ஞாயிறு, 17 அக்டோபர், 2010

"உங்களை எல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்க சொன்னது?"

கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமிருக்கிறதா? இருக்கிறது என்றே தோன்றுகிறது.ஆண்களுக்கு சில கேள்விகள் தோன்றுவதே  இல்லை.அதில் ஒன்று இந்த கேள்வி.பெரும்பாலும் பின்னிரவில்  வீடு திரும்பும் போது, பெண்களிடம் இந்தக் கேள்வி எழுகிறது.எந்தக் கணவனும் இதற்கான பதிலைச் சொல்லியதில்லை. யாவருக்கும் பொதுவான ஒரே பதில், மௌனம் மட்டுமே!
வீட்டைக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எல்லா ஆண்களுக்கும் பொதுவானது.அதில் பெரும்பகுதி உண்மை இருக்கவும் செய்கிறது.எங்கோ நடக்கும் கிரிக்கெட் போட்டி,இராக் யுத்தம் வரை அக்கறையாக கவனிக்கும் ஆண்களுக்கு தன் வீட்டில் நடப்பதை கவனிப்பதற்கு மட்டும் விருப்பமில்லாமல் போகிறது?
காரணம் வீடு என்பது அவனைப் பொறுத்த மட்டில் தன் சுதந்திரத்துக்கு தடை விதிக்க கூடியது.அது, பிரச்சினைகளின் விளை நிலம்.
 
கி.மு - கி.பி. என்பது போல பெண்களுக்கு தி.மு - தி.பி என வாழ்வு இரண்டாக பிரிக்கப் பட்டு இருக்கிறது.திருமணத்துக்கு முந்தைய பெண்ணின் வாழ்வும்,திருமணத்துக்கு பிந்தைய பெண்ணின் வாழ்வும் மிகுந்த வேறுபாடு கொண்டது. வீட்டிலிருந்து பெண் வெளியேறிப் போனாலும் பெண்ணிடமிருந்து வீடு எளிதில் வெளியேறுவதில்லை.
திருமண மண்டபங்களில் உதிர்ந்து கிடக்கும் பூவிதழ்களுடன் பெண்ணின்  கனவுகளும் உதிர்ந்து விடுகின்றன.
திருமண குறித்த கனவுகள் ஆணுக்கு ஒன்றாகவும்,பெண்ணுக்கு வேறு ஒன்றாகவும் இருக்கிறது.அது கலையத் துவங்கும் பொது ஆண் ஆத்திரம் கொள்பவனாகவும்,பெண் அடிவாங்குபவளாகவுமே இருக்கிறார்கள்.பெண்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்வை சகித்துக் கொள்வதும்,இருப்பதில் திருப்தி அடைவதும்,வேதனையை மனதிற்குள் புதைத்து விடுவதுமே,பல குடும்பங்கள் உடைந்து போகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது.
மாலை நேரங்களில் மின்சார ரயிலில் பயணம் செய்து வீடு திரும்புபவர்களைக் கவனித்து இருக்கிறேன்.ஒரே ரயிலில் தான் ஆணும்,பெண்ணும் பயணம் செய்கிறார்கள்.தன் வீட்டின் அருகில் உள்ள  ரயில் நிலையம் வந்ததும் ஒன்றாகத்தான் இறங்குகிறார்கள்.ஆனால்  ரயில் நிலையத்தை விட்டு வெளியே  வந்த ஆண்கள் ஆங்காங்கே நின்று tea  குடித்தபடியோ, சினிமா விளம்பரங்களை வேடிக்கை பார்த்தபடியோ,நண்பர்களுடன் அரட்டை அடித்தபடியோ நிற்கிறார்கள்.
பெண்களோ ரயில் நிலையத்தில் வெளியேறும் வாசலில் உள்ள காய்கறிக்கடைகளில் நின்று பேரம் பேசிக் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருப்பார்கள்.பல்லி தன் நாக்கை நீட்டி பூச்சியை கவ்வி இழுத்துக் கொள்வது போல, வீட்டை நெருங்குவதற்கு முன்பாக தன் நாக்கால் பெண்ணை கவ்வி இழுத்துக் கொள்கிறது வீடு.
 
இன்று அதிருப்திகளும்,அக்கறை இன்மையும் நம் வீடுகளை நீக்கமறப் பற்றி இருக்கின்றன. அநேகப் பெண்களின் மனக்குறைகளும்,ஆதங்கங்களும் அகற்றப் படுவதில்லை.எனவே தான் மனப்பாரத்தை இறக்க வேண்டி,ஒன்று கோவில் குளத்தை நாடிப்  போய் ஏமாறுகிறார்கள்.இல்லையேல் தவறான உறவுகளில் தடம் புரண்டு போகிறார்கள்.
வேலைச் சுமை, நகர நெருக்கடி,பொருளாதார நெருக்கடி என ஆயிரம் காரணங்கள் சொன்னபோதும்,ஒரே வீட்டில் ஆண்களும்,பெண்களும் வேறு வேறு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.சாப்பாட்டைப் போலவே பாலுறவும் தவிர்க்க முடியாத நிகழ்வாக முடிந்து போகிறதே அன்றி, அதில் ஆணோ,பெண்ணோ அக இன்பம் கொள்வதே இல்லை.
 
காக்கைக் கூட்டைப் பார்த்து இருக்கிறீர்களா? அது தன் கூட்டில் பகல் வேளைகளில் இருப்பதில்லை.அது பறந்து, திரிந்து  கிடைத்ததை சாப்பிட்டு,எப்போது வீடு திரும்புகிறது? எப்போது உறங்குகிறது என்று தெரியாது.அது தன் கூட்டை முட்களால்தான் கட்டுகிறது.ஆண்களுக்கு வீடு காக்கைக் கூடுதானா?

2 கருத்துகள்:

  1. //ஆண் ஆத்திரம் கொள்பவனாகவும்,பெண் அடிவாங்குபவளாகவுமே இருக்கிறார்கள்.பெண்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்வை சகித்துக் கொள்வதும்,இருப்பதில் திருப்தி அடைவதும்,வேதனையை மனதிற்குள் புதைத்து விடுவதுமே,பல குடும்பங்கள் உடைந்து போகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது.//

    இந்த விகிதாச்சாரம் மாறி வருகின்றது... இப்பொழுது எதற்கெடுத்தாலும் போலீஸ் ஸ்டெசன். டவுரி கேசுதான் தீர்வு என்று அங்கு ஓடி பணத்தையும் வாழ்கையும் இழப்பதால்... இன்னும் சில நாட்களில் நமது நாட்டில் குடும்ப அமைப்பு சிதறிவிடும்.

    பதிலளிநீக்கு
  2. //பெண்கள் தங்களுக்கு கிடைத்த வாழ்வை சகித்துக் கொள்வதும்,இருப்பதில் திருப்தி அடைவதும்,வேதனையை மனதிற்குள் புதைத்து விடுவதுமே,பல குடும்பங்கள் உடைந்து போகாமல் இருக்கக் காரணமாக இருக்கிறது//

    உண்​மைதான் ​மேடம்

    பதிலளிநீக்கு