திங்கள், 5 டிசம்பர், 2011

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

எளிதில் கலையும் பிம்பம்










காலந்தோறும் கதாநாயகர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் சமூகத்தின் எந்தக் குழுவினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ‘தன்னையா’, ’தன் சமூகத்தையா’ அவர்கள் யாரை அடையாளப்படுத்துகிறார்கள்? சமூகத்தின் எந்தப் பிரிவினரை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? அப்பிரிவினரிடம் என்னவிதமான எழுச்சியை ஏற்படுத்துகிறார்கள்? இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, ‘தான்’ என்ற சுயபிம்பத்தை அவர்கள் என்னனம் கட்டமைத்துக் கொள்கிறார்கள்? இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடைந்த பின்பு தான் அவர்கள் கதாநாயகர்களா என்ற கேள்விக்கும் பதிலையும் கண்டடைய முடியும். ரஜினி எனும் தனிமனித சமூக நாயகனுக்குப் பின்பு வருவோம். ஆனால், அவர் அந்தக் கதாநாயகத்தன்மையை – ஹீரோயிஸத்தை, திரையில் தன் உருவில் தோன்றிய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் பெற்றிருப்பதால், ரஜினி என்ற திரைக் கதாநாயகனுக்கே முதலில் செல்வோம்.




தமிழகத்தின் செம்மாந்த ஆண் தலைவர்கள் எல்லோருமே பெரும்பாலும் அல்லது எப்பொழுதுமே ‘ஆணாதிக்கக்’ கதாநாயகர்களாகவே இருந்திருக்கின்றனர். ‘ஹீரோயிஸம்’ நிலைநாட்டப்படுவது என்பதை, பெண்ணுக்கு எதிரான வாக்குத் தத்தங்களை உதிர்ப்பதன் வழியாகவே காட்டியிருக்கின்றனர். அந்த மனநிலையினூடேயே தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இலக்கியம், சினிமா, அரசியல் இந்த மூன்று முதன்மையான துறைகளிலுமே இந்த ‘ஹீரோயிஸம்’ ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கப்பட்டும், ஒன்றையொன்று ஆதரித்தும் தான் பெருவாரியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.




எப்பொழுதுமே தமிழ் சினிமா, இந்த பெண் எதிர்ப்பு, ஆணாதிக்க, கதாநாயகத் தன்மைகளிலிருந்து வெளியே வந்ததே இல்லை. காலந்தோறும் அதற்கு ஊட்டமளிக்கும் வண்ணம் தமிழ்சினிமாவாதிகள் செவ்வனே அரசியலையும், இலக்கியத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். சமூகவரலாற்றைத் திரித்திக் கொண்டார்கள். அவ்வப்பொழுது, தன் ‘ஹீரோயிஸத்தை’ நிலைநாட்ட, இலக்கியத் துறையிலிருந்தும் ’கதாநாயகர்கள்’ திரைத்துறைக்குச் சென்றிருக்கிறார்கள். திரையில், ஒரு பெண் தாயாகும் போது புறநானூற்றுத் தாயாகவும், அதற்கு முன்பான இளமை வரை, அலங்கார ஜடமாகவும் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள்! இந்நிலையில், பெண் பற்றிய சிந்தனைகள் பற்றி தமிழ்த்திரை இயக்குநர்களும், கதாநாயகர்களும் ரொம்பவும் தான் குழம்பிப் போனார்கள்.




இவர்களிலேயே உச்சம், ரஜினி எனும் கதாநாயகன்! தெள்ளத் தெளிவாக, தேர்ந்தெடுத்த சொற்களுடன் பெண்களை வரையறுக்கவும், தான் வரையறுக்கும்படியான பெண்களையே, ’நல்ல’ பெண்களாய் தன் ரசிகமணிகளுக்கு முன் மொழியவும் அவரால் முடிந்தது. அவரது கதாநாயகத்தன்மை, தமிழ் பேசும் பெண்களுக்காகக் கட்டமைக்கப்பட்டவை. ‘பொம்பளையின்னா பொறுமை வேணும், அவசரப்படக்கூடாது! அடக்கம் வேணும்! ஆத்திரப்படக்கூடாது! அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது! கட்டுப்பாடுவேணும், கத்தக்கூடாது! பயபக்தியா இருக்கனும்! இப்படி பஜாரித்தனம் பண்ணக்கூடாது! மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கனும்!’ ‘அதிகமா ஆசைப்படற ஆம்பிளையும் அதிகமா ஆத்திரப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’ ’படையப்பாவில்’ வரும் இந்த வசனம் மட்டுமே ரஜினி ரசிகர்களால் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்டிருக்கும்! அவரவர் வீட்டுச் சுவர்களில் எதிரொலித்து அடங்காதிருக்கும்!




ரஜினியை ஒரு நடிகனாகவோ, அவரது நடிப்பாற்றல் குறித்தோ விமர்சிப்பது திரைத்துறையினரின் பணி! அது அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறை! ஆனால், அவரை வைத்துக் கட்டமைக்கப்பட்ட, ‘கதாநாயகத் தன்மை’யின் விளைவுகளும் விபரீதங்களும் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தை எந்த அளவிற்குப் பீடித்திருக்கிறது என்பது விவாதிக்கப்படவேண்டியது! பெரும்பாலும், அவருக்கு இணையாக உருவாக்கப்படும் பிற பெண் கதாபாத்திரங்கள், அவரைப் பொறுத்தவரை, கதாநாயகிகளாக இருக்கத் தகுதியற்ற, சிறந்த ஆளுமையாக இருக்க முடியாத பெண்கள்! அவர்கள் நொறுங்கிப் போகும் அளவிற்கு ஒடுக்கப்படுவார்கள்! அந்த நிறைவுக் கட்டம் வரை திரைக்கதை நீளும்!




முதலில், ரஜினி, கூலித் தொழிலாளர்களில் ஒருவராக, அவர்களின் தலைவனாக அடையாளம் பெற்றார்! அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த மத்திய தரவர்க்கத்தின் அடையாளமாகத் தன்னை மாற்றிக் கொண்டது, அவரது முதல் வெற்றி! அம்மக்களின் உளவியல் பிரச்சனைகளை, இயக்குநர்கள் ரஜினி என்ற கதாபாத்திரத்தின் மீது ஏற்றினர்! திரையில், அக்கதாபாத்திரம், குடித்தது, புகைத்தது! ஒழுக்க நெறிகளைக் கற்பித்தது! ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பிளையாக இருக்கவும் வகுப்புகள் எடுத்தது! காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரம் முதிர்ந்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப்பதிந்து, பதிந்து ஒரு பிம்பமாக உருவெடுத்தது! இனி ரஜினியே நினைத்தாலும் அந்தப் பிம்பத்தைக் கலைக்கமுடியாது!




சென்ற காலத்தில் ரஜினியின் தாக்கம் சமூக அரசியலில் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவிற்கு, அது சமூக மாற்றத்தில் பங்கேற்காமல் டுபாக்கூர் அதிர்வுகள் ஆனது, எல்லோரும் அறிந்ததே! தனிமனித அரசியல் சிந்தனைகள் தமிழகத்தில் வேகாத பருப்பாக ஆகி இருந்த காலத்தில் தான் ரஜினி தன் அரசியல் சிந்தனைகளை சினிமாவில் மட்டும் தைரியமாகப் பேசத் தொடங்கியிருந்தார். அதுவும் இலை மறை காயாகத்தான்! அப்படித்தான் தன் படங்களை வெற்றிபெறச் செய்யமுடிந்திருக்கலாம்!
ரஜினியின் ரசிகர்கள் யார்? அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கமாகக் கூட இருக்க மாட்டார்கள். அடித்தட்டு மக்களாகவும், முதல் தலைமுறையாகக் கல்வியை அதிக முயற்சிக்குப்பிறகு பெறவேண்டியவர்களாயும், தான் சார்ந்த சமூகப் பொறுப்புகளை ஏற்க வேண்டியவர்களாயும் இருப்பவர்கள். அவர்களை விசிலடிச்சான்களாக மாற்றும் சமூகப் பணி தான், இந்த ஆதிக்க மனநிலையுடைய சினிமாவால் சாத்தியப்பட்டிருக்கிறது. ரஜினி, திரையில் பெண்களை எப்படிக் குறிப்பிட்டாரோ அது போன்றே, ரஜினியின் ரசிகர்களும் பெண்களைப் புரிந்து கொண்டார்கள். அங்க அடையாளங்களில் அவர் பாணி பாவனைகளை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அவரைப் போல ஒற்றை ரூபாயை வைத்து யாருமே தம் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற முடியவில்லை. காரணம், இவை எல்லாமே யதார்த்தங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்தமை தான்!



மக்கள் திரளைத் தம் சொந்த நலத்திற்காக, அவரும், அவரது சினிமாவை உருவாக்குவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கே. எஸ். ரவிக்குமாரும், தங்களின் சுய மனநிலையைத் தான் திரையில் தொடர்ந்து பிரதிபலித்தார்கள். ஒரு தடித்த, ஆதிக்க சிந்தனையைத் தங்கள் கதைகளில் முழு விழிப்புடன் செய்தார்கள். இவர்கள் எத்தனை வயதானாலும், முதுமையடைந்தாலும், திரைக்கதைகளில் ஒரு வளர்ந்த பாலகனாகவே வெளிப்பட்டனர். இச்சிறுபிள்ளைத் தனத்தை, ரஜினி என்ற கதாநாயகனின் எல்லா வசனங்களையும் சுட்டிக் காட்டி உணர்த்தமுடியும் என்றாலும், ‘மன்னன்’ என்ற படத்தில் இடம்பெற்ற வசனமும் அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் தமிழ்த்திரையின் ஆண் மன வளர்ச்சியையும் அதன் சிறுபிள்ளைத்தனத்தையும் தெள்ளத் தெளிவாகச் சுட்டக்கூடியது. ‘நம்பர் 1 பெரிதா? நம்பர் 2 பெரிதா?’ என்ற கேள்விக்கு, ரஜினியின் விளக்கம், நம்பர் 2 தானே எண்ணிக்கையில் பெரியது என்பதாய் இருக்கும்!



ரஜினி என்ற கதாநாயகன், ஒரு கதாநாயகனாக இருக்க, எந்தத் தகுதியும் திறனும் அற்ற கதாநாயகனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது அதையே விரும்பிச் செய்திருக்கிறார். ரஜினியின் தனித்தன்மை விமர்சிக்கப்பட்ட அளவிற்கு, அவர் திரையில் ஏற்ற கதாபாத்திரங்கள் ஆராயப்பட்டதில்லை. திரையில் அவர் தோன்றிய கதாபாத்திரங்கள், அவரது தனிமனித பிம்பத்தினும் ஆபத்தானவை. ஒரு மிகையான ஆண் சித்திரத்தைக் கட்டமைத்த அதன் ஒரு செம்மையான ஒரு பிரதியின் மாதிரியைத் திரையில் உருவாக்கி, அதன் எக்கச்சக்கமான பிரதிகளைச் சமூகத்தில் உண்டாக்குவதே அவரது கதாபாத்திரத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாகவே, இயக்குநர்கள், ‘ரஜினி சாருக்கான கதை!’ என்று உருவாக்கும்போது அடிப்படையான சில உள்ளடக்கங்களை மீறி வெளியே போகவில்லை.



இரண்டு முக்கியமான திரைப்படங்களைக் கவனத்தில் இருத்தி முன்னகரலாம் என்று நினைக்கிறேன். அவை, ‘மன்னன்’ மற்றும், ‘படையப்பா’. திரையில் அவருடன் தோன்றும் இரு பெண்களின் ஒருவர் முழுமையான ஆளுமையுடன் சித்திரிக்கப்பட்டு, அவர் ரஜினியால், ‘பொம்பளை இப்படி இருக்கக்கூடாது!’ என்பதற்கு உதாரணமாகவும், இன்னொரு பெண், தன்னை தாழ்த்திக்கொண்ட கதாபாத்திரமாகவும், அவரே அவரால் முழுமையான பெண்ணாகவும் நிறுவப்படுவார். பெரும்பாலும், அம்மா என்ற நிலையில் மட்டுமே பெண் என்பவர் அவரால் மதிக்கப்படுவார். இது தமிழ்ச்சமூகத்தின் வழக்கமான சென்டிமெண்ட் மனோபாவத்திற்காக!




திரையில் ரஜினியின் ஆண் ஆளுமைச் சாதனைளாவன:
பெண் ஆளுமையை ஒடுக்கப் பெண்களை மூர்க்கமாகக் கன்னத்தில் அறைந்தது!
பெண், ஆண் அங்க அசைவுகள், பாவனைகள் எப்படி இருக்கவேண்டும் என்று தன் ஸ்டைல் மொழிகளாலேயே பயிற்றுவித்தது!
சில பெண் ஒழுக்க இலக்கணங்களை பஞ்ச் வசனங்களாக்கியது: உதாரணத்திற்கு,
‘என்ன தான் பெண்கள் துணிச்சலா இருந்தாலும், பொறுமையா இருந்தாத்தான் பெருமையா வாழமுடியும்?’
’எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பிளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது!’
தாய், தங்கை, மகள் நிலையில் இருக்கும் பெண்கள் தன் அக்கறைக்கு உட்பட்டவர்கள். மனைவியோ காதலியோ கட்டுப்பாடுகளைச் சுமக்கக் கடன்பட்டவள் என்பதை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்துவது.

ஒரு நடிகனின் வசனத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்று இவ்விடம் சப்பைக் கட்டுபவர்களுக்கு என் கேள்வி, சினிமா என்ற வியாபாரத்துறையில், வசூலும், சினிமாவின் வெற்றி என்பதும் பெரிய கணிதமாக இருக்கும் பட்சத்தில், அதற்கான ரசிக உற்சாகங்கள் அதிக விளைவைக் கொடுக்கக்கூடியது என்பதாலும், ரசிகர்களின் மனநிலைக்கு உற்சாகம் அளிப்பதற்கு ஏற்றபடியும், சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்றபடியும், வசனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாலும், ரஜினியின் கதாநாயக வசனங்களை, வெறும் ஹீரோவின் வசனம் என்று மட்டுமே ஒதுக்கி விட முடியாது!
இந்திய மண்ணில் பெண், திருமணம் பற்றிய வலுவான சிந்தனைகள் காலந்தோறும் வெவ்வேறு ஊடகங்கள் வழியாக உரத்த குரலுடையோரால் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை, அடிமை நிலையை, எல்லா நிலைகளிலும் சமூகத்தில் ஊட்டிக் கொண்டே இருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் சினிமா காலத்தில் அது ரஜினியின் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தவர்கள் எல்லோருமே, சனாதன மூளைகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்! அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், சங்கர், மணி ரத்தினம் என ஒவ்வொரு இயக்குநரின் திரைக்கதைக்குள்ளும் நம் ஆய்வைத்

தொடரவேண்டியிருக்கும்! ரஜினியின் ஒரே முகமுடைய இக்கதாபாத்திரங்கள் வேறுவேறு உடைகளை அணிந்து வேறு வேறு சினிமாவில் தோற்றம் தந்தன.




பாலியல் சிந்தனை ரஜினி எனும் நாயகனுக்கு, மனிதப்பண்புகளுடன் அல்லாது இயந்திரத்தனமான கட்டமைக்கப்பட்ட மொழியில் உருவாகிறது. சென்னை நீதிமன்ற வளாகத்தில் ஒருமுறை, ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களைத் தாக்கவந்த காவல்துறையினர் முன்பு, தம் பாவாடையை உயர்த்திக் காட்ட, எல்லா காவல்துறை அதிகாரிகளும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடியதாகச் செய்தி. இது எதைக் காட்டுகிறது? வழக்கமாக, இதே காவல் துறையினரால் தான் பாலியல் ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கும் இப்பெண்கள், தங்கள் உடைகளை உயர்த்தி அந்தரங்கங்களைக் காட்டும்போது ஏன் அக்காட்சியை அனுபவிக்காது ஓடுகின்றனர். பெண்ணின் பாலியல் ஆற்றல் அத்துணை வலிமை மிக்கது. அதன் மீது செயல்படும் ஆணின் அதிகார முறைகளும் அத்தகையது. அதாவது, பெண்ணின் பாலியல் ஆற்றலை தானே சுரண்டும்போது அது இன்பமாகவும், அதை அவர்களே தம் வலிமையாக மாற்றி, தானே வழங்கும் போது, அச்சம் கொண்டு ஓடுவதுமாக, எதிரெதிர் நிலைகளை எடுக்கிறது.
ரஜினியின் கதாநாயகன் முன், இத்தகைய இருநிலையடையும் ஒற்றையான பெண்கள் தாம் இரு கதாபாத்திரங்களாகின்றனர். ஒரு பாத்திரம், தன் பாலியல் ஆற்றலை தன் சுயவிருப்பப்படி, கோருகிறது. தன் தேவையை முழக்கமாய், திமிர்பிடித்த பெண்ணாய்க் கூறுகிறது. இன்னொரு பாத்திரம், அதை ஆணின் வசதிக்கேற்றபடி, விட்டுக்கொடுக்கிறது. ஆணின் இசைவிற்கேற்ப தன் பாலியல் ஆற்றலை வழங்க நிர்ப்பந்திக்கப்படும் எந்த ஒரு பெண்ணும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவளே.
எல்லா கதைகளிலும் உழைப்பின் முக்கியத்துவத்தை, அதில் தொடர்ந்து ஈடுபடும் தன் விடாமுயற்சியை நிரூபிக்கும் அவர் பாத்திரங்கள், ஏனோ பெண்ணுக்கு எதிரான தம் ஒடுக்குமுறையை விட்டதேயில்லை. மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் முக்கோணவடிவில் நிறுத்தப்படும். குறிப்பாக, இரண்டு திரைப்படங்கள். ‘மன்னனின் வரும் கிருஷ்ணன்’, ‘படையப்பாவில் வரும் படையப்பா’ இரண்டிலுமே, ஆளுமையான ஒரு பெண், ரஜினி கதாபாத்திரத்தை மணந்து கொள்ளத்துடிக்கும்! அது, பெண்ணின் பாலியல் இச்சையை மறைமுகமாகக் குறிப்பதே அல்லாமல் வேறேதுமில்லை! அந்த ஆணுடனான திருமணம் என்ற தன் இச்சையை அவள் சொல்வதே ஓர் ஆபாசமான, கொச்சையான விஷயமாகக் காட்டப்படும்! பெண்கள், ஆண்களின் தாடியைப் போலவே தமக்கான ஸ்டைலையும் வளர்த்துக் கொள்ளமுடியாது போல!




இனி, ‘உழைப்பு’ என்ற அடுத்த மைய சிந்தனைக்கு வருவோம்! அது, ஒடுக்கப்பட்ட மக்களைப் பொருட்படுத்திய உழைப்பு இல்லை. சமூக ஏணியில், ‘உழைக்கும்’ வர்க்கம் என்று அவர் குறிப்பிடுவதும் உண்மையிலேயே உழைக்கும் இனத்தைக் காட்டவே இல்லை. பொதுவாக, தொழிற்சாலைகளில் உழைக்கும் மக்களைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்! அவர்கள் எல்லாம் யாராக இருந்திருப்பார்கள்! கண்டிப்பாக, மத்திய தரவர்க்க, இடைநிலை சாதியினர் தாம்! அவர்களுக்கு மத்தியில் தானும் ஒருவராய் நின்று, அவர்களின் தலைவனாய் தன்னை வரிந்து கொண்டு, அதே சமயம், அவர்கள் என்ன மாதிரியான திருமணம், குடும்பம், பெண் போன்றவற்றைத் தமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பாலபாடத்தை அவர்களுக்குக் கற்பித்ததுடன், ஆதிக்கச்சிந்தனையின் முத்திரையான தன் கதாபாத்திரத்தின் வெற்றியை நிலைநாட்டிக்கொண்டார்!
இதில் இருட்டடிக்கப்பட்டது, மேல் வர்க்க, ஆதிக்க சாதி மக்களின் சிந்தனை எப்படி தந்திரமாக சினிமாவில் நிறுவப்படுகிறது என்பதும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் தொழில்கள் அடையாளப்படாத ஓர் உழைப்பை முன் வைத்த அவரது சனாதனம் என்பதும்! இது, தன் சுய, சாதி, மதம், பால் அடையாளங்களை எந்த விதத்திலும், தமிழக அரசியல் சூழ்நிலைகளை குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட, அவரது தந்திரங்கள் இது வரை வெளிச்சம் பெறாமலேயே போயின. பொருட்படுத்தாமலும் போயின!



தன்னை விட பெரிதாகத் திரையில் காட்டப்பட்ட தன் ஹீரோயிஸத்தைக் கண்டு அவரே மிரண்டிருக்கவேண்டும்! பதில்கள் சொல்வதில், முடிவுகளைத் தெரிவிப்பதில் தடுமாறிப்போனார். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்காக அவர் எப்பொழுதுமே காத்திருந்தார்! தன் எல்லா சுமையையும், ரஜினி என்ற கதாநாயகன் மீது ஏற்றிவிட்டுக் கொண்டு, சிவனே என்று இருந்தார். ரசிகர்களின் உறக்கம் கெடுத்தார். ரசிகர்கள் தம் வீடுகளின் இரவுகளையும் பகலையும் இழந்தனர். இந்த விளைவுகளின் முடிவும் எல்லையும் எதிர்காலத்தில் தான் தெரியும்!



இதற்குப் பின்பு, ரஜினி சிறந்த மனிதனாகவோ, ஆன்மீகவாதியாகவோ இருந்தால் என்ன, இல்லாமல் போனால் தான் என்ன? சிறந்த மனிதன் என்பவன், தன் வாழ்வின் நாளில், சக மனிதனின் மனதிலோ, செய்கையிலோ அடிமைத்தனத்தை விதைக்காமல் இருப்பவன் தானே! ரஜினி எனும் கதாநாயகன், திரைப்படங்களுக்கு வெளியே என்ன செய்திருக்கிறார் என்பது கேள்வி கேட்கப்படவே இல்லை. அவர் எப்பொழுதுமே. ‘புனிதனாக’ப் பார்க்கப்பட்டிருக்கிறார்! சமூகத்தின் அரசியலை தன் கதைகளில் அவர் விமர்சித்ததே இல்லை. கதைகளுக்குள் வெற்றியை நோக்கிய போராட்டமும், அதனோடு இழையோடும் நகைச்சுவையும், தாம் முதன்மைப்படுத்தப்பட்டன. பேருந்து நடத்துநராக இருந்து கதாநாயகனான ஒரு மனிதனின், வாழ்க்கை அவர் ‘வெற்றியின் கதை’களுக்கு நம்பகத்தன்மையையும் விசில் சத்தங்களையும் கொடுத்தது. ஆனால், அது தவிர, ரஜினியின் கதாநாயகன், தன்னைத் தானே மிகுந்த எச்சரிக்கையுடனேயே ஓர் ஒளிவட்டத்தில் இருத்திக்கொண்டு அதை விட்டு வெளியே வரவில்லை. ரசிகனுடனோ, சமூகத்தின் பிற பார்வையாளனுடனோ, ஏன் சமூகத்துடனோ கூட எந்தத் தொடர்பையும், இணக்கத்தையும், சம உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை.



புகழின் வெளிச்சத்தில், திரைக்கு வெளியேயும் அவர் கண்கள் மயங்கித்தான் போயிருந்தார். சமூக மாற்றத்திற்கான அரசியல் பயணமும் போராட்டமும் ஏன், எரியும் பிரச்சனைகள் தமிழகத்தைப் பீடித்திருந்த போது கூட, அது அவரைக் கிஞ்சித்தும் பாதித்தது இல்லை. அவருக்குத் தன் கருத்தை சொல்வதற்கான துணிவு இல்லை. தயக்கமும் பயமும் அவரை எப்பொழுதுமே அவரை இருந்த இடத்திலேயே அழுத்தின என்று தான் சொல்லவேண்டும். அவர் ஏற்ற கதாநாயக வேடங்கள், அவர் எவ்வளவு பெரிய மனிதராக வளர்ந்த போதும், சூழ்நிலைகளைக் கையாளத் தேவையான சமூக அறிவை பெற்ற ஆளுமையாக உயர்த்தவே இல்லை. தன் தொடர் தப்பித்தல் நடவடிக்கைகளால், இந்த நெருக்கடிகளிலிருந்து நாகரிகமாக அவரால் எப்பொழுதுமே விலகி இருக்க முடிந்திருக்கிறது.



திரையில் மின்னும் கதாநாயகர்களான, படையப்பா, பாபா, அண்ணாமலை, இன்ன பிற கதாநாயகர்களின் பிரச்சனையும் இது தான்! சாதாரண, ஆனால், உரத்துச் சொல்லப்படும் பஞ்ச் வசனங்களால், சமூக அரசியலைப் புரிந்து கொள்ளும் அறிவை வழங்கப் போதவில்லை. ரஜினியைப் போலவே ஒரு தலைமுறை ரசிகர்களும், இம்மாதிரியான ஊக்குவிப்புகளுடன் சமூகத்திற்குப் புறத்தே நிறுத்தப்படுகின்றனர். ரஜினி ரசிகர்கள், ‘ரஜினி எனும் மாயை’யில் சிக்கிக்கொண்டது போலவே ரஜினியும் சிக்கிக் கொண்டது தான் வேதனை! ரஜினி, யாரையுமே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, சமயங்களில், அவர் தன்னையே கூட!




திரையில், அக்கதாபாத்திரம், குடித்தது, புகைத்தது! ஒழுக்க நெறிகளைக் கற்பித்தது! ஆண் ஆம்பிளையாக இருக்கவும், பெண் பொம்பிளையாக இருக்கவும் வகுப்புகள் எடுத்தது! காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரம் முதிர்ந்து, ரசிகர்களின் மனதில் ஆழமாகப்பதிந்து, பதிந்து ஒரு பிம்பமாக உருவெடுத்தது! ரஜினியின் இத்தகைய பிம்பங்கள், நாம் நினைப்பது போலவும், ரசிகர்கள் நினைப்பது போலவும் கலைக்கக் கடினமானது இல்லை. அவை வாணவேடிக்கை! நிரந்தரத்தன்மை அற்றவை! தற்காலிகமாகக் கவனத்தைத் திருப்பிவிட்டு, அவனை அப்படியே அந்தரத்தில் விட்டுவிடும்! ரசிகன் தன் வாழ்க்கையின், அதன் யதார்த்தத்தின் படுபாதாளத்தில் வீழ்ந்து மண்டை வீங்கும் வரை வாணவேடிக்கையை ரசிப்பான்! அந்தரங்கவாழ்க்கை மனிதனை அழுத்தும் கணங்களில் எவருடனும் இந்த, ‘கதாநாயக பிம்பங்கள்’ துணைக்கிருந்து காப்பாற்றுவதில்லை! தனிமனிதனின் இரத்தம் சுண்டிய கணங்களில், ரஜினிக்காக இது வரை எழுதப்பட்ட ஒற்றை வசனம் கூட ஊக்கமளிப்பதில்லை! வாழ்க்கையின் அகழியை, கடக்கும் தினவை தனிமனிதனுக்கு வழங்க இயலாத ரஜினி என்னும் பிம்பத்தால் பயன் ஏதுமில்லை! ஆகவே, ரஜினி எனும் பிம்பத்தை நாம் வெகு எளிதாகக் கலைத்துவிடலாம்! அந்தப் பிம்பம் பொருட்டு அதிகமும் கவலையுற வேண்டியதில்லை! நாம் கவலையுறுவதெல்லாம், ரஜினி ரசிகர்கள் குறித்தே!






குட்டி ரேவதி
நன்றி: இந்தியா டுடே

சனி, 24 செப்டம்பர், 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே!!!

நான் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் சில குழந்தைகள் குறைவான கற்கும் திறனும்,மந்த புத்தியுமாக இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இன்னொரு பெண்குழந்தையோ வளர்ச்சியின்றி, ஒரு வயது குழந்தைக்குரிய உயரத்தில் இருக்கிறாள். இதற்கு பெரும்பாலும் காரணகர்த்தாக்கள் யார் தெரியுமா?....பேரன் பேத்தி எடுத்த பின்னரும், மனைவி இறந்து போனதால் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று??????? கிராமத்துச் சூழலில், வறுமையில் வாடும் இளம் பெண்களை பணத்து ஆசை காட்டி திருமணம் செய்து, பிள்ளைகளை வேறு பெற்றுக் கொள்கிறார்கள் இந்தக் கயவர்கள்!...இந்தக் கிழட்டு கதாநாயகர்கள் தங்கள் ஆண்மையின் பலத்தை நிரூபிக்க, பாவம் மூளை வளர்ச்சியின்றியும்,உடல் வளர்ச்சியின்றியும்,மந்த புத்தியுமாக பிறக்கும் அந்தக் குழந்தைகள் பலியாக வேண்டுமா என்ன???......

அதிலும் இன்னொரு கொடுமை என்னவென்றால், சம்பந்தப்பட்ட அந்த இளம் மனைவிக்கு இம்மாதிரி குறையுடன் பிறக்கும் இந்தக் குழந்தைகள் தான் வாரிசு!..அனால் அந்த கிழவருக்கோ, காலாகாலத்தில் திருமணம் நடந்து நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் இருப்பர். என்ன ஒரு கொடுமை பாருங்கள்?.....ஒரு பக்கம் வயதுக்கேற்ற தேவைகள் எவ்வளவோ இருக்கும். இன்னொரு பக்கம் ஊனமாகப் பிறந்த குழந்தையினால் மன உளைச்சல் வேறு பாடாய்ப் படுத்தும். இந்தக் கொடுமையை சமுதாயம் அங்கீகரித்து கொள்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் கடுமையான தண்டனை கிடையாதா?....ம்ம்ம். நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!.

புதன், 31 ஆகஸ்ட், 2011

எனது கிறுக்கல் கவிதைகள்.....



பயணம்!
தொடரும் பயணங்களில் மீண்டும் மீண்டும் சந்திக்க நேருகிறது
சில அபூர்வ தருணங்களை..
நதிப் பாலங்களின் மீது ரயில் நின்று விடும்
தூரத்தில்
நீண்டு விரியும் நதியின் ஆழம்,
...முன்னேறிச் செல்லும் பாதையில்
வேகமாக கடக்கும் மரங்கள்,
தாயின் தாலாட்டுக்குப் பிறகு
ரயிலின் தாலாட்டில் சுகமாய்
குழந்தையின் உறக்கம்,
தூரத்தில் விரியும் வயல்வெளியில்
நடனமாடும் மயிலின் தொகை,
இயல்பிலிருந்து விடுபடு இதைபோல
ஆச்சரியங்களை அடிக்கடி சுமந்தபடி.-சியாமளா




பெரு வாழ்வு!!!!


மழைச்சாரலின் அந்திநேரம்

மல்லிகை வாசம்

மயங்கிய மனது

எங்கோ மிதந்து வரும்

மனதுக்கு பிடித்த பாடல்

காதலின் கைப்பிடித்து

விடிய விடிய

கதைகள் பல பேசினேன்.....

சட்டென்று கலைந்தது கனவு.

விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்

சமையலறைக்குள் தாவியது மனசு

மறுபடியும் மறுபடியும்

வந்துகொண்டுதான் இருக்கின்றன

அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.

அவளுக்கென்ன நன்றாகத்தான்

சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்

ஊர் சொன்னது! -சியாமளா

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பெரு வாழ்வு!!!!

 

மழைச்சாரலின் அந்திநேரம்

மல்லிகை வாசம்

மயங்கிய மனது

எங்கோ மிதந்து வரும்

மனதுக்கு பிடித்த பாடல்

காதலின் கைப்பிடித்து

விடிய விடிய

கதைகள் பல பேசினேன்.....

சட்டென்று கலைந்தது கனவு.

விடிந்து விட்டது நினைவுக்கு வந்ததும்

சமையலறைக்குள் தாவியது மனசு

மறுபடியும் மறுபடியும்

வந்துகொண்டுதான் இருக்கின்றன

அதே கனவுகளைச் சுமந்த இரவுகள்.

அவளுக்கென்ன நன்றாகத்தான்

சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்

ஊர் சொன்னது! -சியாமளா

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம்- ரதி.

பெண், எனது பெயர், இனம் மற்றும் இன்ன பிற, இத்யாதிகள் எல்லாமே இது தான். எனக்கு பல கோடி முகங்கள். பல கோடிப் பெயர்கள். எனக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகிறார்கள். இது மகிழ்ச்சியல்ல. வேதனையே. என் உரிமைகள் பிறப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் பிறகேன் எனக்கென்றோர் தினம். இயற்கையின் படைப்பில், விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஆண், பெண் எனப்பிறப்பது ஒன்றும் தனியொருவரின் சாதனையல்ல. பெண்ணாய் பிறப்பது வரமா, சாபமா என்ற விதண்டாவாதங்களை விலக்கிவிட்டு நானும் சாதாரண மனிதப் பிறவியாகவே பார்க்கப்படவேண்டும்.
பெண் என்றால் சிசுக்கொலை, உடன்கட்டையேறுதல், கற்பழிப்பு, துன்புறுத்தல், வன்முறை என்ற வடிவங்களில்தான் நான் நூற்றாண்டுகளாய் எத்தனையோ நாட்டில், எத்தனையோ ஊரில் துன்புறுத்தப்பட்டேன். இன்றும் துன்புறுத்தப்படுகிறேன். என் உடம்பை துன்புறுத்துபவர்கள் உள்ளத்தை சும்மா விடுவார்களா. அதையெல்லாம் பட்டியலிட்டு மாளாது. என் உள்ளச்சுமைகள் என்னை அழுத்தினாலும் இதழ்களில் புன்னகையை கடை விரிக்கத்தவறுவதில்லை. என் வலிகளை எனக்குள் புதைத்து நான் எப்போதுமே புன்னகைக்க வேண்டும். அப்படித்தான் எனக்கு எழுதப்படாத சமூக விதிகள், விழுமியங்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றன.
என் அறிவைப்பற்றியும் நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். என் கற்பூர மூளை சட்டென்று பற்றிக்கொண்டால் பெண் என்று ஓரங்கட்டப்படுவேன். அதையே காற்றில் கரைய விட்டால் எல்லா சமூக சம்பிரதாயங்களிலும் உள்வாங்கப்படுவேன். என்ன! எனக்குத்தான் வாயை, அறிவை மூடிவைக்க சிரமப்படவேண்டியுள்ளது. மனிதன் மிருகங்கள் போல் வேட்டையாடி திரிந்த காலங்களில் நான் ஆணுக்கு அடிமை சேவகம் செய்ததில்லை. என் உடற்கூறா அல்லது சமூக கலாச்சார ஏற்பாடுகள், அபத்தங்கள் இவற்றில் எது என் உரிமைகளை மட்டும் காலவெள்ளத்தில் மூழ்கடித்து என் சடலத்தை மட்டும் கரையேற்றியிருக்கிறது?
என் தடைகளையெல்லாம் தாண்டி நூற்றாண்டு காலமாய் மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.
ஆணின் உயிர்க்காற்று நான். அவனுக்காய் நான் மகளாய், தங்கையாய், அக்காவாய், தாயாய், தாரமாய், மற்றும் எல்லா “ய்” களாகவும் ஆண்டாண்டுகாலம் உடனிருக்கிறேன். வறுமைக்கோடு என் வாழ்வில் ஓவியங்களை வரையவில்லை என்றால் என் வாழ்விலும் பெரும்பாலும் சந்தோசங்கள் நிரம்பியிருக்கும். இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியானது “Female Circumcision”. அற்ப விடயத்திற்காய் என் பெண்ணுறுப்பை அறுத்துப்போடும் இழிசெயல். ஏனென்று நான் கேள்வி கேட்டால், இது என்னை, அதாவது பெண்ணை திருமணத்திற்கு தயார்ப்படுத்தலாமாம்.
இது எனக்கிழைக்கப்படும் அநியாயம் என உலக சுகாதார ஸ்தாபனமே கண்டித்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இன்றும் தொடர்கிறது. இது என் அறியா வயதில் உடலுக்கு இழைக்கப்படும் கொடுமை. இந்த கண்டங்களை தாண்டி நான் குமரியானதும் எனக்கு பிரச்சனை என் பருவமும் ஆண்களும்தான். என் அறிவை பருவம் விழுங்கும் ஆபத்து இருக்கிறது என்று அறியாவிட்டால் என் வாழ்வில் அத்தனையும் பாழாய்ப்போகும். அதை சிலர் அக்கறையோடு அறிவுரையாய் சொன்னால் அதை ஓர் ஏளனப் பார்வையில் என் வயது அலட்சியம் செய்யும்.
என் பருவமும் ஹோர்மோன்களும் காந்தமாய் ஆண் என்ற இரும்பை கவர்ந்து அவனோடு காதலாகி, கல்யாணமாகி, கடுப்பாகி அங்கேயும் நான் தான், பெண், அதிகம் காயப்படுகிறேன். ஆனாலும், விதிவிலக்காய் பெண் என்ற காந்தத்தை இரும்புகள் கவர்ந்திழுப்பதும் அதில் காந்தம் தன்னிலை மறப்பதும் பின்னர் கண்ணீர் வடிப்பதும் பெண்ணுக்கே உரிய பேதமைகள். நான் எழுதப்பட்ட சட்ட விதிகளால் பாதுகாக்கப்படுவதை விட எழுதப்படாத சமூகவிதிகளால் அதிகம் ஆளப்படுகிறேன், அவஸ்தைப்படுகிறேன். காதலாகட்டும், கல்யாணமாகட்டும் பெண் எப்போதுமே வீட்டுக்கு கட்டுப்படவேண்டும் என்பது ஓர் சமூகவிதி.
காதல், கல்யாணத்தில் நான் படும் காயங்கள், வடுக்கள் என் வீட்டுச் சுவர்களைத் தாண்ட அனுமதிப்பதில்லை. அதனால் என்னோடு என் உணர்வுகளுக்கு என் மனதிலேயே சிதை மூட்டிகொள்ளப் பழகிக்கொண்டேன். காலங்காலமாய் நான் திருமணத்திற்கே தயாற்படுத்தப்படுகிறேன். திருமணம் அபத்தமா? எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், திருமணம் என் அடிப்படை உரிமைகளை கபளீகரம் செய்தால் அதை அபத்தம் என்று கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
உலக இயங்குவிதிகள், சமூக ஒழுங்குகள் மாற நானும் கல்வியில், தொழிலில், விளையாட்டில் என்று ஒரு சில படிகளைத் தாண்டி முன்னேற முயன்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு தடையையும் தாண்டி எனக்காய் விதிக்கப்பட்டிருக்கும் மகள், மனைவி, தாய் என்ற கடமைகளோடு என் வீட்டின் பொருளாதார சுமையையும் கட்டியழுதுகொண்டு பொதிமாடாய் அல்லும் பகலும் அல்லாடுகிறேன். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு சிறந்தவழி. அந்த கல்வியில் கரை சேர்வதற்குள் காதல், கல்யாணம் என்று கதவை தட்டுகிறது. பெண்ணுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த உணர்வுகள்தான் பின்னர் அதளபாதாளத்திலும் அவளை விழவைக்கின்றன.
விழுந்த பின் எழமுடியாமல் தவிக்கும்போது ஒன்று காலம் கடந்துவிட்டிருக்கும். அல்லது ஓர் ஆணின் அன்புக்காய், அரவணைப்புக்காய் மனம் தேவையற்ற விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிப்போய் இருக்கும். அந்த பலவீனம் ஆணுக்கு பலமாகிப்போகிறது. பெண்ணே! காதலியாய், மனைவியாய் காதலி, காதலிக்கப்படு அது உன் பிறப்புரிமை. அந்தக் காதலுக்காய் அன்புக்காய் எத்தனை விட்டுக்கொடுப்புகள்! பெண்ணுக்கு பூட்டப்பட்ட விலங்குகள் கண்ணுக்கு தெரிவதில்லை. அது தெரிவதில்லை என்பதாலேயே என் அடிமைத்தனத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறேன்.
வேலைத்தளத்திலும் ஓடாய்த்தேய்ந்து பின்னர் பெண் தான் வீட்டு வேலையும் கட்டி அழவேண்டும் என்ற Stereo Type சிந்தனைகள் கால காலமாய் சமூகத்தில் புண்ணாய் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நான் செய்யாவிட்டால் அது ஓர் குற்ற உணர்வாக எனக்குள் உருவெடுக்கும்படி என்னை என் வீடும், சமூகமும் என்னை பழக்கியிருக்கிறது. “ஏண்டி, உன் புருஷன் கசங்கின சட்டைய போட்டிட்டிருக்கானே, அதை அயர்ன் செய்து குடுக்க மாட்டியா” என்று யாராவது ஒருவர் என் பவித்திரமான பதிவிரதத்தை பழிசொல்லக்கூடாதல்லவா. ஏன் ஓர் ஆண் தன் அன்றாட, சொந்த வேலைகளை கவனிக்க ஓர் பெண்ணின் அடிமை சேவகம் தேவைப்படுகிறது?
இதைப்படிப்பவர்கள் யாராவது இல்லை நான் என் மனைவியை அடிமைச்சேவகம் செய்ய ஏவுவதில்லை, என் மனைவிக்கு நான் வீட்டு வேலைகளில் சின்ன, சின்ன உதவிகள் செய்து அவள் புன்னகையை ரசிக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பெண் என்ற உழைக்கும் இயந்திரத்தின் வேலைகளை இப்போதெல்லாம் ஓரளவுக்கு இலத்திரனியல் இயந்திரங்கள் பகிர்ந்துகொள்வதால் சிலர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள்.
வீட்டின் பொருளாதார சுமையை பகிர்ந்துகொள்ள வேலை என்ற பளுவை வேறு சுமந்துகொண்டிருப்பவர்களை அவர்களின் வலிகளை பேசாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஓர் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நான் கணவனையும் குழந்தைகளையும்தான் கவனித்துக்கொண்டிருந்தேன். உலகப்போர்களுக்குப் பின்னால்தான் நான் வேலைதலங்களுக்கும் பணிகளுக்கும் பழக்கப்படுத்தப்பட்டேன் என்று அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எறும்பாய் ஊர்ந்து என்னில் சிலபேர் இப்போது விண்வெளியை, நிலவைத்தொட்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தோசம்.
என் சிந்தனையை அலைக்கழிக்கும் விடயம் என்னவென்றால், இன்னும் மூன்றாம் உலக நாடுகளில் நிலவுக்குக் கீழே என் பெண் இனம் ஒருவேளை உணவுக்காய் கல்லும், மண்ணும், குப்பையும் சுமந்துகொண்டிருக்கிறதே! அந்த உழைக்கும் பெண்களின் தலைவிதியை யார் மாற்றுவார்கள்? ஓரிரு பெண்களை விண்வெளியைத் தொட வைத்துவிட்டு ஒரு கோடிப் பெண்களை அடிமாடாய் வேலைவாங்குவது எந்த விதத்தில் நியாயம்? Malls, Restaurants, House keeping (Cleaning), Factories etc. எங்கெல்லாம் இன்று அடிமாட்டு ஊதியத்திற்கு ஆள் வேண்டுமோ அங்கெல்லாம் என் பெண் இனம் குடும்பத்தை கட்டிக்காக்க குறைந்த பட்ச கூலிக்காய் மாரடித்துக்கொண்டிருக்கிறது. இதே வேலைகளை ஆண்கள் செய்தால் அவர்களுக்கு கூலி கொஞ்சம் அதிகமாக கொடுக்கப்படவேண்டும். அது ஆணின் உழைப்பல்லவா. கணணி, தொழில் நுட்பம் ஆகட்டும் இல்லை வீட்டு வேலையாகட்டும் ஆணின் உழைப்புக்கு எப்போதுமே மதிப்பும் ஊழியமும் மதிப்பாகவே கொடுக்கப்படவேண்டும் என்பது ஓர் பாரபட்சமான அணுகுமுறை.
ஊடகங்கள் என்னை எதற்கும் குறியீடாகவே பார்க்கும் அவலமும் கொஞ்சமல்ல. வியாபாரப் பொருளுக்கும், போதைக்கும் நான்தான் குறியீடு. தாய்மைக்கும் நான்தான் குறியீடு. Car, Motorcycle, Cell Phone, Underwear, Shaving sets & Cream என்று ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களுக்கும் நான்தான் தொலைக்காட்சியில், விளம்பரத்தில் அரையும், குறையுமாய் அழகு காட்ட வேண்டும். எனக்கு ஒரேயொரு விடயம் மட்டும் புரிவதில்லை. பெண் விளம்பரங்களில் அழகு காட்டாவிட்டால் யாருமே எந்தப்பொருளையுமே தொடமாட்டார்களா?
இதெல்லாம் வெறும் Cliche` என்று பலர் வாதாடினாலும் அல்லது ஒதுக்கினாலும் அதை மீண்டும், மீண்டும் செய்துகொண்டிருந்தால் நாங்கள் மீண்டும் அதைப் பேசவேண்டியுள்ளது. அது தவிர, ஓர் பேச்சு வழக்கில் உள்ளது போல், ஆணின் போதைக்கும் பெண்தான் ஊறுகாய். சாமானியனின் போதை, சாமியார்களின் போதை எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள பெண் தான். அவரவர் தகுதிக்கும், தராதரத்திற்கும் ஏற்றாற்போல் பெண் பலியாகிறாள் என்பதற்கு சமூகத்தின் எல்லா நிலைகளிலும், அளவுகளிலும் நிறைந்திருக்கும் அவலங்களே சாட்சி. அதை நான் அதிகம் பேசவேண்டியதில்லை. தாய்மை பற்றி நான் பேசவே வேண்டியதில்லை. அதற்கு எந்தப்பெண்ணும் சன்மானம் கேட்பதில்லை. அது இயற்கை அளித்த வரம். விவாதப்பொருளல்ல.
_______________________________________
இப்போது பொதுவாய் பெண்ணாய் பேசாமல் இந்த பதிவை எழுதியவர் என்கிற ரீதியில் பேசுகிறேன். சமூகத்தில் எல்லா தரங்களிலும் (Level) பெண் உடல், உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நீண்ட நாட்களுக்கு முன் பெண்கள் பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரை படித்ததாய் ஞாபகம். அதில் குறிப்பிட்டிருந்தார்கள் சமூகத்தின் எல்லா தரங்களிலும் பெண்ணுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக. ஆனால், மத்திய, செல்வந்த வர்க்கங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளியே அதிகம் கசிவதில்லை என்று. ஆக, இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்கள் கூட பெண்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்பதைத்தான் அந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது.
இதை இந்த ஆண்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள்? அல்லது எது அவர்களை பெண்ணை ஓர் இரண்டாந்தர குடியைப் போல் பார்க்க வைக்கிறது? என்னைக்கேட்டால் இந்த சமூகமும், அதன் பெண்ணுக்கான கற்பிதங்கள், ஊடங்கங்கள்தான் அவற்றை ஆண்கள் புத்தியில் திணிக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் நாங்களும் மெளனமாய் அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த மகளிர் தினத்திலாவது இந்த சமூக ஏற்பாடுகள், பெண்ணின் மன அழுத்தங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம், சிந்திப்போம், செயற்படுவோம்.
- ரதி.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சந்தோஷமாக இருக்க வேண்டும்!!!!!

 
உண்மையில் நம் எல்லாருக்குள்ளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது.  ஆனால் தங்க நகையைத் தேடி மளிகைக் கடைக்கு போவது போல் நாம் தவறான கதவுகளைத் தட்டி கொண்டு இருக்கிறோம். அதனால் தான் சலிப்பு,வெறுப்பு,கோபம் எல்லாமே!!!  அலிபாபாவின் குகைக்குள் இருக்கும் புதையல்கள் போல சந்தோஷம் நமக்குள் தான் ஒளிந்து இருக்கின்றன.அதற்கான ஏழு சூத்திரங்கள்...
 சந்தோஷத்தை முதலில் கண்டுபிடியுங்கள்...அபோதுதான் அதை அடைய முடியும்!
உங்கள் வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்கள் மகிழ்ச்சி தருகின்றன?அதை ஏன் நாம் அடைய முடியவில்லை என யோசித்தால், அப்போதே அதற்கான விடைகள் தெரிந்து விடும். அவற்றை நீங்களே தேடி அடைய பாருங்கள்!
நம் செயல்களுக்கு நாமே பொறுப்பேற்றுக் கொள்வோம்!
'எல்லாம் உன்னால தான்! ' என்று சாட் சற்றென்று நாம் மற்றவர்களை குறை சொல்வதுண்டு.
அல்லது யாரவது ஏதாவது சொன்னால் அதை முரட்டுத்தனமாக மறுப்பது. நான் பிடிச்ச முயலுக்கு மூனே கால் என்பது. விஷயத்தை வேண்டுமென்றே சிக்கலாகி விடுவது.  இவை மூலம் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்ததா? பதிலுக்கு தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பதன் மூலம் பாசிடிவாக செயல்பட்டு இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என யோசித்து பாருங்கள்.
பாசிடிவாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை!
வாழ்க்கை பற்றிய பயன்களைப் பட்டியலிட்டு அதை எப்படி ஹாண்டில் செய்வது என்று யோசித்தாலே சந்தோஷத்துக்கான சாவி கிடைத்து விடும்.
இடத்துக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்வது!
'வைராக்கியமாக இருக்கிறேன்!' என்று சிலர் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு கூட உறவுகளை வெறுத்து ஒதுக்கி விட்டு இருப்பார்கள்.இது வெறும் பிடிவாதம்.  பிடிவாதங்கள் என்றும் ஜெயிப்பதில்லை.அது காயங்களையும், வெறுப்புகளையும் மட்டுமே ஏற்படுத்தி விடுகின்றன.
கொண்டாடுங்கள்!
பார்க்கும் அழகான விஷயங்களை ரசித்துக் கொண்டாடுங்கள். அது மழையின் சத்தமாக இருந்தாலும் சரி, குழந்தையின் மழலையாக இருந்தாலும் சரி கொண்டாடுங்கள்.
நம் உணர்வுக்கு நாம் உண்மையாக இருப்பது!
ஊரெல்லாம் சொல்கிறார்கள் என்று நம் ஒரு சில விஷயங்களை செய்து கொண்டு இருப்போம். உதாரணமாக வேலை பார்க்கும் பெண்கள் தான் தைரியசாலிகள் என்ற பிம்பம் பொதுவாக காணப்படுகிறது.  அனல் தெரிந்த பெண் ஒருவர் தன குழந்தையை சரியாக வளர்க்க வேண்டும் என்று தன் வேலையை உதறினார். தனக்குள்ளிருக்கும் தன்னை அவர் அடையாளம் கண்டு கொண்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இந்த சூத்திரங்களை நீங்கள் கடைப் பிடித்து பாருங்கள்..உங்களுக்குள் இருக்கும் சந்தோஷப் புதையலை நீங்கள் அடைவது உறுதி!.

சனி, 20 ஆகஸ்ட், 2011

தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல்




இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் – படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் – பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் – பெரும்பான்மை இந்தியா!
இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.
ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய “Turning the pot Tilling the Land” என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.
பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana இதில் ராமன் Object, ராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is Tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the Cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the Cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் – பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனõரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.
ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக்வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.
எனவே தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்... 

சமச்சீர் கல்வி தடை... சாதி உணர்வு காரணமா?...கவின் மலர்

மிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது. ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரம்... இதில் விதிவிலக்கு. சமச்சீர்க் கல்வி குறித்த விவாதங்களும் விவகாரங்களும் தொடர்கின்றன.

 சமச்சீர்க் கல்விப் பாட நூல்களில் ஆட்சேபகரமானவை என்று கூறி, சில பகுதிகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது தமிழக அரசு. தமிழ்ப் பாட நூலில் இலக்கியம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக, இலக்கியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அறிவொளி இயக்கம் மூலம் கிராமங்கள்தோறும் மக்களுக்குக் கல்வி கற்றுத் தந்தவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனிடம் உரையாடியதில் இருந்து...


''தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கல்வி குறித்து  விசாலமான பார்வை இல்லை. ஆனால், முந்தையஆட்சி யின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டும் இதுகுறித்து ஆழ்ந்த அக்கறையும் தெளிவும்கொண்டு இருந்தார். அதன் காரணமாகவே, இந்த அளவுக்காவது சமச்சீர்க் கல்வி வாய்ப்பு சாத்தியமாகி இருக்கிறது. இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கல்வி குறித்த பார்வை என்ன என்பதை, சமச்சீர்க் கல்வி நூல்களை ஆய்வு செய்ய அவர் உருவாக்கி உள்ள குழுவை வைத்தே அளவிட முடியும். சமச்சீர்க் கல்வி நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் அப்துல் ரகுமானின் மிகப் பிரபல வரிகள் இவை -


'வேலிக்கு வெளியே
தலை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?’


விடுதலை உணர்வின் வீரியம் உரைக்கும் அற்புத வரிகள் இவை. இவற்றை ஸ்டிக்கர்கொண்டு மறைக்கிறார்கள். அவர் தி.மு.க. சார்பானவர் என்று கருதி, அப்படிச் செய்து இருக்கிறார்கள். பாவேந்தர் பாரதிதாசனையும் விட்டுவைக்கவில்லை இந்த அரசு. அவரு டைய ஆத்திசூடியையும் மறைத்தாயிற்று. அவர் திராவிட இயக்க முன்னோடிக் கவிஞர். அ.தி.மு.க. என்கிற ஆளும் கட்சியின் பெயரில் 'திராவிட’ என்கிற சொல் இருக் கிறது. ஆனால், கட்சியின் பெயர் அளவில் மட்டுமே திராவிடம் இருக்கிறது. புரட்சிக் கவிஞருக்கே இந்தக் கதியா?

தைப் பொங்கல் குறித்தான பாடத்தையும் நீக்கி இருக்கிறது அரசு. தைத் திருநாளை தி.மு.க. அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்ததால் இந்த நீக்கம். தமிழர்கள், காலங்காலமாகக் கொண்டாடி வரும் பண் பாட்டை, இப்படி ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துவிட முடியுமா என்ன?
சமச்சீர்க் கல்வி விவகாரத்தை, ஓர் ஆரிய - திராவிடக் கருத்தியல் போராட்டமாகவே நாங்கள்  பார்க்கிறோம். இது ஏதோ தி.மு.க.கொண்டு வந்தது, அதை அ.தி.மு.க. நிறுத்திவைக்கிறது என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஏன் சில பகுதி களை ஒட்டி மறைக்கிறோம் என்று மக்களுக்கு அரசு இன்னமும் விளக்கம் சொல்லவில்லை.
கருத்தியல் சூழலில் இந்த மாதிரியான ஒரு நிலை இருப்பது ஆபத்தானது. ஏகலைவன்காலத் தில் இருந்தே ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப் பட்டு வந்த கல்வி, இப்போதும் சமூகத்தின் படி நிலையில் கீழே இருப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணமே, அரசு செய்யும் இந்தக் குழப்படிகளுக்குக் காரணம். உண்மையான சமச்சீர்க் கல்வியின் முதல் படிதான் இந்த நூல்கள். அப்படியும் வெறுமனே 10 சதவிகித சமச்சீர்க் கல்வி மட்டுமே பாட நூல்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு இருந்தது. ஆனால், இந்த 10 சதவிகிதத் தையே அனுமதிக்கவில்லை என்றால், 'தரமான கல்வியை அளிப்போம்’ என்று சொல்லிய இந்த அரசின் மேல் நம்பிக்கை இழக்க வேண்டி இருக்கிறது. இங்கு நிகழ்வது ஒரு தத்துவப் போராட்டமே!’’

சென்ற ஆண்டு சமச்சீர்க் கல்விப் புத்தகங்கள் வெளியானபோது, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன், பெரியார் தொடர்பான பாடம் அதில் இடம் பெற்றதற்குக் கண்டனம் தெரிவித் ததை நாம் மறந்துவிட முடியாது. வேறு எவற்றை எல்லாம் ஸ்டிக்கர்கொண்டு மறைத்து இருக்கிறது அரசு?

’’'சிரிப்பதா... அழுவதா?’ என்கிற தலைப்பில் ஒரு தாத்தா சிரிப்பதுபோன்ற படம் இருக்கிறது. அதை மறைத்து இருக்கிறது அரசு. அதைப் பார்த்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதிபோல்கூட இல்லை. தாத்தாவே பாடப் புத்தகத்தில் இருக்கக் கூடாதா என்ன?'' என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர்க் கல்விப் பாட நூல்கள் தரமற்றவையாக இருப்பதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. 'சமூக நீதி என்கிற பெயரில் தரமற்ற பாடத் திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர்’ என்றும் கூறி இருக்கிறது.
உண்மையில் அரசு சொல்வதுபோல, சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தரமற்றவையா?

''இல்லவே இல்லை! தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (NCERT) புத்த கங்களைவிட தரமானவை!'' என்கிறது தமிழ்நாடு அறிவி யல் இயக்கம். இந்த இயக்கம்  அண்மையில் ஒரு கள ஆய்வு மேற்கொண்டு, சமச்சீர்க் கல்விப் புத்தகங்களின் தரம் குறித்து அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். ''மெட்ரிகுலேஷன் பள்ளி நூல்களுக்கும், NCERT பாட நூல்களுக்கும் சற்றும் தரத்தில் குறையாமல் இருப்பதோடு, சில பாடங்களில் குறிப்பாக, 10-ம் வகுப்பு கணித, அறிவியல் பாடங்கள் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைவிட மேம்பட்டே இருக்கின்றன. மாணவர்களை மையப் படுத்தி பாட நூல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மதிப்பீட்டு முறைகள் நவீன அறிவியல் அணுகுமுறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. கேள்விகளும்கூட சிந்தித்து விடை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. பாட நூல் வடிவமைப்பு மேம்பட்டு உள்ளது!'' என்கிறது அந்த அறிக்கை.

அண்மையில், இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அறிவியல் இயக்க நிர்வாகிகள், ''ஒன்றாம், ஆறாம் வகுப்புப் பாட நூல்கள் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இதன் தரம் குறித்துக் குறை கூறவில்லை. ஓர் ஆண்டு கழித்து இப்போது குறை கூறுவது ஏன்? நிறுத்திவைத்துள்ள பாடப் புத்தகங் களை மக்களின் கண்களுக்குக் காட்டாமலேயே, அவற்றைத் தரம் இல்லை என்று அரசு சொல்கிறது. அவை வெளியிடப்பட்ட பின் அரசு தடை செய்து இருந்தால், மக்களிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பை அரசு சந்தித்து இருக்கும்!'' என்கிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ''மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சமச்சீர்க் கல்வியை எதிர்ப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அவர்களுக்கு வியாபார நோக்கம் இருக்கிறது. ஆனால், அரசு எதிர்ப்பதன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டும்!'' என்று சிந்தனையைத் தூண்டுகிறார்.

''நம் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட வரலாறு தவறான வரலாறு. சமச்சீர்க் கல்வி அவற்றை எல்லாம் சரிசெய்து, நிஜமான வரலாற்றை மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்துத்வா சக்திகள்தான் சமச்சீர்க் கல்வியை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சோ என்று பலரும் எதிர்க் கின்றனர். கிராமப்புறங்களில் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியரும்கூட இந்த சமச்சீர்க் கல்வி புத்தகம் எழுதியதில் பங்கேற்று இருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரிய விஷயம். வெறுமனே நகரங்களில் படிக்கும் மாணவர் களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உருவாக்கியவை அல்ல இந்தப் புத்தகங்கள். பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எப்போதுமே 10-ம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம்  வகுப்பிலேயே நடத்தத் தொடங்கிவிடும். அப்படி கோடை விடுமுறையிலேயே இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி நூல்களைப் பதிவிறக்கம் செய்து நடத்தத் தொடங்கிவிட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களே, நூல்கள் மிகத் தரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்'' என்கிறார்.

பூணூலா-கோவணக் கயிறா?

 


நாளை - சனிக்கிழமை ஆவணி அவிட் டமாம் - பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு நாங்கள் பிராமணர்கள் - பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்று அகம் பாவத்துடன் மார்தட்டும் நாள்!
பூணூல் அணியாத மக்களைப் பார்த்து நீங்கள் சூத்திரர்கள் - அதாவது எங்களுக்கு (பிராமணர்களுக்கு) வைப்பாட்டி மக்கள் என்று மறைமுகமாக இழிவு படுத்தும் நாள் - கேலி செய்யும் நாள்!
பூணூலைப் பார்ப் பனர்கள் மட்டும்தானா அணிகிறார்கள்? செட்டியார்களும், ஆசாரியார்களும் அணிகிறார்களே என்று சிலர் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் சமாதானம் சொல்லித் தப்பிக்கப் பார்க்கலாம்.
உண்மை நிலை என்ன? சாத்திர ரீதியாக அவர்களுக்குப் பூணூல் தரிக்கும் உரிமை உண்டா?
இல்லை, இல்லை, இல்லவே இல்லை! இதோ மனுதர்ம சாஸ்திரம் கூறு கிறது.
பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும் வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும், மேடு பள்ளம் இல்லாமல் மெல்லியதாய் பின்னி மூன்று வடமாக நாண் கட்ட வேண்டியது.
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 2; சுலோகம் 42)
- இதில் எந்த இடத்திலாவது சூத்திரர்களுக்குப் பூணூல் தரிப்பது குறித்துக் கூறப்பட்டுள்ளதா?
தங்களை விசுவ பிராமணாள் என்று சொல்லிக் கொள்ளும் சூத்திரத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!
காஸ்மா பாலிட்டன் பார்ப்பனர்களாக, லவுகிக பார்ப்பான்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் சோ உள்பட பூணூல் தரிப்பதில் கவனமாக இருக் கிறார்களே. வெளியே கோட்டு - சூட்டு - உள்ளே பூணூலா?
முதலில் ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பூணூலைத் தரிக்க வேண்டிய இடம் எது?
முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும், துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக்கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.
குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்.
முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது என்கிறார் இந்து மதத்தை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்த விவேகானந்தர். (நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)
ஆக, பூணூல் என்பது கோவணம் கட்டிக் கொள்வதற்காக இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டியதை இப்பொழுது வேறிடத்திற்கு எப்படி மாற்றிக் கொண் டார்கள்? (இது சாஸ்திர விரோதம் இல்லையோ!)
சாஸ்திரப்படி முஞ்சா என்னும் புல்லினால் தானே அரைஞாண் கயிறாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.
இதைப்பற்றி எந்தப் பார்ப்பன சாஸ்திரி எழுதுகிறார்? எந்த சங்கராச்சாரி கருத்துக் கூறுகிறார்?
மூன்றரைக் கிலோ எடையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கே மாஜி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பூணூல் மாட்டி, கடவுளையே தம் ஜாதிக் கூட்டணியின் கீழ் கொண்டு வந்த கில்லாடி ஆயிற்றே!
கஞ்சா அடிக்கும் பார்ப்பானிலிருந்து, கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களிடம் காம வேட்டையாடும். பார்ப்பான் வரை நாளை பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே உளம், சொல், செயல்களை மும்மலங்களை இவர்கள் எல்லாம் அடக்கித்தான், பூணூலைத் தரித்துக் கொள்கிறார்கள் என்பதை சத்தியமாக நம்பித் தொலைப்பார்களாக!- அப்புறம் பூணூலுக்குத் தத்துவம் வெண்டைக்காய், கத்திரிக்காய் விளக்கெண்ணெய்த் தத்துவமாம்!
ஹி... ஹி... வாயாலா சிரிக்க முடியும்?
---------------------”விடுதலை” 12-8-2011

வெள்ளி, 29 ஜூலை, 2011

பெண் ஏன் அடிமையானாள்?--பெரியார்

இன்றைய பெண்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள், நல்ல வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள், சமூக அந்தஸ்து என்று ஓரளவுக்கு மேன்மையாகவே இருக்கிறது அவர்கள் வாழ்க்கை தரம். ஆனால் இந்த வளம் எல்லாம் ஆகாயத்திலிருந்து தானாய் வந்து குதித்துவிடவில்லை. எத்தனையோ மனிதர்களின் தொடர் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாய் தான் இன்றைய பெண்கள் கொஞசமேனும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது.
இப்படி பெண்களுக்காக போராடியவர்களில் பல பேர் பெண்கள், இவர்கள் தங்களுக்காக தாங்களே குரல் கொடுத்துக்கொண்டவர்கள். ஆனால் தனக்காக என்று இல்லாமல், தான் ஒரு ஆணாக இருந்தபோதும் மிகதீவிரமாக பெண்களின் உரிமைக்காக் போராடிய ஒருவர் இருக்கிறார். அவர் தான் திரு ராமசாமி.
ஆனால் ராமசாமி என்றால் யார் என்று இன்று யாருக்கும் தெரிவதில்லை....சாதாரண மனிதர்களை தான் இயற்பெயரால் அழைப்போம். செயற்க்கரிய செய்த பெரும் மனிதர்களை பிரத்தியேக சிறப்பு பெயரால் தானே அழப்போம். இப்படி சிறப்பு பெயர் பயன்படுத்தியே பழகிவிட்டால் காலப்போக்கில் அன்னாரின் இயற்பெயரே மறந்துபோய், சிறப்புபெயரே நிரந்திரமாகி விடுகிறது. திருவாளர் ராமசாமியும் அப்படிப்பட்ட மஹான் தான். இயற்பெயரே மறந்துபோகும் அளவிற்கு பிரசித்தமான அவரது சிறப்பு பெயர் தான் தந்தை பெரியார்.
யோசித்து பார்த்தால், புத்தர், கிரிஸ்து, நபி, மஹாத்மா என்ற வரிசையில் தனக்கென்று ஒரு நிரந்தர சிறப்பு பெயர் பெற்றவர் பட்டியலில் தந்தை பெரியாரும் ஒருவர். மற்ற நால்வரை விட பெரியார் வித்தியாசமானவர், அவர்கள் எல்லாம் கடவுளின் பெயரால் பணியாற்றியவர்கள், பெரியாரோ கடவுளே இல்லை என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்த்தற்காக பிரசித்திபெற்றவர்.
ஆனால், இந்த பெரியார் என்ற மாமனிதனின் பாடல் பெறாத இன்னொரு முகம் ஒன்று உண்டு. இவர் தான் இந்தியாவின் முதலும், மிக மும்முரமுமான பெண்ணியவாதி.
இன்று ஆணுக்கு பெண் சம்ம் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சமூக கருத்து. இன்றைய பெண் ஆணுக்கு அடிமை இல்லை, அவளுக்குஆணை போலவே எல்லா சுத்ந்திரமும் உண்டு தான், இந்த பெண் விடுத்லை எல்லாம் சென்ற நூற்றாண்டில் பெரியார் முன் நட்த்திய பெரும் போராட்ட்த்தின் நேரடி விளைவு தான்.
கடந்த காலத்தின் கேவலங்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்....அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்வதற்கு முன்பே பாலிய விவாகம் செய்ய பட்டுவிடுவார்கள். இந்த குட்டி மாட்டுப்பெண்ணின் குட்டிக்கணவன், பாம்பு கடித்தோ, காலரா தாக்கியோ, வேறு எப்படியோ அல்பாஅயிசில் மாண்டுபோனான் என்றால், இந்த குட்டி விதவைக்கு எல்லா சம்பிரதாயங்களையும் செய்வித்து, அவளை அமங்களி ஆக்கி முடிந்தால் உடன் கட்டை ஏற்றி, கணவனின் சிதையில் தள்ளிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால், அந்த குட்டிப்பெண் தன் மித ஜீவனத்தை முழு பிரம்மச்சரியத்தில் கழித்திட வேண்டியது தான். இந்த குட்டி பெண்ணுக்கு மறு வாழ்வு, அடுத்த திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்களின் உரிமை என்ற ஒன்றே அபச்சாரமான சொல்லாகத்தான் கருதப்பட்ட்து.
அமங்களியான் பெணின் கதி தான் இவ்வள்வு மோசம் என்று பார்த்தால், சுமங்களியாக இருந்த பெண்ளின் நிலையும் மட்டமாகவே இருந்த்து. அந்த காலத்து பெண்களுக்கு எத்தனையோ தடைகள் இருந்தன. அவர்கள் தனியே வெளியே செல்லக்கூடாது, கல்விகற்க்கூடாது, வேலைக்கு போக முடியாது, சுயமாய் சம்பாதிக்க முடியாது, சொத்துரிமை கிடையாது, சுயசம்பாதியத்திற்கு வழி இல்லை, சுயமாய் வாழ்க்கைதுணையை தெர்ந்தெடுக்கும் உரிமையும் கிடையாது. ஆக அவளுக்கு என்று எந்த சுதந்திரமும் கிடையாது. அவள் ஒரு தனி பிரஜையாகவே கருதப்படவில்லை. அவளின் அடையாளம் அப்பா, அண்ணன், கணவன், மகன், என்று ஒரு ஆணின் அடையாளதோடே எப்போதும் பிணைக்கப்பட்டிருந்த்து...காரண்ம், பெண்கள் எல்லாம் பலவீனமானவர்கள், அதனால் அவர்களுக்கு ஒரு ஆணின் பாதுகாப்பு எப்போதுமே அவசியம் என்கிற நம்பிக்கை இருந்து வந்த்து.
அந்த காலத்து ஆண்களும் பெண்களை பற்றி பெரிதும் யோசிக்கவே இல்லை. உண்மையை சொல்லப்போனால், பெண்கள் இப்படி இழி நிலையில் இருப்பது தான் நம் கலாச்சார பாரம்பரியம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.
பாலியவிவாகம் தான் சரி, அப்போது தான் பெணின் கற்பு 100% தூய்மையாய் இருக்கும் என்று பாலகங்காதர திலகரை போன்ற தேசதலைவர்களும் நினைத்தார்கள்.
ஆனால் பெரியார் ரொம்பவே வித்தியமான மனிதர், மதமெனும் மாயவலையில் மாட்டிக்கொள்ளாத சுயசிந்தனையாளர் அவர். புதிதாய் யோசிக்க தெரிந்த புரட்சியாளர் என்பதனால், ஜாதி, மதம், நிறம், பாலினம், போன்ற மாயைகளை எல்லாம் தாண்டி முதிர்ந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட ஞானி அவர். என்னதான் வைணவ சடங்குகள் வழிந்த குடும்பத்தை சேர்ந்த்தவராய் இருந்தாலும், வாய் கிழிய சர்வம் பிரம்ம மயம் என்று அத்வைதத்த்துவம் பேசிவிட்டு, அதே வாயால் ஜாதியின் பெயரால் பாரபட்சம் பேசும் பட்சோந்தித்தனத்தை சிறு வயதிலேயே சகித்துக்கொள்ள முடியாதவர் பெரியார்.
ஒரு சராசரி மனிதன் ஆகாயத்தில் பறக்கும் கலனை கற்ப்பனை கூட செய்யமுடியாத காலத்திலேயே ஹெலிகாப்டரை கண்டுபிடித்த லியோனார்டோ ட வின்சியை போல, பெரியாரும், தம் காலத்தை மிஞ்சும் யோசிக்கும் தீர்க்கத்சிந்தனையாளராக இருதார். ஒரு சமூகவிஞ்ஞானியாய், தம் சம்காலத்தவர் சிந்தித்துக்கூட பார்க்க் முடியாத பல புதுமையான வாழ்க்கை முறைகளை முன்வைத்தார். பெண் இயற்கையிலேயே ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவள் தான் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே, பெண் எல்லா வித்த்திலும் ஆணுக்கு சரி நிகர் சமானம் என்று முதல் முதலில் பெண்ணியம் பேசியவ்ரே தந்தை பெரியார் தான். இந்த மகளிர் சமத்துவத்திற்காக் பல நூதன போராடங்களை மேற்கொண்டு, சமுக அமைப்புகளை எதிர்த்து தாக்கினார்.
அவர் காலத்தில் பெண் என்றால், அவள் உடல், அழகு, பிள்ளை பெறும் தன்மை, பணிவு, சமையல் திறன், கற்பு, ஆகியவையே போற்றுதலுக்கு உகந்தவை என கருதப்பட்டன. பெரியார் இந்த பட்டியலில் இருந்த எல்லாவற்றையும் சாடினார்.
ஆணுக்கு பெண் சம்ம் என்ற பின் பெண் மட்டும் தன் உடலை அழகுப்படுத்தி காட்டி ஆணின் அங்கீகாரத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லையே. எப்படி ஆண்கள் ஒரு காலத்தில் தாங்க்ள் அணிந்திருந்த கடுக்கன், குண்டலம், ஆகிய்வற்றை கழற்றிவிட்டு, குடுமிகளை வெட்டிக்கொண்டு, திலகம் அணிவதை நிறுத்திக்கொண்டு, இதற்காக், செலவிட்ட காலத்தை உருப்படியாக உபயோகிக்கிறார்களோ, அது போலவே பெண்களும் ஒப்பனைக்காக் செலவிடும் நேரத்தை கொஞசம் பிரயோஜனமாக பயன்படுத்தினால் மேல்; உடை, ஒப்பனை, ஜடை, அலங்காரம் போன்ற வெட்டி வேளைகளில் செலவிடும் நேரத்தை தங்கள் அறிவை மேம்படுத்த பயன்படுத்தினால் தான் பெண்கள் முன்னேற முடியும் என்றார் பெரியார். அதனால், ஆண்கள் அணிகளை துறந்த்தை போலவே பெண்களும் செய்ய வேண்டும், முழம் முழமாய், புடவையை சுற்றிக்கொண்டு தலைப்பு சரியாக இருக்கிறதா, கொசுவம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிப்பதை விட, பெண்கள் எல்லாம், ஆண்களை போல, மேலய நாட்டுப்பெண்களை போல, பேண்ட். சட்டை அணிந்துகொண்டு, முடியை வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டு, பொட்டு வைக்கும் வெத்து வழக்கத்தை விடுத்து நிம்மதியாக இருக்கலாமே என்று ஐடியா சொன்னார் பெரியார்.
பெரியார் பல வெளி நாடுகளுக்கெல்லாம் போய், அங்குள்ள மனிதர்கள் வாழும் வித்த்தை பரிசீலனை செய்து பார்த்து, எது முன்னேற்றத்திற்கு உகந்த்து என்று சீர்தூக்கிப்பார்த்தவர். வளர்ந்த நாடுகளை சேர்ந்த பெண்கள் குட்டி முடியும், இலகு உடைகளையும் அணிவதனால், சவுகரியமாக உணர்வதை கவனித்த பெரியார், தன் துணைவி நாகம்மையையும் அவ்வாறே உடை அணிய சிபாரிசு செய்தார். 1930களிலேயே! பழையன கழித்து, பிரயோஜனமான புதுமைகளை ஸ்வீகரித்துக்கொள்வதில் ஆர்வமுள்ள முற்போக்கு சிந்தனையுள்ளவர் பெரியார்.
இது போலவே பிள்ளைபேறு பற்றியும், கீழ்படிதலை பற்றியும் பெரியார் மாறுபட்ட கருதுக்களை கொண்டிருந்தார். அவர் பெண்களை வெறும் குட்டிபோடும் யந்திரங்களாக பார்க்கவில்லை, அவர்க்ளை அறிவாளிகளாக பார்க்கவிரும்பினார். அதனால், ஆண்களை போலவே பெண்களூம் நன்றாக படிக்கவேண்டும் என்று ஊக்குவித்தார். இது பற்றி ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற் அவரது புத்தகத்தில், பெண்ணின் அறியாமை தான் அவளை அடிமைபடுத்துகிறது, ஆனால் அறிவு அவளை சுதந்திரப்படுத்தும், அதனால் பெண்களை கல்வி பெற்று, பகுத்தறிவோடு வாழ்வேண்டும் என்றார்.
பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியவள் என்கிற போனதலைமுறை எதிர்பார்ப்பை எல்லாம் ஏளனம் செய்தார் பெரியார். தன் நம்பிக்கை இல்லாத கோழைதான் பெண்ணை அடக்கி தன் வீரத்தை காட்டிக்கொள்ள முயல்வான், மற்றபடி நிஜமான வீர ஆண்மகன், பெண்களிடம் கரிசனத்தோடு தான் நடந்துக்கொள்வான் என்றார்.
பெண்கள் சமயல் அறையிலேயே முடங்கிக்கிடப்பதை பற்றியும் பெரியாரிக்கு எதிர்ப்பு இருந்த்து. பெண்கள் அடுப்பூதிக்கொண்டு, சதா சமயலே கதி என்று இருப்பதினால் தான் அவர்க்ளது அறிவை உபயோகமாக பயன்படுத்த முடியாமல் போகிறது. அப்படி இல்லாமல், உணவுக்காக என்று தனி மையங்கள் அமைத்து, அங்கிருந்தே எல்லோருக்கும் உண்வு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால், சமையல் எனும் செக்கிலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமே என்று யோசனை தந்தார் தந்தை பெரியார்.
தமிழ் பெண்களின் உச்ச்க்கட்ட உண்ர்வான் கற்பை பற்றியும் பெரியார் தெளிவான கருத்துக்களை கொண்டிருந்தார். கற்பு நெறி என்பதெல்லாம், பெண்களை காலாகாலத்திற்கும் ஆணின் அடிமைகளாக்கும் பெரிய சதி. இந்த குறிகிய வட்ட்த்தை விட்டு பெண்கள் வெளியேறி சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்றார் பெரியார். இதற்காக சுயமரியாதை திருமணங்களை தோற்றுவித்தார். சாதாரண திருமணங்களில், பெண் வெறும் ஒரு பொருள் மாதிரி தகப்பனால் கன்னிகாதானம் செய்து தரப்பட்டு, கணவனிடம் ஒப்படைக்கபடுவாள். ஆணுக்கு பெண் சம்ம் என்ற நிலை வந்த பிறகு, பெண்னண தொரந்து ஏன் ஒரு பொருளாகவே நட்த்தவேண்டும்? தனக்கு பிடித்த துணைவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்க வேண்டுமே. அத்தோடு, அவளை தானமாக தருவதெல்லாம், பெண்ணை அவமான்ப்படுத்தும் செயல் என்பதால், ஆணும் பெண்ணும் சரி நிகராய் சம உரிமையுடன் ஒருவரை மற்றவர் இல்வாழ்க்கை துணையாய் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் ஒரு அவுரவமான கண்ணியமான், நவீன திருமணத்தை அறிமுகப்படுத்தினார் பெரியார். இந்த முறையில் ஆணும் பெண்ணும் த்ங்கள் சுய அவுரவத்தை பாதுகாத்துக்கொள்ள முடிந்த்தால், இது சுயமரியாதை திருமணம் என்று பிரபளமானது. ஒன்றும் புரியாத, எப்படியும் பின் பற்றாத வேதங்களை எல்லாம் ஓதிக்கொண்டிருக்காமல், சுயமரியாதை முறையில் சமகாலமொழியில், எல்லோருக்கும் புரியும் விதத்தில் ஒப்பந்தம் செய்துக்கொண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார்கள் பலர். இன்று வரை தமிழ் படங்கள் எல்லாம் தாலி செண்டிமெண்டை பற்றி ஆஹா ஓஹோ என்று பிதற்றிக்கொண்டிருக்க, அன்றே பெரியார், கால் நடைகளுக்கு தான் ஓடிவிடக்கூடாதென்று ஒரு மூக்கனாங்கயிரு கட்டுவார்கள், பெண் என்ன விளங்கா, அவளுக்கு எதற்கு ஒரு கழுத்து கயிரு என்றார். அப்படியே கயிர் கட்டித்தான் ஆகவேண்டும் என்றால், ஆணும் பெணும் சம்ம் ஆகிவிட்ட காரண்த்தினால், பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதை போல, ஆணுக்கும் பெண் தாலி கட்டலாம், அல்லது, இருவருமே, தாலி கட்டும் அபத்த சடங்கை கைவிடலாம், என்றார்.
தாலி இன்றி, வேத மந்திரங்கள் இன்றி, திருமண்ம் செய்தால் அமங்களம் ஆகிவிடுமோ என்று பயந்தவர்கெல்லாம் சீதையையும், தமயந்தியையும், பாஞ்சாலியையும் உதாரணமாய் காட்டினார் பெரியார்.....இந்த பெண்கள் எல்லாம் சாஸ்திர ஸ்ம்பிரதாயப்படி மணம் முடித்தவர்கள் தாம், ஆனால் அதனால் அவர்கள் திருமணம் செழித்துவிடவில்லையே!. இந்த சுயமரியாதை திருமண்ங்கள் சட்ட படி செல்லுபடியாகுமா என்ற சிக்கலும் இருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா தமிழகமுதல் அமைச்சரானதும் முதல் வேளையாக இந்த சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கிவிட்ட்தால், பெரியாரின் இந்த நவீன திருமணம் மிக பிரபலம் ஆனது. அறிவாளிகள் மத்தியில் இந்த திருமணம் அமோக வரவேற்பை பெற ஒரு புது சமுக புரட்சியை ஏற்படுத்தியது.
இத்தகைய சுயமரியாதை திருமணத்திற்கு பிறகும், ஒரு பெண்ணுக்கு தன் கண்வனை பிடிக்கவில்லை என்றால், வெறுமனே கல்லானாலும் கணவன் என்ற வெத்து செண்டிமெண்ட் பார்த்து தன் வாழ்வை வீண்டித்துக்கொள்ளாமல், அந்த விவாகத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்கவேண்டும் என்று பெரிதும் போராடினார் பெரியார். அந்த காலத்தில் பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமையோ, மறுமணம் புரியும் உரிமையோ இல்லை. இதை எதிர்த்து பெரியார் பல காலம் பிரச்ச்சரம் செய்து, அந்த உரிமைகளையும் பெண்களுக்காக பெற்றுக்கொடுத்தார்.
அதுவும் தவிற கணவன், மனைவி என்ற சொற்களை பெரிதும் சாடினார் பெரியார். இருவரும் சரிசம்ம் என்ற பின், பெண்ணை மட்டும் மனையோடு கிடப்பவள் என்று அர்த்தப்படிகிற சொல்லால் அழைபதை அவர் விரும்பவில்லை. அதனால் தம்பதியினர் இருவருக்கும் பொதுவான விழிசொல்லாய், துணைவர், இணைவர் என்ற சம நிலை அர்த்தப்படுகிற பத்ங்களை பயன்படுத்த ஊக்குவித்தார். எதே போல எல்லா துறைகளிலும் மகளிர் அயராது உழைத்தார் பெரியார்..., சம உரிமை, சம வாய்ப்பு, சம கல்வி, சம ஊதியம், சம சொத்த்துரிமை என்ப்வை மட்டும் இன்றி, விபச்சார ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களின் துஷ்பிரயோக ஒழிப்பு என்று பல பல சமுதாய மாறுதல்களை ஏற்படுத்தினார்.
அவரது சிந்தனை தெளியும், தர்கத் திறனும், எல்லோரது கண்களையும் திற்ந்து மனதையும் விசாலமாக்க, படித்தவர்கள், புத்திசாலிகள் மத்த்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் பெரியார். அவரத்து கரித்துக்களை பல மேதாவிகள் பின்பற்ற ஆரம்பிக்க, படி படியாக, அதுவே நாகரீகத்தின் உச்ச்க்கட்ட வெளிபாடானது. பெண்களை கண்ணியமாய் நட்த்துவதே நாகரீமானது.
பெரியாரின் நிழலில் பெண்கள் எல்லாம் புது தெம்பும் தெளிவும் பெற்று, தங்கள் சுயமரியாதையை உணர்ந்துக்கொண்டு விழிப்புற்றார்கள். பெரியாரும் பெண்களை ஊக்குவிக்கும் விதம்மாய், இந்தியாவிலேயே முதல் முறையாய், பெண்களின் மா நாடுகளை கூட்டினார். இப்படி 1936 ஆம் ஆண்டு அவர் கூட்டிய மா நாட்டில் தான், பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தங்களின் முன்னேற்றத்திற்காக் பெரிதும் பாடுப்பட்ட அவருக்குத்து ‘பெரியார்’ என்ற சிறப்பு பெயரைச்சூட்டினர். அன்று முதல் திரு ஈ வே ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாறினார். இதே மனிதர் தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் நிராகரிப்பு என்று பல பல சமூக சீர்திருத்தங்களை செய்திருந்தார்.....ஆனால், மகளிர் நலனுக்காக அவர் ஆற்றிய் சேவை தான், வெறும் ராம்சாமியாக இருந்தவரை தந்தை பெரியார் என்கிற மாம்னிதன் ஆக்கியது.
பெரியாரும் தான் இந்த பெரயருக்கு மிக பொருத்தமானவர் என்பதை நிறுபவித்தார். அவர் தோற்றுவித்த திராவிடர் கழகம் என்கிற சமூக நல அமைப்பை தன் துணைவி திருமதி மணியம்மையின் விட்டுச்சென்றார். அது வரை எந்த தலைவரும் தன் நிறுவனத்தின் பொருப்பை பெண்களிடம் ஒப்படைத்தாக சரித்திரமே இல்லை....ஒரு வேளை பெண்களால் பெரிய வகிக்கமுடியுமோ என்று மற்றவர்கள் சன்தேகப்பட்டார்களோ என்னவோ? ஆனால் பெரியாருக்கு பெண்ணின் திறன் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அவர் நம்பிக்கையை காப்பாற்றி, பெரியாரின் பெண்ணிய கருத்துக்களை அமல்படுத்தும் விதமாகவே, இந்தியாவின் முதல் முற்றிலும் பெண்களுக்கான பொறியியல் கல்லூரி தஞ்சை அருகே உள்ள வள்ளம் எனும் ஊரில் கிட்ட்தட்ட இருவது ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட்து. இந்த கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கெல்லாம் சீருடையே பேண்ட், சட்டை தான். யோசித்து பாருங்களேன், இன்று வரை தமிழ் கலாசாரத்தில் பெயரால், பெண்கள் கால்லூரிகளுக்கு பேண்ட் சட்டை போட்டுக்கொண்டே வரக்கூடாது என்று மெத்தப்படித்த பல்கலைகழக துணைவேந்தர்கள் எல்லாம் கரார் ஒடுக்குமுறை செய்வதை பார்த்தால் உடனே புரிகிறது, திரு ஈ வே ரா, உண்மையிலேயே தன் காலத்தை மிஞ்சிய மஹா முற்போக்குசிந்தனையாளர் தான்.
இந்த பெரிய மனிதருக்கு இன்றைய எல்லா பெண்களும் நன்றி சொல்லக்கடமை பட்டுள்ளோம், இன்று நாம் இந்த உயரதில் இருக்க காரணமே அவர் தான். பெண்களை அடக்குமுறை படுத்த முயலும் சாமான்ய ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் மேம்பாட்டிற்காக் போராடினாரே, அவர் தான் பெரியார். எப்பேற்பட்ட பெரியார்!

செவ்வாய், 17 மே, 2011

திருநங்கைகளின் உலகம்- லிவிங் ஸ்மைல் வித்யா

ன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால், அரை குறையாகச் சேலை கட்டி, கரகரக் குரலில் 'மாமா... மாமா...’ என்று பாலியல் இச்சையோடு கும்மி அடிக்கும் கோமாளிகள்!

திருநங்கைகள் / திருநம்பிகள் யார் என்றும், அடிப்படையில் அவர்கள் ஏன் இப்படி மாறினர் என்பதன் காரணம் பலருக்குத் தெரியாது என்பதுதான் நாங்கள் கேலியாகப் பார்க்கப்படுவதன் காரணம். 'கருவறையில் ஓர் உயிர் ஜனிக்கும்போது முதலில் அது பெண் குழந்தையாகவே உருவாகிறது. ஆறு வாரங்கள் கழித்தே, அதன் நிரந்தரப் பாலின அடையாளத்தை இயற்கை தீர்மானிக்கிறது. அந்தக் குழந்தை நிரந்தரமாகப் பெண்ணாகவே இருக்கும்பட்சத்தில், அதன் உடற்கூறுகளும் மனக்கூறுகளும் அப்படியே எந்த மாற்றமும் இன்றித் தொடரும். அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கும். அதன் உடற்கூறும் மனக்கூறும் ஆணாக மாற்றம் அடையும் பட்சத்தில், அது ஆண் குழந்தை ஆகிறது. எதிர்காலத்தில் ஆண் தன் குழந்தைக்குப் பாலூட்டப்போவது இல்லை என்றாலும், அவனுக்குப் பயன்படாத, முதிர்ச்சியடையாத மார்புக் காம்புகள் இருப்பதே அவன் ஒரு காலத்தில் பெண்ணாகவே இருந்தான் என்பதற்கு ஆதாரம்.

பெண்ணில் இருந்து ஆணாக உடற்கூறு மாற்றம்கொள்ளும் வேளையில், மனக்கூறும் அதேபோல ஆணாக மாற வேண்டும். பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு இப்படியான மாற்றம் நிகழ்ந்துவிடும். ஆனால்,இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மனரீதியான மாற்றம் நிகழாமல், உடல் மட்டுமே மாற்றம் அடைந்துவிடுவது உண்டு. முறையான மாற்றம் இன்றிப் பிறக்கும் குழந்தை, உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவுமே பிறக்கிறது. உலகம் இவர்களின் தோற்றத்தை வைத்து ஆணாகப் பார்க்க, இந்தக் குழந்தை களோ, தங்களைப் பெண்ணாகவே உணர்வார் கள். இவர்களே... திருநங்கைகள். இதன் நேர் எதிர்த் தன்மையோடு பிறக்கும் குழந்தைகள்... திருநம்பிகள். (நன்றி: டாக்டர் ஷாலினி)
தான் யார், என்ன என்பதை நிதானித்து உணர்ந்துகொள்ளும் வயதில், அந்தக் குழந்தையின் மனதில் தோன்றும் குழப்பங்களையும், சக மனிதர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் வசைமொழிகள் தரும் வலியையும் உங்களால் உணரவே முடியாது.

வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த திருநங்கையை ஒருமுறை வகுப்பில் உலோகம், அலோகம் பற்றி பாடம் நடத்திய ஆசிரியர், 'இவனைப் பாருங்க, இவன் உலோகமும் இல்ல... அலோகமும் இல்ல. ரெண்டும் கெட்டான்!’ என்று கிண்டலடிக்க, அதைத் தொடர்ந்து சக மாணவர்களின் கேலிப் பேச்சு கூடியதில், பத்தாம் வகுப்போடு அன்று அந்தத் திருநங்கையின் கல்வி முடிந்துபோன துயரத்தை உங்களில் எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடியும்?

இப்படி வெவ்வேறு கசப்பான அனுபவங்களால் பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கையில் இருந்து கல்வி தூர எறியப்பட்டதை எந்த சினிமா வித்தகர்களும் உங்களுக்குக் காட்டப்போவது இல்லை.

வீதிகளைப்போலவே, சொந்த வீட்டுக்குள்ளும் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும்... திருநங்கைகள் வேண்டாத பிள்ளையாக, குடும்பத்துக்கு அவமானச் சின்னமாக வெறுத்து ஒதுக்கப் படுகிறார்கள். படிப்பு இல்லை என்றான பிறகு, வேலைக்குச் செல்லும் இடத்தில் முதலாளி முதல் வாடிக்கையாளர் வரை பலரது வசைக்கும் கேலிக்கும் ஆளாகிறார்கள். அதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கும் பலியாகிறார்கள். நாளடைவில் இறுகிப் போகும் மனது, இனி வேலைக்குப்போய் சம்பாதிக்க நினைப் பது முட்டாள்தனம் என்ற முடிவுக்கு வருகிறது.

வீட்டில், பள்ளியில், பணியிடத்தில் எனத் தான் புழங்கும் இடங்கள் எங்கும், அன்பு, மனிதம், மாண்பு என்ற பதங்கள் மறந்துபோன உலகத்தையே எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த உலகில் கேலி, வசை, வன்முறை போன்ற கொடூரங்களே இருக்கின்றன. அவளை அரவணைக்கும் ஒரே இடமாக இருப்பது மற்ற திருநங்கைகள் கூட்டமாக வாழும் பகுதி மட்டுமே. அவர் களோடு இந்த வெயில் தேசத்தில் நாசூக்காக மறைக்கப்பட்ட பனித் திரையில் அவள் மறைந்து கொள்கிறாள். குறைந்தபட்சம் திருநங்கைகளுக்குக் கிடைக்கும் இந்தக் கூடாரமும் திருநம்பிகளுக்கு வாய்ப்பது இல்லை!
இனி, இந்த உலகத்தில் உயிர் பிழைக்க நாகரிகமான வழிமுறை ஏதும் திருநங்கைகளுக்குக் கிடையாது. ஓர் ஆண் அல்லது பெண்... மருத்துவராகவோ, இன்ஜினீயராகவோ, ஆசிரியராகவோ, மாவட்ட ஆட்சித் தலைவராகவோ அல்லது குமாஸ்தாவாகவோ, அலுவலக உதவியாளராகவோ வாழ விரும்பினால்... அதற்கான அடிப்படை வாய்ப்புகள் இங்கு அனைவருக்கும் உண்டு. ஆனால், தன் வயிற்றைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சராசரி குடிமகனுக்கு உள்ள அத்தனை நிகழ்தகவுச் சாத்தியங்களும் திருநங்கைகளுக்கு, அவர்களின் பாலியல் அடையாளத்தால் முழுவதுமாக மறுக்கப்படுவது என்ன நியாயம்?

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடவும், பிச்சையெடுக்கவும் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இந்தச் சமூகமும் மறைமுகமாக அதையேதான் விரும்புகிறது என்பதுதான் கசப்பான நிதர்சனம்.

எனக்குத் தெரிந்த திருநங்கை ஒருவர், தினமும் ரயிலில் பிச்சையெடுத்து வந்தார். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு நாமும் கௌரவமாக வாழலாம் என்று நினைத்து, கீ செயின், மொபைல் கவர், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையில் இறங்கினார். அவர் பிச்சையெடுத்தபோது, பலரது ஏச்சுக்கும் சிரிப் புக்கும் மத்தியில், பயந்தோ, பரிதாபப்பட்டோ சிலர் பிச்சையிட்ட அதே ரயிலில்... 'குடுத்தா வெச்சிருக்கே? நீ கேட்டதும் எடுத்து நீட்டுறதுக்கு!’ எனப் பலர் சலித்துக்கொண்ட அதே ரயிலில்... 'கை கால் நல்லாத்தானே இருக்கு. உழைச்சுத் திங்க வேண்டியதுதானே!’ என எத்தனையோ முறை 'திடீர்’ மகான்களின் பொன்மொழிகள் உதிர்க்கப் பட்ட அதே ரயிலில்தான்... அன்று அவர்வியாபாரம் செய்தார். பிச்சையெடுத்தபோது கேலி கிண்டல்கள் கடந்து குறைந்தபட்சம் வருமானமாவது கிடைத்த அவருக்கு... நாள் முழுக்க வியாபாரம் செய்தபோது மிஞ்சியது வெறும் அருவருப்பான கேலிச் சிரிப்பு கள் மட்டுமே. ஒருவரும் அவரிடம் இருந்து சின்ன கீ செயின் வாங்கக்கூட முன்வரவில்லை.

ஆண் உடையில் வளைய வரும்போது அவளை மீறி எழும் பெண் தன்மையால் பலரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில் அது முடியாதபோது, வெளிப்படையாகத் தன்னைத் திருநங்கை என்றே அறிவித்துப் பணியாற்ற விரும்பினாலும்... யாரும் வேலை தர முன்வருவது இல்லை. ஒரு சிலர், 'உங்களுக்கு வேலை தருவதில் எங்க ளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், உடன் வேலை செய்யும் மத்த ஸ்டாஃப் எப்பிடி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை... ஸாரி!’ என்று மழுப்பி நழுவுவது உண்டு.

முதுகலை படிப்பு முடித்த திருநங்கை ஒருவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆரம்பத்தில் ஆண் அடையாளத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தன்னைத் திருநங்கை என்று வெளிப்படையாகக் கூறி, பால் மாற்று சிகிச்சையும் மேற்கொண்டார். ஆனால், பெண்ணாக மாறிய பின், அதே நிறுவனத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. தனது வீட்டில் இருந்து பெண் உடையில் வெளிவரும் அவர், பேருந்தில் பயணித்து அலுவலக நிறுத்தம் வரை பெண்ணாகச் சென்று, அங்கே இருக்கும் கோயில் ஒன்றில் கைப்பையில் மறைத்துவைத்து இருக்கும் ஆண் உடைக்கு மாறி, ஆண் அடையாளத்துடன்தான் அலுவலகத்துக்குள் நுழைய முடியும். இதனால் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல் களுக்குப் பிறகு, அவர் வேலையைவிட்டு விலக வேண்டிவந்தது!  
ஆனால், அவர் அளவுக்குப் பொறுப்புடன் பணியாற்ற வேறு நபர் கிடைக்காத நிலையில், சில மாதங்களில் அவரையே மீண்டும் அங்கு பணியமர்த்தினர். அதன் பின் அவர் பெண்ணாக, பெண் அடையாளத்துடன் அலுவலகம் சென்று வருகிறார் இன்று வரை. ஆண், பெண்ணுக்கு உரிய அதே திறமையும் வல்லமையும் இருந்தாலும், திருநங்கைகளின் திறமையைக் கவனத்தில்கொள்ளாமல், அவர் திருநங்கை என்பதற்காகவே அவர்களை விலக்கிவைப்பது ஜனநாயக நாட்டில் நிலவும் இன்னொரு தீண்டாமைக் கொடுமை அல்லவா?

ஆனால், உங்களுக்கு அந்தக் கவலை எதுவும் கிடையாது. உங்களை நோக்கிக் கை தட்டி, சற்றுக் களேபரத்துடன் கை நீட்டி வரும் திருநங்கைகள் மட்டும் தான் அவமானமாகத் தெரிகிறார்கள். திருநங்கைகளைத் தவிர, இந்த நாடு முழுவதும் உள்ள எல்லா ஆணும் பெண்ணும்... புத்தன், இயேசு, காந்தி, அன்னை தெரசா என்று உங்களால் கூற முடியுமா? நல்ல படிப்பும், குடும்பச் சூழலும் இன்ன பிற சகல அங்கீகாரங்களும் கிடைத்தபோதும், ஊழல், லஞ்சம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு, தீண்டாமை, ஆள் கடத்தல் என சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் யார்?

என்றோ ஒருநாள் எதிர்ப்படும்போது, கை நீட்டி யாசகம் கேட்கும் திருநங்கைகளை நீங்கள் இவ்வளவு வெறுக்கிறீர்கள். ஆனால், அநீதியான இந்தச் சமூகம் புறக்கணித்ததன் விளைவால், காலந்தோறும் கை ஏந்தி நிற்க வேண்டிய அவலத்துக்காக, இந்தச் சமூகத்தை அவர்கள் எவ்வளவு வெறுக்க வேண்டும்?

சில நண்பர்கள் என்னிடம், 'திருநங்கைகள் பாவம்தான். அவர்கள் பிச்சையெடுப்பது இருக்கட்டும். ஆனால், அதைக் கொஞ்சம் கண்ணியமாகவாவது கேட்கலாமே! கலவரமூட்டும் தொனியில், அநாகரிகமான முறையில் பொது இடங்களில் அவர்கள் நடந்துகொள்வது அருவருப்பாக உள்ளதே!’ என்று ஆதங் கப்படுவது உண்டு. இது ஒரு பக்கம் இருக்கட்டும்... நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள்,பொது இடத்தில் நிஜமாகவே நாகரிகமாகத்தான் நடந்துகொள்கிறீர்களா? சாலை நெரிசலில் பொறுமையின்றி விதிகளை மீறுவதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும், ஓவர் டேக் செய்வதும் எப்படி நாகரிகமாக முடியும்? பொது இடத்தில், பொதுச் சொத்துக்கு மதிப்பு தரும் பக்குவம் இல்லாத ஒரு சமூகம், அந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களிடம் மட்டும் நாகரிகம் எதிர்பார்ப்பது எவ்வளவு சுயநலமானது? இதற்காக, அவர்கள் அநாகரிகமாக நடக்கட்டுமே என்று நான் கூறவில்லை. ஏனெனில், இந்த அநாகரிகம்தான் ஒரு வகையில் அவர்களுக்குப் பொது இடத்தில் பாதுகாப்பு தருகிறது. பொதுப் புத்தியில் உறைந்துபோயுள்ள நாகரிக மதிப்பீடுகளுடன் உள்ளவர்கள் ஏவிவிடும் சொல் வன்முறையைக்கூட ஒரு திருநங்கையால் தாங்கிக்கொள்ள முடியும். உடல் வன்முறையைத் தாங்க முடியாது!

யாராலும் இப்படி வன்முறைக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு திருநங்கைகளுக்கு இங்கு மிக அதிகம். அப்படி வன்முறைக்கு ஆளாகும்போது, யாரும் வேடிக்கை பார்ப்பார்களேயன்றி, தடுத்து நிறுத்தப்போவது இல்லை. ஆனால், அந்தத் திருநங்கையோ சற்று மிரட்டலான தொனியில் மற்றவருக்குப் பீதி ஏற்படும் வகையில் இருந்தால்தான், அவளுக்குப் பாதுகாப்பு! திருநங்கைகளை ஏதோ சமூகப் பொறுப்பற்ற விட்டேத்திகளாகவே சமூகம் புரிந்துகொண்டு இருக்கிறது. ஆனால், பெரும்பாலான திருநங்கைகள் சம்பாதிப்பதே தங்கள் குடும்பத்துக்காகத்தான் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தான் பிச்சையெடுத்த வருமானத்தில், பாலியல் தொழில் செய்த வருமானத்தில், தன் குடும்பத்துக்கு வீடு கட்டித் தந்த, கடன் அடைத்த, தன் சகோதர - சகோதரி களுக்குத் திருமணம் செய்துவைத்த திருநங்கைகளை நீங்கள் அறிவீர்களா? தன் சகோதர-சகோதரிகளால் கை விடப்பட்ட தாய், தந்தையரை தன்னுடன் வைத்துப் பாதுகாக்கும் பல திருநங்கைகளை நான் அறிவேன்!

ஆரம்பத்தில் குடும்பம், திருநங்கைகளை ஏற்க மறுத்தாலும்... ஒரு கட்டத்துக்கு மேல் மனதளவில் அவர்களை ஏற்றுக்கொள்ளவே செய்கிறது. அதில் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்று வருவது உண்டு. சிலர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதும் உண்டு. எப்போதாவது குடும்பத்துடன் தங்கும் திருநங்கைகள், மாதா மாதம் தவறாமல் பெருந் தொகையை வீட்டுக்கு அளிக்கிறார்கள். மற்ற விசேஷ காலங்களில் ஏற்படும் பெரும் செலவையும் அவர்களே ஏற்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து வாழும் திருநங்கைகளின் குடும்பம் பெரும்பாலும் 80-களில் வெளியான பாலசந்தர் படக் குடும்பங்களைப்போலவே இருக்கும். திருநங்கைகள், அந்தப் பட நாயகிகளைப்போல குடும்பத்தையே தாங்கும் தூண்களாக இருப்பர்.

அப்படி ஒரு நாயகியிடம் ஒருமுறை, 'எப்படி உன் அம்மா நீ பாலியல் தொழில் செய்வதை ஏற்றுக் கொள்கிறார்?’ என்று கேட்டபோது, 'நீ இப்படிக் கேட்கிறாய். ஆனால், என் அம்மாவோ தினம் இவ்வளவு ரூபா கொடுத்துத்தான் ஆகணும் என்கிறார்’ என்றாள் வெற்றுக் குரலில்! இன்று இப்படி ஒரு தாயை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. தனக்கென ஒரு குடும்பமோ, வாரிசோ இல்லாத திருநங்கைகளுக்குக் குறைந்த பட்சம் தன் தாய் வீட்டு உறவுகள் தேவைப்படுகிறது. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை... பணம்!

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் திருநங்கைகளிடம் சற்று கரிசனத்துடன் செயல்படுவது நிஜம். திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, இலவச பால் மாற்று அறுவை சிகிச்சை, இவற்றோடு தனி நல வாரியம் அமைத்தது எனப் பல முதல் கட்ட மாற்றங்கள் இங்கு நிகழ்ந்து உள்ளன.ஆனால், கண்ணியமான முறையில் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத வரை, அவர்களால் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இயல்பான சக மனிதர்களாக வாழ முடியாது. கணினியில் இளங்கலைப் பட்டமும் கூடுதல் பணித் தகுதியும்கொண்ட திருநங்கை ஒருவர், திருநங்கை நல வாரியத்தில் வேலைவாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. 'வேலைக்குப் பதிலாக, ஒரு கணினி வேண்டும் என விண்ணப்பித்தால், அதனை நல வாரியம் பரிசீலிக்கும்’ என்றாராம் ஓர் அதிகாரி. தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஏழு மாதங்கள் அவர் காத்திருந்தார். ஆனால், 'அப்படி எல்லாம் தனி நபர்களுக்கு உதவ முடியாது’ என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுதான் மிச்சம். அவர் களைப் பொறுத்த வரை, தையல் கலை தெரியாத 10 திருநங்கைகளுக்கு தையல் மெஷின்கள் கொடுத்துப் பத்திரிகைகளில் செய்தி வருவதோடு, நல வாரியத் தின் பணி முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆக்கபூர்வமான நலத் திட்டங்கள் எதுவும் இன்றி, வெறும் கண் துடைப்புக்காகச் செய்யப்படும் எதுவும் திருநங்கைகளின் வாழ்க்கையை மாற்றாது.

திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்காத வரை... திருநங்கைகளை அச்சத்துடனும் அந்நியமாகவும் கண்ணில் விழுந்த துரும்புகளாகவுமே இந்தச் சமூகம் எதிர்கொள்ளும்! உங்கள் பக்கத்து இருக்கையில், ஓர் ஆணோ, பெண்ணோ அமர்ந்து இருந்தால், எப்படி உங்களுக்கு எந்தச் சலனத்தையும் பாதிப்பையும் அது ஏற்படுத்தாதோ, அப்படி ஒரு சக பயணியாக வாழ்க்கைப் பயணத்தில் திருநங்கைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தையேனும் இப்போதைக்குச் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது!