செவ்வாய், 22 மார்ச், 2011

ஹும்ம்..அதெல்லாம் ஒரு காலம்!!!!!!!

கிராமத்துல 10 ஏக்கர் நஞ்சை...10  ஏக்கர் புஞ்சை...தென்னந்தோப்பு, பம்புசெட்டுன்னு இருந்ததெல்லாம் ஒரு காலம். அது மட்டும் இப்ப இருந்திருந்தா..கால நீட்டிகிட்டு உட்கார்ந்து சாப்பிடலாம். இப்படிதான் நம்மில் அநேகர் நினைக்கிறோம்.

உண்மையில் பார்க்கப்போனால்  உங்களிடம் இருந்தது எல்லாமே முந்தைய தலைமுறையின் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் வந்தது. அப்படி வந்த பொருட்கள் இல்லாமல் போனதால் நம்மிடம் இருந்த நம்பிக்கையையும், மன உறுதியையும் தொலைத்து விட்டோம்.இன்னொரு கோணத்தில் பார்த்தால் "காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம்"என்ற எண்ணத்தில் அடி விழுந்ததால் ஏற்பட்ட எரிச்சல் அது.

கார்ன் லூயி....ஒரு பெரிய மனவியல் ஆராய்ச்சிக்குப் பிறகு ஒன்று சொல்கிறார். இவர்கள் எல்லாம் தங்கள் சோம்பேறித்தனத்தை மறைக்கவும், உழைத்து ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததாலும்தங்களை தாங்களே இப்படி ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்கிறார்.

ஓய்வுக்கு பிறகு நிறையப் பேர் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று புலம்புவதற்கு காரணம்...அவர்களுக்கு இழந்ததின் மீது இருக்கிற ஈர்ப்புதான்.

அதனாலேயே ஓய்வுக்கு பிறகு பெற வேண்டிய உயரிய இடங்களையும் அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
அமெரிக்காவில் கர்னல்-சாண்டர்ஸ் என்கிற 65  வயதுத் தாத்தா ஓய்வு பெற்ற பிறகு தன்னிடமிருந்த  அம்மா உருவாக்கிய ரெசிபியை வைத்து தனது ஓய்வூதியப் பணத்தை கொண்டு சின்னதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் அவரது நிறுவனம் கொடி கட்டிப் பறக்கிறது. ஒரு மீசைக்கார தாத்தா படம் போட்ட KFC  கடைகளை பார்த்து இருப்பீர்கள்.அது இன்று உலகம் முழுவதும் பிரசித்தம்.

65  வயதுக்குப் பிறகு உலகம் அறியும் படி தன்னை உயர்த்திக் கொண்டது கர்னல்-சாண்டர்சின் சாதனை. அதற்கு காரணம் கண் முன்னே இருந்த வாய்ப்புகளை அவர் கவனித்தார்.

மூடிவிட்ட கதவுகளைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.

எனவே அமோகமாக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்காமல்..நடைமுறைக்கு வருவோம்.
சில விஷயங்களை விட்டால் தான் பல விஷயங்களைப் பெற முடியும். உங்களுக்கு குரங்கை எப்படிப் பிடிப்பார்கள் என்று தெரிந்து இருக்கலாம். ஒரு கையை கஷ்டப்பட்டு நுழைக்கிற  அளவுக்கு சிறிய வாய் கொண்ட கனமான பானைக்குள், குரங்குக்குப் பிடித்த பதார்த்தங்களைப் போட்டு விடுவார்கள்.

குரங்கு அந்த வாசனையை வைத்து அங்கு வரும். பெண்கள் வளையல் மாட்டுகிற ஸ்டைலில் கைகளை நேராக வைத்துக் கொண்டு  உள்ளே விடும். உள்ளே கிடைக்கிற பண்டங்களை எடுத்துக் கொண்டு கைகளை மூடும். இப்போது கை வெளியே வராது.

நீங்களும் அதைப் போல் கைகளை மூடிக்  கொண்டு பழம் பெருமை பேசி போராடாதீர்கள். உதறிவிட்டு வாருங்கள், உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது. அது உங்களின்  பழைய பிம்பங்களை  விட மேலானது...உயர்வானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக