வியாழன், 23 டிசம்பர், 2010

மோதி மிதித்து விடு பாப்பா....

போரில் வென்ற அரசன், தோற்ற மன்னனின் நகருக்குள் நுழைந்ததும் முதலில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதுதான் சங்க காலம் தொட்டு நமது சரித்திரம். எந்த இனத்தின் மீது பகை வந்தாலும் முதலில் 'டார்கெட்' அந்த இனத்தின் அபலைப் பெண்கள் தான் என்பது கால காலமாக இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கும் அவமானம். தேசப் பிரிவினையின் போது கொல்லப்பட்டவர்களை விட, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விவரம்.
ஹோட்டல்களில், தியேட்டரில், பஸ்,ரயில், பயணங்களில், அலுவலக லிப்டில், கூட்டமான கடைகளில்...சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேலே ஊறும் ஆண் விரல்கள், காதில் மோதும் ஆபாச கமெண்டுகள், அஜய் சக்ரவர்த்தி மாதிரி, ஓநாய் மாதிரி வெளிப்படையான அழைப்புகள்...இவற்றை சந்திக்காத பெண் இருக்க முடியுமா?  
பெரும்பாலும், பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்த்து நிற்பதற்கு பெண் தயாராக இருப்பதில்லை என்பதே உண்மை. சம்பவம் நடந்த உடனே மனசுக்குள் மிகவும் குன்றித்தான் போகிறாள். ' யாராவது கவனிச்சாங்களா' என்று பார்க்கிறாள். கால்கள் நகர மறுக்கின்றன. 'அடுத்து என்ன செய்யப் போகிறான்?' என்ற பயம் போர்வை போல் கவிழ்கிறது. சிலமணி நேரங்களில் இருந்து, சில நாட்கள் வரை அச்சம்பவத்தின் தாக்கம் அவளுள் இருக்கிறது.
அவன் அருகில் வந்த போதே உஷாராகி சத்தம் போட, கூட்டம் சூழ்ந்து அவனை உதைக்கிறது...இல்லை...கையிலிருந்த மிளகாய்த் தூளை அவன் முகத்தில் அடிக்க, எரிச்சலில் கதறித் துடிக்கிறான்  அந்தக் கயவன்....இல்லையில்லை...கராத்தே கற்றிருந்த அவளின் கையால் ஒரு வெட்டு வெட்ட அலறிச் சாய்கிறான் அந்த அயோக்கியன்....இவை எல்லாம் கானல் நீர் கற்பனைகள்.
ஆனால் நிஜத்தில் நடப்பது  வேறு. மெளனமாக சகித்துக் கொள்வதே கசப்பான உண்மை.
அதே போல் விஷயம் வேறு விதமாகவும் விமர்சனம் செய்யப் படுவது நமக்குத் தெரியாதது இல்லை. 'பிரச்சினையே பெண்களின் உடைகளால்தான்' என்று ஒரு கோஷ்டி கத்திக் கத்தி தொண்டை கமறிப் போய் இருக்கிறது. என்ன ஆபாச உடைகள்?!'துப்பட்டா இல்லாத குர்த்தி' 'லோ வெயிஸ்ட்  ஜீன்ஸ், 'இப்படி அரைகுறையா டிரஸ் போட்டு சுத்தினா பாவம் அவனும் தான் என்ன பண்ணுவான்..' என்கிற மாதிரி உருக்கம் ஏகப்பட்ட நபர்களிடம் இருக்கிறது.
உண்மையில் இந்த மாதிரி அல்ட்ரா மாடர்ன்  பெண்களிடம் எந்த ஆணும் வம்பு செய்வதே இல்லை. பாதிக்கப் படுவதெல்லாம் பாந்தமாக உடை உடுத்தி இருக்கும் நடுத்தர வர்க்கத்து பெண்கள் தான். இவர்கள் பெரும்பாலும் குரலற்றவர்கள்; நாளைய பிரச்சினைகளை கருதி இன்றைக்கு எதையும் சகித்துக் கொள்பவர்கள்.
கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளுடன் நடந்து போகும் போதே  போக்கிரிகள் சிலர் கிண்டல் செய்தார்களாம். நல்ல வேளையாக  கண்ணகியின் உடைதான் அந்தக் கயமைக்கும் காரணம் என்று யாரும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவில்லை. காலம் காலமாக ஆணுக்கு பெண் ஒரு கேளிக்கைச் சாதனம்.அவளை சிநேகிதியாக, சக உயிராக பார்க்கப் பழகாத பார்வைக் கோளாறுதான் காரணமே ஒழிய உடைகள் மட்டுமே அல்ல.
மாநகரப் பேருந்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கம்பியை பிடித்தபடி நிற்கிறாள். பின்பக்கமாக ஒரு தடிமாடு அவள்மேல் சாய்ந்து சரிகிறது.குழந்தையின் முகம் கலங்கிப் போய் இருக்கிறது. 'ஹான்ட்பக்' பெண்கள் எல்லாம் இதைக் கவனித்தும், கவனிக்காததுமாய்  இருக்கிறார்கள். கடைசி சீட்டில் மீன்கூடையோடு ஒருத்தி நிற்கிறாள். கூறு கட்டி மீன் விற்றுக் குடும்பம் நடத்தும் அன்றாடங்காய்ச்சி  அவள். அந்தக் குழந்தைக்கு நடக்கும் கொடுமையைக் கண்டதும் கூச்சல் போடுகிறாள்.அவளது சத்தத்தில் தடிமாடு தானே  விலகி பஸ்ஸில் இருந்து தாவிக் கீழே  குதிக்கிறது.
உட்கார்ந்து இருந்த பெண்களின் படிப்பும், பதவியும் அவர்தம் தைரியத்தை உலர வைத்து விட்டது. கூடைகாரிக்கோ இழக்க எதுவுமில்லா இழுபறி வாழ்க்கை...சிறுமை கண்ட இடத்தில் சீறுகிறாள்.இதுதான் கொடுமையை எதிர்ப்பது.
'மோதி மிதித்து விடு பாப்பா...பாதகம் செய்பவரின் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா', என்று பாரதியாரின் வரிகளை செயல் படுத்தி, நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வையோடு தொடர்ந்து செல்லும் ஞானச் செருக்கு நமக்கு அவசியத் தேவை!

செவ்வாய், 21 டிசம்பர், 2010

காசேதான் கடவுளடா...

பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால், பணமே வாழ்க்கையாகி விடுவதுமில்லை'
- இது, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் அன்றைய தலைமுறைக்கு சர்வ சாதாரணமாக வழங்கப்பட்ட அறிவுரை.
இன்றைக்கு இதைச் சொன்னால்...அவர்களை ஏற, இறங்க பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். காரணம் பணம் மட்டுமே தான் வாழ்க்கை என இன்றைய தலைமுறையினருக்கு போதிக்கப்படுகிறது. அவர்களுக்கும் அதுதான் மிகவும் பிடித்து இருக்கிறது.
வித,விதமான உடைகள்,லேட்டஸ்ட் மாடல் செல்போன்கள், கார், பங்களா...என்று நம் வாழ்க்கையை ஆடம்பரங்கள் ஆக்கிரமித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அதன் எதிர்விளைவாக சத்தமில்லாமல் மிகப்பெரிய சதியே நடந்து கொண்டு இருக்கிறது....அது, உறவுச் சீர்குலைவு!
இங்கே எப்போதோ படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
'மிடில் கிளாஸ் மாதவன்' என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், தனக்கு promotion  கிடைத்ததும் ஆசை ஆசையாக புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கி வாசலில் நிறுத்தினார். அதில் உள்ள வசதிகளையும், விலை குறைத்து வாங்கிய சாமர்த்தியத்தையும் மனைவியிடம் பிரஸ்தாபித்துக் கொண்டு இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களின் ஏழு வயது மகன், ஓடிப் போய் காரில் எதையோ கிறுக்க...வந்ததே மாதவனுக்கு கோபம். கையில் கிடைத்ததைக் கொண்டு பையனை விளாசிவிட்டார். பையனின் விரல்கள் வீங்கி விட, டாக்டரிடம் ஓடினார்கள். கடைசியில் சுண்டு விரலை அகற்ற வேண்டியதாயிற்று.
மறுநாள் காலையில், 'காரில் அப்படி என்னதான் கிறுக்கினான்' என்று மாதவன் போய்ப் பார்த்த பொது அங்கே கிறுக்கலாக எழுதப்பட்டு இருந்தது-
'டாடி, ஐ  லவ் யு  வெரி மச்!'
வெட்கித் தலை குனிந்தார் அவர்.
இன்றைக்கும் நாம் எல்லார் வாழ்விலுமே வெற்றியின் அளவுகோலே...பணமாகத்தான் இருக்கிறது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை,கணவன்,அண்டை வீட்டார், நண்பர்கள், பிள்ளைகள் என்று எல்லாரிடமுமே  ஒருவித எதிர்பார்ப்புடனேயே பழகுகின்ற  பாங்கும் அதிகரித்து, மனித மதிப்பீடுகள் குறைந்து கொண்டே வருகின்றன என்பதை அறியாதவர்களல்ல நாம்.
பணம் தேவை தான். அதற்காக ஓடித்தான் ஆகவேண்டும். ஆனால், ஓட்டத்திற்கு நடுவே ஓய்வு எடுப்பது போல, மனித உறவுகளுக்கு சற்றே மதிப்பளிக்கும்  போது...நம் ஓட்டம் தடைப் படத்தானே செய்யும். ஆனால் அதுவே நம் தொடர் ஓட்டத்துக்கு recharge  ஆகவும் அமையும்.
இளைப்பாறி ஓடக் கற்றுக்கொள்வோம்...கற்றுக் கொடுப்போம் - எதிர்கால தலைமுறைக்கும்!

வியாழன், 16 டிசம்பர், 2010

Blaming Elders....

பெரியவர்கள் இந்தக் காலத்தின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம். அனால் அதற்கு பதில் அவர்கள் உலகத்தையும், அதன் தன்மைகளையும் நாம் அறிந்து கொள்ள முயல்வதில்லை. வாழ்க்கை என்பது ஒரு வேகமான ஓட்டம், அதில் தடைகளை தாண்டுபவருக்குத்தான் முதல் பரிசு என்று  ஊறிப்  போய் இருக்கும் உலகில் பெரியவர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜி இல்லாத ஒரு இயந்திரம் போல் பார்க்கப்படுகிறார்கள்.
பழைய கம்ப்யூட்டர், பிரிண்டர்,முதலில் வந்த  செல்போன், கருப்பு-வெள்ளை  டிவி, இது போன்ற பொருட்கள் தேவையற்றதாக பார்க்கபடுவதைப் போலவே, வயதில் பெரியவர்களும் பார்க்கபடுகிறார்கள் என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. புரிந்து கொள்ளப் படாத அந்த உணர்வுகள், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட பழைய சிலபஸ் ஆக பாவிக்கபடுகிறது. அந்த உலகத்தின் குரல்கள், அதிர்ந்து ஒலிக்கும் இன்றைய தலைமுறையின் சத்தத்தின் முன்னால் சந்தடி இல்லாமல் ஒடுங்கிப் போகின்றன.
ஒரே விஷயத்தை நீளமாக பேசுகிற, சொன்னதையே திரும்பச் சொல்லுகிற, நவீன உலகின் அடையாளங்கள் தெரியாத மனிதரை நாம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வது இல்லை.காரணம் அந்த உலகத்தோடு நட்பு பாராட்ட நமக்கு விருப்பம் இல்லை. உண்மையில் பழைய மனிதர்களின் நட்பு, உலகை உண்மையாகவும், ஆழமாகவும் பார்க்க உதவுகிறது.அவர்கள், கருவிகளின் துணை இல்லாமல் சவால்களை எதிர்கொண்டவர்கள், ஆயுதங்களின் துணை இல்லாமல் காரியம் சாதித்தவர்கள். நாம் கால்குலேடரிலும், கம்யுட்டரிலும், தேடும் விஷயங்களை அனுபவமாக கையில் வைத்து இருப்பவர்கள்.
நாம் எந்த விஷயத்துக்கெல்லாம் சிறப்புக்  கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோமோ, அந்த விஷயத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல், சகஜமாக அதை வாழ்வியலில் பயன்படுத்தியவர்கள். குறிப்பிட்ட வயது வரை பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும், பிறகு, நாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என்ற' மடை மாற்று' வேலைதான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது. பெரியவர்கள் உலகத்தோடு நமக்கு நட்பு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கிற அளவு நமக்கு பொறுமை இல்லை...நேரமும் இல்லை.
கணினிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு உலகத்தை தேடுகிற நாம், பெரியவர்கள் நட்பிலும் அதைத் தேடலாம். அப்படி நட்பு பாராட்டி ஆகப் போவது என்ன? நிறைய ஆகும். நீங்கள் யோசித்திராத பரிமாணங்கள் அது சொல்லித் தரும். சமூகத்தைப் பற்றிய உண்மைகளைச் சொல்லும், நெருக்கடியான நிலைமைகளை நிர்வாகம் செய்கிற அறிவைத் தரும்.
எனவே நண்பர்களே, காலையில்  வாகிங்  போகிற போது எதிரில் வேட்டியை மடித்துக் கொண்டு, வெள்ளை பனியனோடு நடந்து போகிற அந்தச் சாதாரண பெரிய மனிதரிடம் நட்பாகச் சிரியுங்கள்....அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள்.பெரியவர்களைக் குறை சொல்லுகிற நேரத்தை, அவர்களைப் புரிந்து கொள்வதற்கு செலவிடலாம்.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

தலையாட்டி பொம்மைகள்?????

எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் சரி என்று சொல்லுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.இப்படி எல்லோருக்கும் நல்லவனாக நினைத்தால் கடைசியில் எல்லாருக்கும் கெட்டவனாகி விடுவோம் என்பதுதான் உண்மை.
'சரி என்று சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும்'சரி' என்று சொல்லி வேலையை இழுத்துப் போட்டு செய்யும் பொது அனைவரது பாராட்டையும், அபிமானத்தையும் பெறலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்ற மனோபாவத்தை நீங்களே எல்லோர் மனத்திலும் விதைத்து விடுகிறீர்கள்.
விளைவு, என்றைக்காவது  ஒரு நாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிற பொது, 'இவன் முன்னைப் போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும்.அந்த வேலைகளை செய்யமுடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக் கொண்டு இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்து போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீகள். இப்போது 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்ற குற்றச் சாட்டு அதிகமாகி இருக்கும்.
எல்லோருக்கும் நல்லவனாக எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிராக நிற்கிறது. போதாகுறைக்கு இவர்களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.
நீங்கள் பகுத்தறிவும், ஞானம் இல்லாதவர் என்பதைத்தான் எல்லாவற்றுக்கும்'சரி' சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப் போல 'முடியாது' என்று சொல்வது எளிதான காரியம் இல்லைதான். ஆனால் குறைந்த பட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்', யோசித்துச் சொல்லுகிறேன்' என்று சொல்லலாமே. 
முடியாத விஷயங்களுக்கு நாகரிகமாகவும்,நாசூக்காகவும் எதிரில்  இருப்பவர்களுக்கு புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சி நமக்கு வேண்டும். நியாயமான விஷயங்களுக்கு மட்டும் 'சரி' என்று சொல்லிவிட்டு, அதனை முடித்துக் கொடுப்பது உத்தமம்.எனவே 'தலையாட்டி பொம்மையாக எப்போதும் இருக்காதீர்கள்!'.

திங்கள், 13 டிசம்பர், 2010

புத்தக வாசிப்பு!!!!!

 ஒரு சிறிய நகரத்தில் படித்து விட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்த எனது வாழ்க்கை  வட்டத்தைப் பெரிது படுத்தியது புத்தகங்கள் தான். பொதுவாக நானாகப்  போய் யாரிடமும் பேசும் இயல்பு எனக்கு இருந்தது இல்லை. வயது ஏற, ஏற  தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமானதே தவிர குறைய வில்லை. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்....எப்படித்தான் நமக்கு தைரியம் வந்தது என்று?.......
எனது  தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதில் நான் முக்கியப் பங்காக புத்தக வாசிப்பைத் தான் சொல்லுவேன். எங்கள் ஊர் லைப்ரரி, மற்றும் வீடு வீடாக வார இதழ், நாளிதழ் என்று நான் புத்தகம் தேட கூச்சப்பட்டதே இல்லை. அதன்பின் வாழ்க்கையின் நிறங்கள் மாற ஆரம்பித்தன! இதெல்லாம் என்னால் செய்ய முடியாதுப்பா' என்று ஓடி ஒளிந்த நான் ' கொடுங்க செஞ்சு பார்க்கிறேன்,,,,' என்று செய்ய ஆரம்பித்தேன் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பின்னர், குழந்தைகளுக்கு பாடத்தோடு சேர்த்து நிறைய விஷயங்களை கற்றுத் தர முடிந்தது.

 சென்னை மாநகருக்கு வந்த பிறகு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத நான் கார் ஓட்டக்  கற்றுக் கொண்டது, எவ்வளவு பெரிய  கூட்டங்களிலும் தைரியமாக எதைப் பற்றியும் பேசுவது, தனியே பயணிப்பது, தவறு என்றுத் தெரிந்தால் தைரியமாக அதைத் தட்டிக் கேட்பது  என என்னுடைய தன்னம்பிக்கை வட்டம் அதிகம் ஆனது.


  உலக அனுபவங்கள் பெறப் பெறத்தான் நம் தன்னம்பிக்கையின் அளவு உயர்கிறது. இதை வேறு வார்த்தைகளிலும் சொல்லலாம்.அதாவது விஷயங்கள் அதிகம் கற்றுக் கொள்ள, கற்றுக்  கொள்ள தன்னம்பிக்கை லெவல் கூடுகிறது!. 
புத்தகங்கள் சத்தமில்லாமல் நம் வாழ்வில் நிறையப் பேரை, நிறைய கரெக்டர்களை, நிறைய புது உலகங்களை,நிறைய புது அனுபவங்களை நமக்கு அறிமுகப்படுத்தும். இதனால் நாம் அனைத்தும் பெற்றது போல் ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் பெறுவோம்.

 வைரமுத்து கூட தனது கவிதையில்,
" தலையை குனியும் போது புத்தகம் படி...தலை நிமிரும் போது உலகம் படி" என்று அழகாக எழுதி இருப்பார்.