வியாழன், 23 டிசம்பர், 2010

மோதி மிதித்து விடு பாப்பா....

போரில் வென்ற அரசன், தோற்ற மன்னனின் நகருக்குள் நுழைந்ததும் முதலில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதுதான் சங்க காலம் தொட்டு நமது சரித்திரம். எந்த இனத்தின் மீது பகை வந்தாலும் முதலில் 'டார்கெட்' அந்த இனத்தின் அபலைப் பெண்கள் தான் என்பது கால காலமாக இந்த சமூகம் அங்கீகரித்து இருக்கும் அவமானம். தேசப் பிரிவினையின் போது கொல்லப்பட்டவர்களை விட, பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விவரம்.
ஹோட்டல்களில், தியேட்டரில், பஸ்,ரயில், பயணங்களில், அலுவலக லிப்டில், கூட்டமான கடைகளில்...சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேலே ஊறும் ஆண் விரல்கள், காதில் மோதும் ஆபாச கமெண்டுகள், அஜய் சக்ரவர்த்தி மாதிரி, ஓநாய் மாதிரி வெளிப்படையான அழைப்புகள்...இவற்றை சந்திக்காத பெண் இருக்க முடியுமா?  
பெரும்பாலும், பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்த்து நிற்பதற்கு பெண் தயாராக இருப்பதில்லை என்பதே உண்மை. சம்பவம் நடந்த உடனே மனசுக்குள் மிகவும் குன்றித்தான் போகிறாள். ' யாராவது கவனிச்சாங்களா' என்று பார்க்கிறாள். கால்கள் நகர மறுக்கின்றன. 'அடுத்து என்ன செய்யப் போகிறான்?' என்ற பயம் போர்வை போல் கவிழ்கிறது. சிலமணி நேரங்களில் இருந்து, சில நாட்கள் வரை அச்சம்பவத்தின் தாக்கம் அவளுள் இருக்கிறது.
அவன் அருகில் வந்த போதே உஷாராகி சத்தம் போட, கூட்டம் சூழ்ந்து அவனை உதைக்கிறது...இல்லை...கையிலிருந்த மிளகாய்த் தூளை அவன் முகத்தில் அடிக்க, எரிச்சலில் கதறித் துடிக்கிறான்  அந்தக் கயவன்....இல்லையில்லை...கராத்தே கற்றிருந்த அவளின் கையால் ஒரு வெட்டு வெட்ட அலறிச் சாய்கிறான் அந்த அயோக்கியன்....இவை எல்லாம் கானல் நீர் கற்பனைகள்.
ஆனால் நிஜத்தில் நடப்பது  வேறு. மெளனமாக சகித்துக் கொள்வதே கசப்பான உண்மை.
அதே போல் விஷயம் வேறு விதமாகவும் விமர்சனம் செய்யப் படுவது நமக்குத் தெரியாதது இல்லை. 'பிரச்சினையே பெண்களின் உடைகளால்தான்' என்று ஒரு கோஷ்டி கத்திக் கத்தி தொண்டை கமறிப் போய் இருக்கிறது. என்ன ஆபாச உடைகள்?!'துப்பட்டா இல்லாத குர்த்தி' 'லோ வெயிஸ்ட்  ஜீன்ஸ், 'இப்படி அரைகுறையா டிரஸ் போட்டு சுத்தினா பாவம் அவனும் தான் என்ன பண்ணுவான்..' என்கிற மாதிரி உருக்கம் ஏகப்பட்ட நபர்களிடம் இருக்கிறது.
உண்மையில் இந்த மாதிரி அல்ட்ரா மாடர்ன்  பெண்களிடம் எந்த ஆணும் வம்பு செய்வதே இல்லை. பாதிக்கப் படுவதெல்லாம் பாந்தமாக உடை உடுத்தி இருக்கும் நடுத்தர வர்க்கத்து பெண்கள் தான். இவர்கள் பெரும்பாலும் குரலற்றவர்கள்; நாளைய பிரச்சினைகளை கருதி இன்றைக்கு எதையும் சகித்துக் கொள்பவர்கள்.
கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளுடன் நடந்து போகும் போதே  போக்கிரிகள் சிலர் கிண்டல் செய்தார்களாம். நல்ல வேளையாக  கண்ணகியின் உடைதான் அந்தக் கயமைக்கும் காரணம் என்று யாரும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவில்லை. காலம் காலமாக ஆணுக்கு பெண் ஒரு கேளிக்கைச் சாதனம்.அவளை சிநேகிதியாக, சக உயிராக பார்க்கப் பழகாத பார்வைக் கோளாறுதான் காரணமே ஒழிய உடைகள் மட்டுமே அல்ல.
மாநகரப் பேருந்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கம்பியை பிடித்தபடி நிற்கிறாள். பின்பக்கமாக ஒரு தடிமாடு அவள்மேல் சாய்ந்து சரிகிறது.குழந்தையின் முகம் கலங்கிப் போய் இருக்கிறது. 'ஹான்ட்பக்' பெண்கள் எல்லாம் இதைக் கவனித்தும், கவனிக்காததுமாய்  இருக்கிறார்கள். கடைசி சீட்டில் மீன்கூடையோடு ஒருத்தி நிற்கிறாள். கூறு கட்டி மீன் விற்றுக் குடும்பம் நடத்தும் அன்றாடங்காய்ச்சி  அவள். அந்தக் குழந்தைக்கு நடக்கும் கொடுமையைக் கண்டதும் கூச்சல் போடுகிறாள்.அவளது சத்தத்தில் தடிமாடு தானே  விலகி பஸ்ஸில் இருந்து தாவிக் கீழே  குதிக்கிறது.
உட்கார்ந்து இருந்த பெண்களின் படிப்பும், பதவியும் அவர்தம் தைரியத்தை உலர வைத்து விட்டது. கூடைகாரிக்கோ இழக்க எதுவுமில்லா இழுபறி வாழ்க்கை...சிறுமை கண்ட இடத்தில் சீறுகிறாள்.இதுதான் கொடுமையை எதிர்ப்பது.
'மோதி மிதித்து விடு பாப்பா...பாதகம் செய்பவரின் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா', என்று பாரதியாரின் வரிகளை செயல் படுத்தி, நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வையோடு தொடர்ந்து செல்லும் ஞானச் செருக்கு நமக்கு அவசியத் தேவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக