ஞாயிறு, 30 மார்ச், 2014

மனதை மீட்டும் மலரும் நினைவுகள்...!!!!!

கோடைகாலம் வந்தாலே ஒரே கும்மாளம் தான் . ஊருக்கு போவதற்கு சகல ஆயத்தங்களோடு மூட்டை முடிச்சுகளோடு எங்கள் பாட்டி ஊருக்கு கிளம்பிவிடுவோம். அப்பாடா ஒரு வழியாக பஸ்ஸில் ஏறியாச்சு.முதலில் திருமங்கலம், அடுத்து கல்லுபட்டி, அடுத்து எங்கள் ஊர்தான்...ஹையா, கிருஷ்ணன்கோவில் வந்தாச்சு என்று குதியாட்டத்தோடு இறங்குவோம்......இறங்கியதும் கோடை வெயில் முகத்தில் அறையும்..அதையும் மீறி மனது குதூகலிக்கும். அங்கு இருக்கும் ஒற்றைமர நிழலில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்துகொள்ள ஆளுக்கு ஒரு தம்ளர் நன்னாரி சர்பத் குடிப்போம். ஆச்சு...இனி மெல்ல நடைய கட்டுவோம்...இரு மருங்கிலும் வயல்வெளிகளில் துவரைக் கொடியையும், தென்னைமர அணிவரிசையையும் , பார்த்துக் கொண்டே துள்ளி நடை போடுவோம்...வயக்காட்டுல இருந்து எங்களைப் பார்ப்பவர்கள் தலை உயர்த்தி நலம் விசாரிப்பார்கள்...'இளநீர் குடிக்கிறீங்களா ....கம்மங்கருது அறுத்து தரவா 'என அன்பாய் விசாரிப்பர்.

அந்த வெள்ளந்தியான அன்பில் மனம் நனையும்.....அதோடு காவால வயக்காட்டுக்கு பாய்ச்சும் நீரில் காலும் நனையும்...ஆஹா அப்படியே வெயில் மண்டையில் உரைப்பது கூட தெரியாமல்

வீடு போய்ச் சேருவோம்.

காலையில் எழுந்தவுடன் கருப்பட்டி காபி குடித்துவிட்டு ஆளுக்கு கையில் ஒரு விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு 18 அறைகள் கொண்ட அந்த வீட்டை ஆளுக்கு மூன்று அறைகள் என பிரித்துக் கொண்டு பெருக்குவோம். முடித்ததும் எங்கள் கையில் மூங்கில் கூடையைக் கொடுத்து பிஞ்சைல மிதுக்கம்பழம் பறிக்கச் சொல்லுவாங்க பாட்டி. தட்டாம் பயிறு ஊடாக வளர்ந்து இருக்கும் மிதுக்கம் பழக் கொடியைத் தூக்கி அந்த பழத்தைக் கண்டுபிடித்து பறிப்பது அலாதி சுகம்.

ஆயிற்று, வேலை முடித்து வந்த உடன் பாட்டி எல்லாருக்கும் கேப்ப ரொட்டி சுட்டுத் தருவாங்க. சாப்பிட்டதும் தண்ணி பாச்சறதுக்கு எப்போ மோட்டார் போடுவாங்க ன்னு பார்த்துட்டே இருப்போம். போட்டதும் உடனே வாளி , துணி ,சோப்பு சகிதம் கிணற்றடிக்கு கிளம்பி விடுவோம்.பம்புசெட்டுல கொட்டற தண்ணீல ஒரே குதியாட்டம் தான்.ஆளாளுக்கு தலையை பம்புசெட்டுல நீட்டி சிலிர்த்து கொள்ளுவோம். ஆசை தீர குளித்து முடித்ததும், வெளியில் வர மனசு வராது. கிணற்றுக்குள் இருக்கும் மண் படிக்கட்டுகள் வழியாக உள்ளே இறங்கி படிக்கட்டைப் பிடித்துக் கொண்டு காலை மட்டும் தண்ணீரில் நீட்டி பொய் நீச்சல் அடிப்போம்.

கிணற்றில் ஊறிய தவளைகளாக நன்றாக குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தால், பசி வயிறைக் கிள்ளும்...பாட்டி சோறாக்கி வச்சு இருப்பாங்க. ஒரு விடக் கோழிய பிடிச்சு தண்ணியா ஒரு கோழி கொழம்பும் கூடவே...ஆஹா.சப்புக் கொட்டி சாப்பிட்டு விட்டு அந்தப் பெரிய ஹாலில் ஒரேயொரு மின்விசிறியின் அடியில் எல்லாரும் படுத்துக்கொள்வோம் . அதை ஆன் பண்ணியதும் 'திடும்' என ஒரு சத்தம் வரும்..கூடவே சுகமான காற்றும்...

தூங்கி எழுந்ததும் நிலக்கடலையும், வெல்லமும் கொறிக்க கிடைக்கும்...கொறித்துக் முற்றத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, தலையில் புல்லுக்கட்டோடு வயக்காட்டுக்கு போய்ட்டு திரும்பும் தோழிகளை விளையாட அழைப்போம்.அவர்களும் சாப்ட்டு வீட்ல வேலைய முடிச்சுட்டு' டாண் ' ன்னு பொழுது கருக்க வந்துருவாங்க...

அப்புறம் என்ன ஆளுக்கு ஒரு மூங்கில் கட்டில வெளிய எடுத்து போட்டுக்கிட்டு ஊர் கத,உலக கத எல்லாம் பேசி விடிய விடிய சிரிப்போ ம்...நேரம் ஆனதும் தூக்கம் கண்ண சுத்த படுக்க போய்விடுவோம்....கட்டில்ல படுத்துட்டு மேல ஆகாயத்த பார்த்தா, எல்லா நட்சத்திரங்களும் நம்மகிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.

மறுநாள் பொழுதோட எந்திரிச்சுருவொம் ...வழக்கம் போல வீட்டப் பெருக்கிட்டு இலவம் பஞ்சு பிரிச்சு எடுத்துட்டு ,பிஞ்சைல தக்காளி.பச்சைமிளகாய் பறிச்சு பாட்டி கிட்ட கொடுத்துட்டு குளிக்கப் போயிருவோம்.

மதியானம் முன் ரூம்ல கட்டிலைப் போட்டுக்கிட்டு ஊர்ல இருந்து

 

கொண்டு வரும் சாண்டில்யன் கதைகள், அம்புலிமாமா கதைகள் எல்லாம் விழுந்து, விழுந்து படிப்போம்...சாண்டில்யக் கதைகளில் வரும் வர்ணனைகள் முதன் முதலாக இளம் ஆசைகளை மெதுவாக மனதுக்குள் விதைத்துச் செல்லும்...

கூடவே அந்தி சாயும் நேரத்தில் ஊருக்கு வெளியே இருக்கும் ரேடியோ ரூமில் அந்த ஊர் இளவட்டங்கள் போடும் இளையராஜாவின் பாடல்கள் மனதை வருடிவிட்டு செல்லும்.

மீண்டும் வருமா அந்த இளமையும், நினைவுகளும்?????