புதன், 26 ஜனவரி, 2011

நிறம் ஒரு பொருட்டல்ல....

கறுப்பைப் பரிகாசம் செய்வதும், அதை மதிப்பீட்டுக் குறைவுடன் அணுகுவதும் பன்னெடுங்காலமாக இருக்கும் விஷயம். அது விளையாட்டாக இருக்கும் வரை சரி. வேதனைப் படுத்தும் விதமாக அமைந்துவிட்டால், ஆபத்து.
நிறத்தின் மீதான பழக்கபடுத்தப்பட்ட பார்வை தனி மனிதனுக்குள் தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தி விடுகிறது. 'நிறம் ஒரு பொருட்டல்ல' என்று உணர்வதற்கு முன்பாகவே அது தொடர்பான கேலியும், கிண்டலும் சிலரை அவர்களை அறியாமலே ஒடுங்கிப் போகச் செய்து விடுகிறது. நாமும் அப்போதைய சந்தோஷத்திற்காக இந்தக் கிண்டல்களின் வீரியம் தெரியாமல் விளையாடி வருகிறோம்.
இன்றைக்கு கல்லூரிகளிலும்,  அலுவலகச் சூழலிலும் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக சிவப்பாக இல்லை என்றால் உன்னால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தாக்கம் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது.
வெள்ளை வெளேர் என்று இருக்கும் ஐரோப்பியர்கள் தோல் நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும், சூரிய ஒளி  படும்படி சன்பாத்  எடுத்துக் கொண்டு இருக்கையில், அத்தகைய சருமத்தை இயற்கையிலேயே பெற்று இருக்கிற நாம் சிவப்பாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். கருப்பு நிறத்தோல் அடர்த்தியானது,  இதில் மெலனின் அதிகமாக இருப்பதால் அது ஆரோக்கியமானதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்டதாகவும் இருக்கிறது என அறிவியல் உறுதி செய்திருக்கிறது.
இந்தத் தகவல் பலருக்கும் தெரியும்.  ஆனாலும், சிவப்பாக மாற வேண்டும் என்ற தாகம் யாருக்கும் தீரவில்லை. அந்தத் தாகம் அடங்கிவிடாமல் பன்னாட்டு அழகு சந்தை நிறுவனகள் பார்த்துக் கொள்கின்றன. உண்மையில் இன்றைய சூழலில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சிவப்பாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆரோக்கியம் பற்றிய பேச்செல்லாம் அப்புறம் தான்.
முதல் தலைமுறையாக நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கும் ஆண்-பெண் மத்தியில் இந்த உணர்வே மேலோங்கி இருக்கிறது. இதன் பின்னணியில் மிகப் பெரிய வியாபார தந்திரம் ஒளிந்திருக்கிறது.
பார்த்தவுடன் கவனிக்க வைக்கிற வசீகரம் என்பது ஒருவருக்கு கூடுதல் சிறப்பம்சம்தான். ஆனால் அந்த வசீகரம் நிறத்தால் நிர்ணயிக்கபடுவதும் அதை மற்றவர்கள் நம்புவதும் வருத்தம் அளிக்கிறது.
அழகுக்கும்,  நிறத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
 இருக்கிறது என்று முடிவு எடுத்துக்கொண்டவர்களால் இன்றைக்கு சமூகத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வேலை வாய்ப்பில்,திருமணத்தில், உறவு பேணுவதில், சலுகைகள் தரப்படுவதில் என அனைத்திலும் நிறம் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழ அதுவே காரணம்.
இந்த மனோபாவம், தேசத்தின் ஆற்றல் வெளிப்பாட்டுத் திறனையே கேள்விக்குறி ஆக்குகிறது.சக மனிதனை உண்மையாக நேசிக்கிற போதும், வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறபோதும் வெளிப்படுகிற அன்பைவிட அழகு வேறெதுவும் இல்லை.
அழகு என்று இலக்கணங்கள் வகுக்கபடுவது எல்லாம் அறியாமையின் வெளிப்பாடு, வியாபாரதந்திரங்களின் விபரீத புத்தி.
'அவரவர் நிறமே அவரவரின் அடையாளம்
அதுவே அவரின் அழகு.'

1 கருத்து: