்ற கேள்விக்கும் பதிலையும் கண்டடைய முடியும். ரஜினி எனும் தனிமனித சமூக நாயகனுக்குப் பின்பு வருவோம். ஆனால், அவர் அந்தக் கதாநாயகத்தன்மையை – ஹீரோயிஸத்தை, திரையில் தன் உருவில் தோன்றிய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் பெற்றிருப்பதால், ரஜினி என்ற திரைக் கதாநாயகனுக்கே முதலில் செல்வோம்.




தமிழகத்தின் செம்மாந்த ஆண் தலைவர்கள் எல்லோருமே பெரும்பாலும் அல்லது எப்பொழுதுமே ‘ஆணாதிக்கக்’ கதாநாயகர்களாகவே இருந்திருக்கின்றனர். ‘ஹீரோயிஸம்’ நிலைநாட்டப்படுவது என்பதை, பெண்ணுக்கு எதிரான வாக்குத் தத்தங்களை உதிர்ப்பதன் வழியாகவே காட்டியிருக்கின்றனர். அந்த மனநிலையினூடேயே தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இலக்கியம், சினிமா, அரசியல் இந்த மூன்று முதன்மையான துறைகளிலுமே இந்த ‘ஹீரோயிஸம்’ ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கப்பட்டும், ஒன்றையொன்று ஆதரித்தும் தான் பெருவாரியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.




எப்பொழுதுமே தமிழ் சினிமா, இந்த பெண் எதிர்ப்பு, ஆணாதிக்க, கதாநாயகத் தன்மைகளிலிருந்து வெளியே வந்ததே இல்லை. காலந்தோறும் அதற்கு ஊட்டமளிக்கும் வண்ணம் தமிழ்சினிமாவாதிகள் செவ்வனே அரசியலையும், இலக்கியத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். சமூகவரலாற்றைத் திரித்திக் கொண்டார்கள். அவ்வப்பொழுது, தன் ‘ஹீரோயிஸத்தை’ நிலைநாட்ட, இலக்கியத் துறையிலிருந்தும் ’கதாநாயகர்கள்’ திரைத்துறைக்குச் சென்றிருக்கிறார்கள். திரையில், ஒரு பெண் தாயாகும் போது புறநானூற்றுத் தாயாகவும், அதற்கு முன்பான இளமை வரை, அலங்கார ஜடமாகவும் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள்! இந்நிலையில், பெண் பற்றிய சிந்தனைகள் பற்றி தமிழ்த்திரை இயக்குநர்களும், கதாநாயகர்களும் ரொம்பவும் தான் குழம்பிப் போனார்கள்.




இவர்களிலேயே உச்சம், ரஜினி எனும் கதாநாயகன்! தெள்ளத் தெளிவாக, தேர்ந்தெடுத்த சொற்களுடன் பெண்களை வரையறுக்கவும், தான் வரையறுக்கும்படியான பெண்களையே, ’நல்ல’ பெண்களாய் தன் ரசிகமணிகளுக்கு முன் மொழியவும் அவரால் முடிந்தது. அவரது கதாநாயகத்தன்மை, தமிழ் பேசும் பெண்களுக்காகக் கட்டமைக்கப்பட்டவை. ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது! அடக்கம் வேணும்! ஆத்திரப்படக்கூடாது! அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது! கட்டுப்பாடுவேணும், கத்தக்கூடாது! பயபக்தியா இருக்கனும்! இப்படி பஜாரித்தனம் பண்ணக்கூடாது! மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கனும்!’ ‘அதிகமா ஆசைப்படற ஆம்பிளையும் அதிகமா ஆத்திரப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’ ’படையப்பாவில்’ வரும் இந்த வசனம் மட்டுமே ரஜினி ரசிகர்களால் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்டிருக்கும்! அவரவர் வீட்டுச் சுவர்களில் எதிரொலித்து அடங்காதிருக்கும்!




ரஜினியை ஒரு நடிகனாகவோ, அவரது நடிப்பாற்றல் குறித்தோ விமர்சிப்பது திரைத்துறையினரின் பணி! அது அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறை! ஆனால், அவரை வைத்துக் கட்டமைக்கப்பட்ட, ‘கதாநாயகத் தன்மை’யின் விளைவுகளும் விபரீதங்களும் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தை எந்த அளவிற்குப் பீடித்திருக்கிறது என்பது விவாதிக்கப்படவேண்டியது! பெரும்பாலும், அவருக்கு இணையாக உருவாக்கப்படும் பிற பெண் கதாபாத்திரங்கள், அவரைப் பொறுத்தவரை, கதாநாயகிகளாக இருக்கத் தகுதியற்ற, சிறந்த ஆளுமையாக இருக்க முடியாத பெண்கள்! அவர்கள் நொறுங்கிப் போகும் அளவிற்கு ஒடுக்கப்படுவார்கள்! அந்த நிறைவுக் கட்டம் வரை திரைக்கதை நீளும்!




முதலில், ரஜினி, கூலித் தொழிலாளர்களில் ஒருவராக, அவர்களின் தலைவனாக அடையாளம் பெற்றார்! அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த மத்திய தரவர்க்கத்தின் அடையாளமாகத் தன்னை மாற்றிக் கொண்டது, அவரது முதல் வெற்றி! அம்மக்களின் உளவியல் பிரச்சனைகளை, இயக்குநர்கள் ரஜினி என்ற கதாபாத்திரத்தின் மீது ஏற்றினர்! திரையில், அக்கதாபாத்திரம், குடித்தது, புகைத்தது! ஒழுக்க நெறிகளைக் கற்பித்தது! ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பிளையாக இருக்கவும் வகுப்புகள் எடுத்தது! காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரம் முதிர்ந்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப்பதிந்து, பதிந்து ஒரு பிம்பமாக உருவெடுத்தது! இனி ரஜினியே நினைத்தாலும் அந்தப் பிம்பத்தைக் கலைக்கமுடியாது!




சென்ற காலத்தில் ரஜினியின் தாக்கம் சமூக அரசியலில் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவிற்கு, அது சமூக மாற்றத்தில் பங்கேற்காமல் டுபாக்கூர் அதிர்வுகள் ஆனது, எல்லோரும் அறிந்ததே! தனிமனித அரசியல் சிந்தனைகள் தமிழகத்தில் வேகாத பருப்பாக ஆகி இருந்த காலத்தில் தான் ரஜினி தன் அரசியல் சிந்தனைகளை சினிமாவில் மட்டும் தைரியமாகப் பேசத் தொடங்கியிருந்தார். அதுவும் இலை மறை காயாகத்தான்! அப்படித்தான் தன் படங்களை வெற்றிபெறச் செய்யமுடிந்திருக்கலாம்!
ரஜினியின் ரசிகர்கள் யார்? அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கமாகக் கூட இருக்க மாட்டார்கள். அடித்தட்டு மக்களாகவும், முதல் தலைமுறையாகக் கல்வியை அதிக முயற்சிக்குப்பிறகு பெறவேண்டியவர்களாயும், தான் சார்ந்த சமூகப் பொறுப்புகளை ஏற்க வேண்டியவர்களாயும் இருப்பவர்கள். அவர்களை விசிலடிச்சான்களாக மாற்றும் சமூகப் பணி தான், இந்த ஆதிக்க மனநிலையுடைய சினிமாவால் சாத்தியப்பட்டிருக்கிறது. ரஜினி, திரையில் பெண்களை எப்படிக் குறிப்பிட்டாரோ அது போன்றே, ரஜினியின் ரசிகர்களும் பெண்களைப் புரிந்து கொண்டார்கள். அங்க அடையாளங்களில் அவர் பாணி பாவனைகளை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவரைப் போல ஒற்றை ரூபாயை வைத்து யாருமே தம் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற முடியவில்லை. காரணம், இவை எல்லாமே யதார்த்தங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தமை தான்!



மக்கள் திரளைத் தம் சொந்த நலத்திற்காக, அவரும், அவரது சினிமாவை உருவாக்குவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கே. எஸ். ரவிக்குமாரும், தங்களின் சுய மனநிலையைத் தான் திரையில் தொடர்ந்து பிரதிபலித்தார்கள். ஒரு தடித்த, ஆதிக்க சிந்தனையைத் தங்கள் கதைகளில் முழு விழிப்புடன் செய்தார்கள். இவர்கள் எத்தனை வயதானாலும், முதுமையடைந்தாலும், திரைக்கதைகளில் ஒரு வளர்ந்த பாலகனாகவே வெளிப்பட்டனர். இச்சிறுபிள்ளைத் தனத்தை, ரஜினி என்ற கதாநாயகனின் எல்லா வசனங்களையும் சுட்டிக் காட்டி உணர்த்தமுடியும் என்றாலும், ‘மன்னன்’ என்ற படத்தில் இடம்பெற்ற வசனமும் அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் தமிழ்த்திரையின் ஆண் மன வளர்ச்சியையும் அதன் சிறுபிள்ளைத்தனத்தையும் தெள்ளத் தெளிவாகச் சுட்டக்கூடியது. ‘நம்பர் 1 பெரிதா? நம்பர் 2 பெரிதா?’ என்ற கேள்விக்கு, ரஜினியின் விளக்கம், நம்பர் 2 தானே எண்ணிக்கையில் பெரியது என்பதாய் இருக்கும்!



ரஜினி என்ற கதாநாயகன், ஒரு கதாநாயகனாக இருக்க, எந்தத் தகுதியும் திறனும் அற்ற கதாநாயகனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது அதையே விரும்பிச் செய்திருக்கிறார். ரஜினியின் தனித்தன்மை விமர்சிக்கப்பட்ட அளவிற்கு, அவர் திரையில் ஏற்ற கதாபாத்திரங்கள் ஆராயப்பட்டதில்லை. திரையில் அவர் தோன்றிய கதாபாத்திரங்கள், அவரது தனிமனித பிம்பத்தினும் ஆபத்தானவை. ஒரு மிகையான ஆண் சித்திரத்தைக் கட்டமைத்த அதன் ஒரு செம்மையான ஒரு பிரதியின் மாதிரியைத் திரையில் உருவாக்கி, அதன் எக்கச்சக்கமான பிரதிகளைச் சமூகத்தில் உண்டாக்குவதே அவரது கதாபாத்திரத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாகவே, இயக்குநர்கள், ‘ரஜினி சாருக்கான கதை!’ என்று உருவாக்கும்போது அடிப்படையான சில உள்ளடக்கங்களை மீறி வெளியே போகவில்லை.



இரண்டு முக்கியமான திரைப்படங்களைக் கவனத்தில் இருத்தி முன்னகரலாம் என்று நினைக்கிறேன். அவை, ‘மன்னன்’ மற்றும், ‘படையப்பா’. திரையில் அவருடன் தோன்றும் இரு பெண்களின் ஒருவர் முழுமையான ஆளுமையுடன் சித்திரிக்கப்பட்டு, அவர் ரஜினியால், ‘பொம்பளை இப்படி இருக்கக்கூடாது!’ என்பதற்கு உதாரணமாகவும், இன்னொரு பெண், தன்னை தாழ்த்திக்கொண்ட கதாபாத்திரமாகவும், அவரே அவரால் முழுமையான பெண்ணாகவும் நிறுவப்படுவார். பெரும்பாலும், அம்மா என்ற நிலையில் மட்டுமே பெண் என்பவர் அவரால் மதிக்கப்படுவார். இது தமிழ்ச்சமூகத்தின் வழக்கமான சென்டிமெண்ட் மனோபாவத்திற்காக!




திரையில் ரஜினியின் ஆண் ஆளுமைச் சாதனைளாவன:
பெண் ஆளுமையை ஒடுக்கப் பெண்களை மூர்க்கமாகக் கன்னத்தில் அறைந்தது!
பெண், ஆண் அங்க அசைவுகள், பாவனைகள் எப்படி இருக்கவேண்டும் என்று தன் ஸ்டைல் மொழிகளாலேயே பயிற்றுவித்தது!
சில பெண் ஒழுக்க இலக்கணங்களை பஞ்ச் வசனங்களாக்கியது: உதாரணத்திற்கு,
‘என்ன தான் பெண்கள் துணிச்சலா இருந்தாலும், பொறுமையா இருந்தாத்தான் பெருமையா வாழமுடியும்?’
’எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பிளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’
தாய், தங்கை, மகள் நிலையில் இருக்கும் பெண்கள் தன் அக்கறைக்கு உட்பட்டவர்கள். மனைவியோ காதலியோ கட்டுப்பாடுகளைச் சுமக்கக் கடன்பட்டவள் என்பதை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்துவது.

ஒரு நடிகனின் வசனத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்று இவ்விடம் சப்பைக் கட்டுபவர்களுக்கு என் கேள்வி, சினிமா என்ற வியாபாரத்துறையில், வசூலும், சினிமாவின் வெற்றி என்பதும் பெரிய கணிதமாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ரசிக உற்சாகங்கள் அதிக விளைவைக் கொடுக்கக்கூடியது என்பதாலும், ரசிகர்களின் மனநிலைக்கு உற்சாகம் அளிப்பதற்கு ஏற்றபடியும், சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்றபடியும், வசனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாலும், ரஜினியின் கதாநாயக வசனங்களை, வெறும் ஹீரோவின் வசனம் என்று மட்டுமே ஒதுக்கி விட முடியாது!
இந்திய மண்ணில் பெண், திருமணம் பற்றிய வலுவான சிந்தனைகள் காலந்தோறும் வெவ்வேறு ஊடகங்கள் வழியாக உரத்த குரலுடையோரால் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை, அடிமை நிலையை, எல்லா நிலைகளிலும் சமூகத்தில் ஊட்டிக் கொண்டே இருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் சினிமா காலத்தில் அது ரஜினியின் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தவர்கள் எல்லோருமே, சனாதன மூளைகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்! அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், சங்கர், மணி ரத்தினம் என ஒவ்வொரு இயக்குநரின் திரைக்கதைக்குள்ளும் நம் ஆய்வைத்

தொடரவேண்டியிருக்கும்! ரஜினியின் ஒரே முகமுடைய இக்கதாபாத்திரங்கள் வேறுவேறு உடைகளை அணிந்து வேறு வேறு சினிமாவில் தோற்றம் தந்தன.




பாலியல் சிந்தனை ரஜினி எனும் நாயகனுக்கு, மனிதப்பண்புகளுடன் அல்லாது இயந்திரத்தனமான கட்டமைக்கப்பட்ட மொழியில் உருவாகிறது. சென்னை நீதிமன்ற வளாகத்தில் ஒருமுறை, ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களைத் தாக்கவந்த காவல்துறையினர் முன்பு, தம் பாவாடையை உயர்த்திக் காட்ட, எல்லா காவல்துறை அதிகாரிகளும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடியதாகச் செய்தி. இது எதைக் காட்டுகிறது? வழக்கமாக, இதே காவல் துறையினரால் தான் பாலியல் ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கும் இப்பெண்கள், தங்கள் உடைகளை உயர்த்தி அந்தரங்கங்களைக் காட்டும்போது ஏன் அக்காட்சியை அனுபவிக்காது ஓடுகின்றனர். பெண்ணின் பாலியல் ஆற்றல் அத்துணை வலிமை மிக்கது. அதன் மீது செயல்படும் ஆணின் அதிகார முறைகளும் அத்தகையது. அதாவது, பெண்ணின் பாலியல் ஆற்றலை தானே சுரண்டும்போது அது இன்பமாகவும், அதை அவர்களே தம் வலிமையாக மாற்றி, தானே வழங்கும் போது, அச்சம் கொண்டு ஓடுவதுமாக, எதிரெதிர் நிலைகளை எடுக்கிறது.
ரஜினியின் கதாநாயகன் முன், இத்தகைய இருநிலையடையும் ஒற்றையான பெண்கள் தாம் இரு கதாபாத்திரங்களாகின்றனர். ஒரு பாத்திரம், தன் பாலியல் ஆற்றலை தன் சுயவிருப்பப்படி, கோருகிறது. தன் தேவையை முழக்கமாய், திமிர்பிடித்த பெண்ணாய்க் கூறுகிறது. இன்னொரு பாத்திரம், அதை ஆணின் வசதிக்கேற்றபடி, விட்டுக்கொடுக்கிறது. ஆணின் இசைவிற்கேற்ப தன் பாலியல் ஆற்றலை வழங்க நிர்ப்பந்திக்கப்படும் எந்த ஒரு பெண்ணும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவளே.
எல்லா கதைகளிலும் உழைப்பின் முக்கியத்துவத்தை, அதில் தொடர்ந்து ஈடுபடும் தன் விடாமுயற்சியை நிரூபிக்கும் அவர் பாத்திரங்கள், ஏனோ பெண்ணுக்கு எதிரான தம் ஒடுக்குமுறையை விட்டதேயில்லை. மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் முக்கோணவடிவில் நிறுத்தப்படும். குறிப்பாக, இரண்டு திரைப்படங்கள். ‘மன்னனின் வரும் கிருஷ்ணன்’, ‘படையப்பாவில் வரும் படையப்பா’ இரண்டிலுமே, ஆளுமையான ஒரு பெண், ரஜினி கதாபாத்திரத்தை மணந்து கொள்ளத்துடிக்கும்! அது, பெண்ணின் பாலியல் இச்சையை மறைமுகமாகக் குறிப்பதே அல்லாமல் வேறேதுமில்லை! அந்த ஆணுடனான திருமணம் என்ற தன் இச்சையை அவள் சொல்வதே ஓர் ஆபாசமான, கொச்சையான விஷயமாகக் காட்டப்படும்! பெண்கள், ஆண்களின் தாடியைப் போலவே தமக்கான ஸ்டைலையும் வளர்த்துக் கொள்ளமுடியாது போல!




இனி, ‘உழைப்பு’ என்ற அடுத்த மைய சிந்தனைக்கு வருவோம்! அது, ஒடுக்கப்பட்ட மக்களைப் பொருட்படுத்திய உழைப்பு இல்லை. சமூக ஏணியில், ‘உழைக்கும்’ வர்க்கம் என்று அவர் குறிப்பிடுவதும் உண்மையிலேயே உழைக்கும் இனத்தைக் காட்டவே இல்லை. பொதுவாக, தொழிற்சாலைகளில் உழைக்கும் மக்களைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்! அவர்கள் எல்லாம் யாராக இருந்திருப்பார்கள்! கண்டிப்பாக, மத்திய தரவர்க்க, இடைநிலை சாதியினர் தாம்! அவர்களுக்கு மத்தியில் தானும் ஒருவராய் நின்று, அவர்களின் தலைவனாய் தன்னை வரிந்து கொண்டு, அதே சமயம், அவர்கள் என்ன மாதிரியான திருமணம், குடும்பம், பெண் போன்றவற்றைத் தமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பாலபாடத்தை அவர்களுக்குக் கற்பித்ததுடன், ஆதிக்கச்சிந்தனையின் முத்திரையான தன் கதாபாத்திரத்தின் வெற்றியை நிலைநாட்டிக்கொண்டார்!
இதில் இருட்டடிக்கப்பட்டது, மேல் வர்க்க, ஆதிக்க சாதி மக்களின் சிந்தனை எப்படி தந்திரமாக சினிமாவில் நிறுவப்படுகிறது என்பதும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் தொழில்கள் அடையாளப்படாத ஓர் உழைப்பை முன் வைத்த அவரது சனாதனம் என்பதும்! இது, தன் சுய, சாதி, மதம், பால் அடையாளங்களை எந்த விதத்திலும், தமிழக அரசியல் சூழ்நிலைகளை குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட, அவரது தந்திரங்கள் இது வரை வெளிச்சம் பெறாமலேயே போயின. பொருட்படுத்தாமலும் போயின!



தன்னை விட பெரிதாகத் திரையில் காட்டப்பட்ட தன் ஹீரோயிஸத்தைக் கண்டு அவரே மிரண்டிருக்கவேண்டும்! பதில்கள் சொல்வதில், முடிவுகளைத் தெரிவிப்பதில் தடுமாறிப்போனார். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்காக அவர் எப்பொழுதுமே காத்திருந்தார்! தன் எல்லா சுமையையும், ரஜினி என்ற கதாநாயகன் மீது ஏற்றிவிட்டுக் கொண்டு, சிவனே என்று இருந்தார். ரசிகர்களின் உறக்கம் கெடுத்தார். ரசிகர்கள் தம் வீடுகளின் இரவுகளையும் பகலையும் இழந்தனர். இந்த விளைவுகளின் முடிவும் எல்லையும் எதிர்காலத்தில் தான் தெரியும்!



இதற்குப் பின்பு, ரஜினி சிறந்த மனிதனாகவோ, ஆன்மீகவாதியாகவோ இருந்தால் என்ன, இல்லாமல் போனால் தான் என்ன? சிறந்த மனிதன் என்பவன், தன் வாழ்வின் நாளில், சக மனிதனின் மனதிலோ, செய்கையிலோ அடிமைத்தனத்தை விதைக்காமல் இருப்பவன் தானே! ரஜினி எனும் கதாநாயகன், திரைப்படங்களுக்கு வெளியே என்ன செய்திருக்கிறார் என்பது கேள்வி கேட்கப்படவே இல்லை. அவர் எப்பொழுதுமே. ‘புனிதனாக’ப் பார்க்கப்பட்டிருக்கிறார்! சமூகத்தின் அரசியலை தன் கதைகளில் அவர் விமர்சித்ததே இல்லை. கதைகளுக்குள் வெற்றியை நோக்கிய போராட்டமும், அதனோடு இழையோடும் நகைச்சுவையும், தாம் முதன்மைப்படுத்தப்பட்டன. பேருந்து நடத்துநராக இருந்து கதாநாயகனான ஒரு மனிதனின், வாழ்க்கை அவர் ‘வெற்றியின் கதை’களுக்கு நம்பகத்தன்மையையும் விசில் சத்தங்களையும் கொடுத்தது. ஆனால், அது தவிர, ரஜினியின் கதாநாயகன், தன்னைத் தானே மிகுந்த எச்சரிக்கையுடனேயே ஓர் ஒளிவட்டத்தில் இருத்திக்கொண்டு அதை விட்டு வெளியே வரவில்லை. ரசிகனுடனோ, சமூகத்தின் பிற பார்வையாளனுடனோ, ஏன் சமூகத்துடனோ கூட எந்தத் தொடர்பையும், இணக்கத்தையும், சம உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை.



புகழின் வெளிச்சத்தில், திரைக்கு வெளியேயும் அவர் கண்கள் மயங்கித்தான் போயிருந்தார். சமூக மாற்றத்திற்கான அரசியல் பயணமும் போராட்டமும் ஏன், எரியும் பிரச்சனைகள் தமிழகத்தைப் பீடித்திருந்த போது கூட, அது அவரைக் கிஞ்சித்தும் பாதித்தது இல்லை. அவருக்குத் தன் கருத்தை சொல்வதற்கான துணிவு இல்லை. தயக்கமும் பயமும் அவரை எப்பொழுதுமே அவரை இருந்த இடத்திலேயே அழுத்தின என்று தான் சொல்லவேண்டும். அவர் ஏற்ற கதாநாயக வேடங்கள், அவர் எவ்வளவு பெரிய மனிதராக வளர்ந்த போதும், சூழ்நிலைகளைக் கையாளத் தேவையான சமூக அறிவை பெற்ற ஆளுமையாக உயர்த்தவே இல்லை. தன் தொடர் தப்பித்தல் நடவடிக்கைகளால், இந்த நெருக்கடிகளிலிருந்து நாகரிகமாக அவரால் எப்பொழுதுமே விலகி இருக்க முடிந்திருக்கிறது.



திரையில் மின்னும் கதாநாயகர்களான, படையப்பா, பாபா, அண்ணாமலை, இன்ன பிற கதாநாயகர்களின் பிரச்சனையும் இது தான்! சாதாரண, ஆனால், உரத்துச் சொல்லப்படும் பஞ்ச் வசனங்களால், சமூக அரசியலைப் புரிந்து கொள்ளும் அறிவை வழங்கப் போதவில்லை. ரஜினியைப் போலவே ஒரு தலைமுறை ரசிகர்களும், இம்மாதிரியான ஊக்குவிப்புகளுடன் சமூகத்திற்குப் புறத்தே நிறுத்தப்படுகின்றனர். ரஜினி ரசிகர்கள், ‘ரஜினி எனும் மாயை’யில் சிக்கிக்கொண்டது போலவே ரஜினியும் சிக்கிக் கொண்டது தான் வேதனை! ரஜினி, யாரையுமே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, சமயங்களில், அவர் தன்னையே கூட!




திரையில், அக்கதாபாத்திரம், குடித்தது, புகைத்தது! ஒழுக்க நெறிகளைக் கற்பித்தது! ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பிளையாக இருக்கவும் வகுப்புகள் எடுத்தது! காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரம் முதிர்ந்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப்பதிந்து, பதிந்து ஒரு பிம்பமாக உருவெடுத்தது! ரஜினியின் இத்தகைய பிம்பங்கள், நாம் நினைப்பது போலவும், ரசிகர்கள் நினைப்பது போலவும் கலைக்கக் கடினமானது இல்லை. அவை வாணவேடிக்கை! நிரந்தரத்தன்மை அற்றவை! தற்காலிகமாகக் கவனத்தைத் திருப்பிவிட்டு, அவனை அப்படியே அந்தரத்தில் விட்டுவிடும்! ரசிகன் தன் வாழ்க்கையின், அதன் யதார்த்தத்தின் படுபாதாளத்தில் வீழ்ந்து மண்டை வீங்கும் வரை வாணவேடிக்கையை ரசிப்பான்! அந்தரங்கவாழ்க்கை மனிதனை அழுத்தும் கணங்களில் எவருடனும் இந்த, ‘கதாநாயக பிம்பங்கள்’ துணைக்கிருந்து காப்பாற்றுவதில்லை! தனிமனிதனின் இரத்தம் சுண்டிய கணங்களில், ரஜினிக்காக இது வரை எழுதப்பட்ட ஒற்றை வசனம் கூட ஊக்கமளிப்பதில்லை! வாழ்க்கையின் அகழியை, கடக்கும் தினவை தனிமனிதனுக்கு வழங்க இயலாத ரஜினி என்னும் பிம்பத்தால் பயன் ஏதுமில்லை! ஆகவே, ரஜினி எனும் பிம்பத்தை நாம் வெகு எளிதாகக் கலைத்துவிடலாம்! அந்தப் பிம்பம் பொருட்டு அதிகமும் கவலையுற வேண்டியதில்லை! நாம் கவலையுறுவதெல்லாம், ரஜினி ரசிகர்கள் குறித்தே!






குட்டி ரேவதி
நன்றி: இந்தியா டுடே

சனி, 24 செப்டம்பர், 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் சில குழந்தைகள் குறைவான கற்கும் திறனும்,மந்த புத்தியுமாக இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இன்னொரு பெண்குழந்தையோ வளர்ச்சியின்றி, ஒரு வயது குழந்தைக்குரிய உயரத்தில் இருக்கிறாள். இதற்கு பெரும்பாலும் காரணகர்த்தாக்கள் யார் தெரியுமா?....பேரன் பேத்தி எடுத்த பின்னரும், மனைவி இறந்து போனதால் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று??????? கிராமத்துச் சூழலில், வறுமையில் வாடும் இளம் பெண்களை பணத்து ஆசை காட்டி திருமணம் செய்து, பிள்ளைகளை வேறு பெற்றுக் கொள்கிறார்கள் இந்தக் கயவர்கள்!...இந்தக் கிழட்டு கதாநாயகர்கள் தங்கள் ஆண்மையின் பலத்தை நிரூபிக்க, பாவம் மூளை வளர்ச்சியின்றியும்,உடல் வளர்ச்சியின்றியும்,மந்த புத்தியுமாக பிறக்கும் அந்தக் குழந்தைகள் பலியாக வேண்டுமா என்ன???......

அதிலும் இன்னொரு கொடுமை என்னவென்றால், சம்பந்தப்பட்ட அந்த இளம் மனைவிக்கு இம்மாதிரி குறையுடன் பிறக்கும் இந்தக் குழந்தைகள் தான் வாரிசு!..அனால் அந்த கிழவருக்கோ, காலாகாலத்தில் திருமணம் நடந்து நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருப்பர். என்ன ஒரு கொடுமை பாருங்கள்?.....ஒரு பக்கம் வயதுக்கேற்ற தேவைகள் எவ்வளவோ இருக்கும். இன்னொரு பக்கம் ஊனமாகப் பிறந்த குழந்தையினால் மன உளைச்சல் வேறு பாடாய்ப் படுத்தும். இந்தக் கொடுமையை சமுதாயம் அங்கீகரித்து கொள்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் கடுமையான தண்டனை கிடையாதா?....ம்ம்ம். நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!.

புதன், 31 ஆகஸ்ட், 2011

எனது கிறுக்கல் கவிதைகள்.....



பயணம்!
தொடரும் பயணங்களில் மீண்டும் மீண்டும் சந்திக்க நேருகிறது
சில அபூர்வ தருணங்களை..
நதிப் பாலங்களின் மீது ரயில் நின்று விடும்
தூரத்தில்
நீண்டு விரியும் நதியின் ஆழம்,
...முன்னேறிச் செல்லும் பாதையில்
வேகமாக கடக்கும் மரங்கள்,
தாயின் தாலாட்டுக்குப் பிறகு
ரயிலின் தாலாட்டில் சுகமாய்
குழந்தையின் உறக்கம்,
தூரத்தில் விரியும் வயல்வெளியில்
நடனமாடும் மயிலின் தொகை,
இயல்பிலிருந்து விடுபடு இதைபோல
ஆச்சரியங்களை அடிக்கடி சுமந்தபடி.-சியாமளா




பெரு வாழ்வு!!!!


மழைச்சாரலின் அந்திநேரம்

மல்லிகை வாசம்

மயங்கிய மனது

எங்கோ மிதந்து வரும்

மனதுக்கு பிடித்த பாடல்

காதலின் கைப்பிடித்து

விடிய விடிய

கதைகள் பல பேசினேன்.....

சட்டென்று கலைந்தது கனவு.

விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்

சமையலறைக்குள் தாவியது மனசு

மறுபடியும் மறுபடியும்

வந்துகொண்டுதான் இருக்கின்றன

அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.

அவளுக்கென்ன நன்றாகத்தான்

சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்

ஊர் சொன்னது! -சியாமளா