புதன், 26 ஜனவரி, 2011

நிறம் ஒரு பொருட்டல்ல....

கறுப்பைப் பரிகாசம் செய்வதும், அதை மதிப்பீட்டுக் குறைவுடன் அணுகுவதும் பன்னெடுங்காலமாக இருக்கும் விஷயம். அது விளையாட்டாக இருக்கும் வரை சரி. வேதனைப் படுத்தும் விதமாக அமைந்துவிட்டால், ஆபத்து.
நிறத்தின் மீதான பழக்கபடுத்தப்பட்ட பார்வை தனி மனிதனுக்குள் தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தி விடுகிறது. 'நிறம் ஒரு பொருட்டல்ல' என்று உணர்வதற்கு முன்பாகவே அது தொடர்பான கேலியும், கிண்டலும் சிலரை அவர்களை அறியாமலே ஒடுங்கிப் போகச் செய்து விடுகிறது. நாமும் அப்போதைய சந்தோஷத்திற்காக இந்தக் கிண்டல்களின் வீரியம் தெரியாமல் விளையாடி வருகிறோம்.
இன்றைக்கு கல்லூரிகளிலும்,  அலுவலகச் சூழலிலும் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக சிவப்பாக இல்லை என்றால் உன்னால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தாக்கம் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது.
வெள்ளை வெளேர் என்று இருக்கும் ஐரோப்பியர்கள் தோல் நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும், சூரிய ஒளி  படும்படி சன்பாத்  எடுத்துக் கொண்டு இருக்கையில், அத்தகைய சருமத்தை இயற்கையிலேயே பெற்று இருக்கிற நாம் சிவப்பாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். கருப்பு நிறத்தோல் அடர்த்தியானது,  இதில் மெலனின் அதிகமாக இருப்பதால் அது ஆரோக்கியமானதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டதாகவும் இருக்கிறது என அறிவியல் உறுதி செய்திருக்கிறது.
இந்தத் தகவல் பலருக்கும் தெரியும்.  ஆனாலும், சிவப்பாக மாற வேண்டும் என்ற தாகம் யாருக்கும் தீரவில்லை. அந்தத் தாகம் அடங்கிவிடாமல் பன்னாட்டு அழகு சந்தை நிறுவனகள் பார்த்துக் கொள்கின்றன. உண்மையில் இன்றைய சூழலில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சிவப்பாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆரோக்கியம் பற்றிய பேச்செல்லாம் அப்புறம் தான்.
முதல் தலைமுறையாக நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கும் ஆண்-பெண் மத்தியில் இந்த உணர்வே மேலோங்கி இருக்கிறது. இதன் பின்னணியில் மிகப் பெரிய வியாபார தந்திரம் ஒளிந்திருக்கிறது.
பார்த்தவுடன் கவனிக்க வைக்கிற வசீகரம் என்பது ஒருவருக்கு கூடுதல் சிறப்பம்சம்தான். ஆனால் அந்த வசீகரம் நிறத்தால் நிர்ணயிக்கபடுவதும் அதை மற்றவர்கள் நம்புவதும் வருத்தம் அளிக்கிறது.
அழகுக்கும்,  நிறத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
 இருக்கிறது என்று முடிவு எடுத்துக்கொண்டவர்களால் இன்றைக்கு சமூகத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வேலை வாய்ப்பில்,திருமணத்தில், உறவு பேணுவதில், சலுகைகள் தரப்படுவதில் என அனைத்திலும் நிறம் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழ அதுவே காரணம்.
இந்த மனோபாவம், தேசத்தின் ஆற்றல் வெளிப்பாட்டுத் திறனையே கேள்விக்குறி ஆக்குகிறது.சக மனிதனை உண்மையாக நேசிக்கிற போதும், வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறபோதும் வெளிப்படுகிற அன்பைவிட அழகு வேறெதுவும் இல்லை.
அழகு என்று இலக்கணங்கள் வகுக்கபடுவது எல்லாம் அறியாமையின் வெளிப்பாடு, வியாபாரதந்திரங்களின் விபரீத புத்தி.
'அவரவர் நிறமே அவரவரின் அடையாளம்
அதுவே அவரின் அழகு.'

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நான் ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வர்ட் !!!!!!!!

" எதுவா  இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவேன்...எனக்கு ஒளிச்சு மறைச்சு எல்லாம் பேசத் தெரியாது. நான் ரொம்ப ஸ்ட்ரெயிட்  பார்வர்ட். என்னை மாதிரி எதையும் நேரடியாக பேசுபவர்கள்....ரொம்ப உண்மையானவர்களாக இருப்பார்கள், அவர்களிடம் ஒரு நாணயம் இருக்கும்.எனவே மனசுக்கு பட்டத பட்டுன்னு சொல்லிடுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன்!"
இப்படி பலர் 'அந்தக் குணத்தை ஒரு ஸ்டேடஸ்  சிம்பலாக அதாவது தனது தனிச் சிறப்பை வெளிக்காட்டும் குறியீடாக வைத்து இருக்கிறார்கள்' என ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது.
மெனக்கெட்டு ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆக நடந்து கொள்வதால், நம்மை அறியாமல் எத்தனை பேரைக் காயப்படுத்தி இருக்கிறோம்? எத்தனை நட்புகளை இழந்து இருக்கிறோம்? எத்தனை உறவுகளைத் தொலைத்து இருக்கிறோம்? எவ்வளவு இதயங்களை தூரத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கிறோம்? கொஞ்சம் யோசித்தால் இந்த வேஷம் எதையும் தரவில்லை என்பது விளங்கும்.
ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆக இருத்தல் என்பது எதையும் வெளிப்படையாக பேசுதல் என்று பார்க்கப் பட வேண்டிய விஷயம் அல்ல.தடைகள் இன்றி ஒரு விஷயத்தை நேரடியாக சிந்திப்பதும், செயல்படுத்துவதும் தான் அதன் உண்மையான அர்த்தம். 
வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பது சிரமம். பேசுவது எளிது.எது எளிதோ அதைச் செய்துவிட்டு அதைத் தனது சிறப்புக் குணம் என்று பெருமை பேசிக்கொள்வது அர்த்தம் அற்றது.
உங்களுக்கு மற்றவர்களிடம்  'அவர் ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ஆன ஆளு,அவர் சரியாகத்தான் சொல்வார்' என்றெல்லாம் அங்கீகாரம் கிடைக்காது. நீங்கள் சொல்கிற கருத்துதான் உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். நீங்கள் யார் என்று விளம்பரம் செய்வதில் அந்த இடம்  கிடைக்காது.
எனவே இங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் பட்டவர்த்தனமாக பேசுகிறவர்களுக்கு எதிரானது அல்ல.அப்படிப் பேசுவதை ஒரு குறியீடாக நம்பி, மெனக்கெட்டு தன் குணாம்சத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பதே இதன் நோக்கம்.

வியாழன், 6 ஜனவரி, 2011

வாழ்க்கைப் பயணத்துக்கு!!!!!!!!!

பல் வலி வரும் போது, வலிக்கும் பல்லை நாவால் நெருடினால் இன்னமும் வலிக்கும் என்று தெரிந்தும், ஒரு தீராத இச்சையோடு நாவு போய் அதே பல்லை நெருடுவது போல....மனசில் வலிக்கும் பகுதிகளை, என்றோ சிந்திய கண்ணீரை, யார் மீதோ இருந்த வெறுப்பை,புறக்கணிப்பை பத்திரமாக வைத்து அவ்வப்போது எண்ணத்தால் தொட்டுப் பார்த்து  'ஸ்..வலிக்குது'  என்று சொல்வதில் ஒரு கடும் சுகம் நமக்கு.
வீட்டினில் இருக்கும் குப்பைகளைப் போக்க போகிப் பண்டிகை கொண்டாடுவதைப் போலவே மனசுக்குள் இருக்கும்  குப்பைகளையும் அகற்றி விடுங்கள்.அதற்கு ஒரு எளிய ஆலோசனை முறையை ஜப்பானிய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 'சுமோ' என்று அந்த முறைக்கு பெயர். 'ஷட்  அப்  அண்ட் மூவ் ஆன்' என்பதுதான் அதன் விரிவாக்கம்.மனசுக்குள் இருக்கும் கசடுகளைப் போக்க ஒரே வழி, அவற்றை அப்படியே தள்ளி, யாரிடமும் பேசாமல், புலம்பாமல் அடுத்த வேலையை பார்க்கும் பயிற்சி தான் அது. 
எங்கே செய்யலாமா? கண்ணை மூடலாம். மனசுக்குள்ளே என்ன கசப்பு இருக்கிறது? என் பிரன்ட் என்னை ஏமாற்றி விட்டாள்,  பாத்து வருஷம் முன்னாடி  உறவுக்காரங்க என்னை கண்டுக்கல, பக்கத்து வீட்டுக்காரர் இன்சல்ட்  பண்ணிட்டார், இத்யாதி விஷயங்களைப் பொறுக்கலாம்.
வீட்டிலிருந்து வெளியேற்றும் குப்பைகள் மாதிரி இந்த குப்பைகளையும் வெளியேற்றலாம். அப்பாடி, மனசு லேசாகி விட்டதே...! நடுநடுவே திரும்ப நினைவு வந்தால்? நினைவு வந்தால் நமக்குள்ளேயே சொல்லலாம் - 'ஷட் அப்  அண்ட் மூவ் ஆன்'. இப்போது தொடர்ந்து நடக்கலாம் தானே?
லெஸ்  luggage  மோர் கம்போர்ட்  - குறைந்த பொருட்கள், எளிதான பயணம்.
வண்டிப் பயணத்துக்கு மட்டுமா? தான்! வாழ்க்கைப் பயணத்துக்கும் தான் !

பெருநதியில் விழுந்த மரம்....

ஒரு நிலத்தில் முளைக்கும் நாற்றைப் பிடுங்கி எடுத்து, வேறு ஒரு நிலத்தில் நடுவது போல..பெண்ணும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குத் திருமணத்துக்குப் பிறகு நடப்படுகிறாள்.இதில், அவள் இழந்து போன பட்டியலில் முதலில் இடம் பிடிப்பது, அவளின் நட்பும், தோழிகளும் தான்.
சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' நாவலில் வரும் கதாநாயகன் மாதிரியோ, 'ஆட்டோக்ராப்' படத்தின் சேரன் மாதிரியோ....பழைய நட்பை தேடித் போய் புதுப்பிக்கும் பெண்கள் யாரவது இருக்க முடியுமா? (அதுசரி....பள்ளிக்கால நண்பன், கல்லூரிகால நண்பன் என்று தேடி, தேடி பெண்ணொருத்தி தன கல்யாணத்துக்கு  பத்திரிக்கை வைக்கும் கதையை யாராவது சினிமா எடுக்க முடியுமா என்ன? ) நேரத்தை விழுங்கும் வேலைச் சங்கிலியா, 'தான்,தன் குடும்பம்' என்று தன் மீது விழும் தன்னலப் போர்வையா...எது காரணம் என்று தெரியவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் பெண்ணின் தோழமை தொலைந்து போய் விடுவதேன்னவோ நிஜம்.
கிராமத்துச் சிறுமிகள் இருவரது நட்புப் பற்றி வைரமுத்துவின் கவிதை கண் முன் நிழலாடுகிறது.
'எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்
தண்ணியில்லா காட்டுக்கு தாலி கட்டி நான் போக...
வரட்டூறு தாண்டி வாக்கப்பட்டு நீ  போக...
உன் புருஷன் உன் பிள்ளை உன் பொழப்பு உன்னோட...
என் புருஷன் என் பிள்ளை என் பொழப்பு என்னோட...'
கோப்பெருஞ்சோழன்   - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், ராமன் - குகன், என்று இலக்கியங்கள், புராணங்கள் தோறும் போற்றப்படும் நட்பெல்லாம் ஆண்களுக்குரியது. மருந்துக்குக் கூட பெண்ணும், பெண்ணும் கொள்ளும் நட்பென்னும் பெருநேசம் பேசப் படவில்லை. அப்படியே இருந்தாலும் ஜெயலலிதா,சசிகலா போல கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
நிஜத்தில்...அத்திப் பூத்தது மாதிரி காட்சிக்கு தெரியும் சில நட்புகள், போலீஸ் அதிகாரி ரத்தோர் போன்ற கொடூரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான ருச்சிகா தற்கொலை செய்துகொண்டாள். ரத்தோரின் முகத்திரையை உலகிற்கு கிழித்துக் காட்டிய ஒரே சாட்சி அவள் தோழி ஆராதனா.தோழிக்கு நீதி வேண்டும் என்று பதினெட்டு ஆண்டுகளாக இந்தியாவிற்கு வந்து போகிறாள்...தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி இருக்கும் ஆராதனா.
பெருநதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்க்கை.நதியில் பயணத்தை தொடங்கிய பல மரங்களின் பயணமும் வெவ்வேராகிப்  போவது போல, தோழிகளின் சிரிப்பொலியோடு     தொடங்கும் வாழ்வின் ஓட்டம்,  ஒவ்வொருவராகப் பிரிந்து, ஒவ்வொரு  நட்பையுமே இழப்பது இயல்பாகிறது.
பிரியாத நட்பென்னும் பேரு வரம் வருங்கால சந்ததியனருக்காவது  வாய்க்கட்டும்.  

புதன், 5 ஜனவரி, 2011

எதுவும் மந்திரமில்லை...

'மூலிகைகள் நல்ல  விளைவுகளுக்கு பயன்படுத்தப்படுரதப்  போலவே தீய விளைவுகளுக்கும் பயன்படுத்தபடுகின்றன என்கிறார் ஹெர்பல் கிளினிக் நடத்தும் முகுந்தன். 'மந்திரம் மாந்த்ரீகம்னு' சிலர் உட்கார்ந்துகிட்டு, தவறான மூலிகைகளை பயன்படுத்தி உடல் நோய், சரும நோய், வசியம்னு பல பிரச்சினைகளை உண்டு பண்ணிடுவாங்க. மயக்கமூட்ட, சிலவகையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்க இவ்வகை மூலிகைகளால் முடியும். பாதிக்கப்பட்டவங்க, குறிப்பா பெண்கள், 'செய்வினை வச்சுடாங்க, 'தகடு வச்சுட்டாங்க', ன்னு  அழுவார்கள். இதனைப் போக்கி மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் தீய வழியில் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
இத்தகைய மாந்த்ரீகம் பண்ணுபவர்கள், பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டுட்டு கடைசியா ஒரு பொட்டலத்தில் ஏதோ ஒன்றைத் தருவான். அது வேறொன்றுமில்லை..சாட்சாத் மூலிகைத் தயாரிப்புத்தான்...அது விஷத்தன்மையுள்ள தாவரங்கள் ஆகும்.அதனை பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணி ...யாரை முடக்கணுமோ, அந்த நபருக்கு நெருங்கிய மனுஷங்க மூலமா இதை எல்லாம் உணவுல கலந்து கொடுக்க வச்சுருவாங்க. மூலிகையோட நச்சுத்தன்மை ரத்தத்துல கலந்து தன்னோட ஆட்டத்தை ஆரம்பிக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மாதிரி சூத்திரதாரிகள், எதிர்மறை தாவரங்களோட  combination யும் தெரிஞ்சு வச்சு இருப்பாங்க.அதுதான் அவங்க பலமே...இப்படி மருந்து கொடுக்கப்பட்டவங்க இயல்புக்கு வினோதமா நடப்பதைத்தான்,'வசியம் வச்சுட்டாங்க'ன்னு சொல்றாங்க.இதெல்லாமே முழுக்க முழுக்க உடல் சார்ந்த விஷயமே தவிர, இதுல அமானுஷ்யமோ, தெய்வத்தன்மையோ  துளியும் கிடையாது.
பொதுவா பெண்கள் தான் இப்படி மந்திரம், மாந்த்ரீகம்னு நம்புறது. வீட்டுல யாருக்காவது இப்படி வினோத பிரச்சினை வந்தா, 'செய்வினை வச்சுடாங்க'ன்னு புலம்பறது தவறு.'அதைத் திருப்பி எடுக்கப் போறேன்னு கிளம்பறது அதை விட பெரியத் தவறு. காரணம் பெரும்பாலான மருந்துகள் ஜீரணமாகி ரத்தத்துல கலந்த பின்னர்தான், அதோட வேலையைக் காட்டும்.இதனை சரி செய்ய மாந்த்ரீகப் போர்வையில் இருக்கும் மூலிகை வில்லன்களைத் தேடித் போகும் போது, அதோட பாதிப்புகள் இன்னும் அதிகம் ஆகும்.