வியாழன், 6 ஜனவரி, 2011

பெருநதியில் விழுந்த மரம்....

ஒரு நிலத்தில் முளைக்கும் நாற்றைப் பிடுங்கி எடுத்து, வேறு ஒரு நிலத்தில் நடுவது போல..பெண்ணும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குத் திருமணத்துக்குப் பிறகு நடப்படுகிறாள்.இதில், அவள் இழந்து போன பட்டியலில் முதலில் இடம் பிடிப்பது, அவளின் நட்பும், தோழிகளும் தான்.
சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' நாவலில் வரும் கதாநாயகன் மாதிரியோ, 'ஆட்டோக்ராப்' படத்தின் சேரன் மாதிரியோ....பழைய நட்பை தேடித் போய் புதுப்பிக்கும் பெண்கள் யாரவது இருக்க முடியுமா? (அதுசரி....பள்ளிக்கால நண்பன், கல்லூரிகால நண்பன் என்று தேடி, தேடி பெண்ணொருத்தி தன கல்யாணத்துக்கு  பத்திரிக்கை வைக்கும் கதையை யாராவது சினிமா எடுக்க முடியுமா என்ன? ) நேரத்தை விழுங்கும் வேலைச் சங்கிலியா, 'தான்,தன் குடும்பம்' என்று தன் மீது விழும் தன்னலப் போர்வையா...எது காரணம் என்று தெரியவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் பெண்ணின் தோழமை தொலைந்து போய் விடுவதேன்னவோ நிஜம்.
கிராமத்துச் சிறுமிகள் இருவரது நட்புப் பற்றி வைரமுத்துவின் கவிதை கண் முன் நிழலாடுகிறது.
'எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்
தண்ணியில்லா காட்டுக்கு தாலி கட்டி நான் போக...
வரட்டூறு தாண்டி வாக்கப்பட்டு நீ  போக...
உன் புருஷன் உன் பிள்ளை உன் பொழப்பு உன்னோட...
என் புருஷன் என் பிள்ளை என் பொழப்பு என்னோட...'
கோப்பெருஞ்சோழன்   - பிசிராந்தையார், துரியோதனன் - கர்ணன், ராமன் - குகன், என்று இலக்கியங்கள், புராணங்கள் தோறும் போற்றப்படும் நட்பெல்லாம் ஆண்களுக்குரியது. மருந்துக்குக் கூட பெண்ணும், பெண்ணும் கொள்ளும் நட்பென்னும் பெருநேசம் பேசப் படவில்லை. அப்படியே இருந்தாலும் ஜெயலலிதா,சசிகலா போல கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
நிஜத்தில்...அத்திப் பூத்தது மாதிரி காட்சிக்கு தெரியும் சில நட்புகள், போலீஸ் அதிகாரி ரத்தோர் போன்ற கொடூரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான ருச்சிகா தற்கொலை செய்துகொண்டாள். ரத்தோரின் முகத்திரையை உலகிற்கு கிழித்துக் காட்டிய ஒரே சாட்சி அவள் தோழி ஆராதனா.தோழிக்கு நீதி வேண்டும் என்று பதினெட்டு ஆண்டுகளாக இந்தியாவிற்கு வந்து போகிறாள்...தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி இருக்கும் ஆராதனா.
பெருநதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்க்கை.நதியில் பயணத்தை தொடங்கிய பல மரங்களின் பயணமும் வெவ்வேராகிப்  போவது போல, தோழிகளின் சிரிப்பொலியோடு     தொடங்கும் வாழ்வின் ஓட்டம்,  ஒவ்வொருவராகப் பிரிந்து, ஒவ்வொரு  நட்பையுமே இழப்பது இயல்பாகிறது.
பிரியாத நட்பென்னும் பேரு வரம் வருங்கால சந்ததியனருக்காவது  வாய்க்கட்டும்.  

2 கருத்துகள்:

  1. ஆதங்கம் வரிகளில் கோபங்களாக கொப்பளிக்கின்றன. கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பெருநதியில் விழுந்த மரம் -பெயர் வெகு பொருத்தம். வாழ்க்கையினோட்டத்தில் மரத்துப்போனாலும் மறந்துபோகுமோ பால்யத்தின் சிநேகிதிகளை! அருமையான அலசல்.

    பதிலளிநீக்கு